வடக்கு, கிழக்குக்குக் காணியுரிமை வழங்கப்படாது என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று இடைக்கால அறிக்கை குறித்த விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
|
“வரலாற்றில் இரண்டு சந்தர்ப்பங்களில், இலங்கையில் அரசமைப்புகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இந்த இரண்டு சந்தர்ப்பங்களிலும் தமிழ் கட்சிகளும் தமிழ் மக்களும் பங்கேற்றிருக்கவில்லை. முதல் தடவையாக நாம் அனைவரும் ஒன்றிணைந்து சட்டவாக்கத்தை மேற்கொள்ள முனைந்துள்ளோம். இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடக் கூடாது.
இந்த நாட்டில் மொழிப் பிரச்சினையே தனிநாட்டுக் கோரிக்கை வரை சென்றது. இந்தத் தவறை திருத்திக்கொள்ள இரண்டு தேசியக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. இலங்கையில் 30 சதவீதம் தமிழ் பேசும் மக்களும் 70 சதவீதம் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். தேசியப் பிரச்சினைகளை தீர்த்து முன்னோக்கிப் பயணிக்க வேண்டும். இடைக்கால அறிக்கை ஓர் இறுதிப்படுத்தப்பட்ட அரசமைப்பு அல்ல. சில ஊடகங்கள் இதனை இறுதிப்படுத்தப்பட்ட அறிக்கையாகச் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த தருணத்தில் 13ஆவது திருத்தச்சட்டத்தை தாண்டி அதிகாரப் பகிர்வை வழங்குவதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுக்கு வாக்குறுதியளித்திருந்தார். இந்தியாவை எதிர்த்து யுத்தத்தை கொண்டு செல்ல முடியாது என்பதன் அடிப்படையிலேயே மஹிந்த இவ்வாறு வாக்குறுதியளித்திருந்தார். ஆனால், இன்று அவர் புதிய அரசமைப்புக்கு எதிர்ப்பை வெளியிட்டு வருகிறார்.
வரலாற்றில் இரண்டு கட்சிகளும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் தேசிய பிரச்சினைக்கான தீர்வை எதிர்த்தே வந்தன. அதனை நாங்கள் வெளிப்படையாக ஏற்றுக்கொள்கின்றோம். தற்போது அனைவரும் ஒரே மேசையில் அமர்ந்து தீர்வுகாணும் சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. புதிய அரசமைப்பில் பௌத்த மதத்துக்கான முன்னுரிமை அவ்வாறே பேணப்படும். நாமும் பௌத்தர்கள்தான். பௌத்த மதத்துக்கான முன்னுரிமையை நாங்கள் ஒருபோதும் நீக்க மாட்டோம். அரசமைப்பு நீதிமன்றம் ஒன்று ஸ்தாபிக்கப்படும். ஒற்றையாட்சியின் கீழ் ஒருமித்த பிளவுப்படாத நாட்டுக்குள் அதிக பட்ச அதிகாரத்தை பகிர்ந்தளிப்பதே அரசின் நோக்கமாக உள்ளது.
மொழிப் பிரச்சினைக்கே தமிழர்கள் தீர்வைக் கோரியிருந்தனர். அதில் இருந்துதான் காலத்துக்கு காலம் இந்தப் பிரச்சினை தோற்றம் பெற்றது. தனிநாடு கோரிக்கை வரை தேசிய இனப்பிரச்சினை வலுப்பெற்றிருந்தது. தமிழர்கள் விடயத்தில் நாம் தவறிழைத்துள்ளோம். அதற்காக இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீர்த்துக்கொள்ள வேண்டும். தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணப்படும் போதுதான் இலங்கையின் தனித்துவம் பாதுகாக்கப்படும். இன,மதங்களை கடந்து இலங்கையர்களின் தனித்துவத்தை பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” எனத் தெரிவித்தார்.
|
0 Comments