புதிய அரசமைப்பை உருவாக்குவதிலும், தேர்தலை நடத்துவதிலும் இலங்கை அரசு தொடர்ந்தும் உறுதியற்ற போக்கைக் கடைப்பிடித்து இழுத்தடிப்புச் செய்தால், சர்வதேசத்தின் பொறிக்குள் மீண்டும் சிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று, கொழும்பிலுள்ள மேற்குலக இராஜதந்திரிகள், வெளிவிவகார அமைச்சுக்கு இராஜதந்திர மட்டத்தில் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|
சர்வதேச களத்தில் நல்லாட்சி அரசுக்கு கால அவகாசத்தைப் பெற்றுக்கொடுக்கும் விடயத்தில் முக்கிய பாத்திரத்தை வகித்த இராஜதந்திரிகளே இவ்வாறு எச்சரிக்கை விடுத்திருப்பதானது, அரசின் கொள்கை வகுப்பாளர்களையும், ஆலோசகர்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
ஜனநாயகத்தின் முக்கிய கருப்பொருளாக தேர்தலே கருதப்படுகின்றது. எனவே, அது உரிய காலத்தில் நடத்தப்பட வேண்டும். அவ்வாறில்லாவிட்டால் அது உரிமை மீறலாகவே பார்க்கப்படும். அத்துடன், ஆட்சிக்கு வந்த ஓராண்டுக்குள் புதிய அரசமைப்பு கொண்டு வரப்படும் என்று நல்லாட்சி அரசு உறுதியளித்திருந்தது. பொறுப்புக்கூறலும் வெளிப்படுத்தப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவை ஒன்றும் இன்னும் நடைபெறவில்லை. அரசின் செயன்முறையானது அதே பாணியில் பயணிக்குமானால் மீண்டும் நெருக்கடிதான் ஏற்படும் என்று மேற்குலக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசானது, மேற்குலக நாடுகளுடன் சிறந்த நட்புறவை பேணவில்லை. இதனால், சர்வதேச மட்டத்தில் பெரும் நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டது. சர்வதேச மனித உரிமை அமைப்புகளும் பெரும் தலையிடி கொடுத்தன. பொறுப்புக்கூறும் கடப்பாட்டை வெளிப்படுத்தல், தேர்தலை நடத்தல் உள்ளிட்ட விடயங்களில் அசமந்தப்போக்கைக் கடைப்பிடித்து வந்ததாலேயே மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிகாலத்தில் இலங்கைக்கு எதிராக ஜெனிவா கூட்டத்தொடரில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், சில நாடுகளும் பொருளாதார மட்டத்திலான தடைகளை விதிக்கத் தயாராகின. இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகளும் மட்டுப்படுத்தப்பட்டன. ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கும், பொறுப்புக்கூறுவதற்கும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான தீர்வுப்பொதியாக புதிய அரசமைப்பு அமையும் என்றும் மைத்திரி, ரணில் தலைமையிலான தேசிய அரசு உறுதியளித்திருந்தது.
இதையடுத்து இலங்கை மீதான பிடியை சர்வதேசம் தளர்த்திக்கொண்டு நெகிழ்வுப்போக்கைக் கடைப்பிடித்தது. இலங்கை மீதான சில தடைகளும் நீக்கப்பட்டன. ஆனால், வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசு முன்னேற்றம் காட்டவில்லை. ஈராண்டுகள் கடந்தும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வழங்கப்பட்டிருந்த வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வெளிநாட்டுப் பிரமுகர்களும், ஐ.நா. அறிக்கையாளர்களும் இந்த விடயத்தைப் பகிரங்கமாகவே குறிப்பிட்டிருந்தனர். அத்துடன், புதிய அரசமைப்புக்கு எதிர்ப்புகள் வலுத்துள்ளன. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே இலங்கை அரசு இனியும் ஆமை வேகத்தில் பயணிக்குமானால் சர்வதேச நாடுகள் வழங்கிவரும் பொருளாதார, அரசியல் ரீதியான ஒத்துழைப்புகளை இழக்க நேரிடும் என்றும், நேரடி வெளிநாட்டு முதலீட்டிலும், சுற்றுலாத்துறையிலும் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தமக்கு மேலும் கால அவகாசம் தேவைப்படுகின்றது என்றும், வழங்கப்பட்ட உறுதிமொழிகள் நிறைவேற்றப்படும் என்றும் வெளிவிவகார அமைச்சின் சார்பில் மேற்படி இராஜதந்திரிகளுக்கு பதிலளிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
|
0 Comments