வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தன்னிச்சையான முடிவுகளால் பெரிதும் பாதிக்கப்படுகின்றோம் எனத் தெரிவித்து இலங்கை போக்குவரத்துச் சபையின் வடபிராந்திய ஒன்றிணைந்த தொழிற்சங்கம் நாளை தொடக்கம் பணிப் புறக்கணிப்பில் குதிக்கப் போவதாக ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் தெரிவித்தார்.
|
"வவுனியா புதிய பேருந்து தரிப்பிட விவகாரம் தொடர்பில் வடபிராந்திய போக்குவரத்துச் சபை ஊழியர்கள் 6 பேர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் கடந்த 27ஆம் திகதி பொலிஸாரால் முற்படுத்தப்பட்டனர். இந்த விவகாரம் தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருடன் பேசி உரிய தீர்வைக் கண்டு மன்றுக்கு வரும் 3ஆம் திகதி அறிவிக்குமாறு வடபிராந்தி ஒன்றிணைத்த தொழிற்சங்கத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் நேற்றுமுன்தினம் கூட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுத்திருந்தார். இலங்கைப் போக்குவரத்துச் சபை அதிகாரிகள், தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள், வடக்கு மாகாண மாவட்ட ரீதியாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் உள்ளிட்டோரை அழைத்தார். அதில் கலந்து கொள்ள அழைப்பு கிடைக்காத போதும் போக்குவரத்துச் சபை அதிகாரிகளுடன் வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் முதலமைச்சர் தன்னிச்சையாகவும், அதிகார அதட்டல் போக்கையும் கடைப்பிடித்தார். வவுனியா பேருந்து நிலைய விவகாரத்தில் தொழிற்சங்கத்துக்கு இடமில்லை எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் முதலமைச்சருக்கு எதிராக வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் சுமார் 2 ஆயிரம் ஊழியர்களும் நாளை போராட்டத்தில் குதிக்கின்றனர். இத்றகு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம்" என்று ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தின் செயலாளர் க.அருள்பிரகாசம் மேலும் தெரிவித்தார்.
|
0 Comments