Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இனப்பிரச்சனைக்கான தீர்வும் அரசியல் தலைமைகளும்

தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் என்பது பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமாக சித்தரிக்கப்பட்டு சர்வதேச சமூகத்தின் கண்களில் மண்ணைத்தூவி இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்புடன் ஆயுதப் போராட்டத்தை மௌனிக்கச் செய்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கச் செய்யப்பட்டு 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் கூட தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அரசியல் தீர்வை எட்டமுடியாமல் இருப்பது இந்த நாட்டின் துரதிஸ்டமே.
போர் வெற்றிவாதத்தில் மிதந்த மஹிந்த ராஜபக்சவால் சர்வதேசத்திற்கு வழங்கிய உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையே ஆட்சி மாற்றத்திற்கு பிரதான காரணமாகவும் இருந்தது. 2015 மற்றும் 2017 ஆம் ஆண்டில் ஐ.நா மனிதவுரிமை பேரவையில் புதிதாக உருவாக்கப்பட்ட மைத்திரி- ரணில் அரசாங்கத்திற்கு நெருக்கடிகளைக் குறைத்து யுத்தக் குற்றங்கள், மனிதவுரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் சர்வதேசம் தரத்திற்கு ஏற்ப விசாரணை நடத்துவதற்கு காலஅவகாசமும் வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியிருக்கின்றது. இதில் நிலைமாறுகால நீதிக்கான பொறிமுறையாக உண்மையை கண்டறிதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்குதல், பொறுப்புக் கூறல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்தல் என்னும் நான்கு விடயங்கள் கொண்டுவரப்பட்டன. மாதங்கள் பல கடந்தும் இந்த நான்கையும் இலங்கை அரசாங்கம் இதயசுத்தியுடன் முன்னெடுக்கவில்லை என்று தற்போது சர்வதேச சமூகமும், ஐ.நாவும் தமது கவலைகளை வெளியிட்டுள்ளன.
இலங்கை அரசாங்கம் விரும்பியோ, விரும்பாமலோ ஒரு அரசியல் தீர்வை முன்வைக்க வேண்டிய இக்கட்டான சூழலில் இருக்கிறது. இருப்பினும், இனப்பிரச்சனைக்கான நிரந்தர தீர்வை முன்வைத்தால் அது தமது வாக்கு வங்கியை பாதிக்கும் என்று சிங்கள மக்களை பிரதிநிதிதுவப்படுத்தும் இரண்டு பிரதான கட்சிகளும் அஞ்சுகின்றன. சர்வதேச சமூகத்தின் நெருக்கடிகளில் இருந்து தப்புவதற்கும், தீர்வை வழங்காமல் காலத்தை நீடிப்பதற்கும் ஆட்சியாளர்கள் பல்வேறு யுக்திகளை கையாள்வதாக நாட்டின் சகல தரப்பைச் சேர்ந்த புத்திஜீவிகளும், சமூக ஆர்வலர்களும் சுட்டிக்காட்டுகின்றனர்.
பாதுகாப்பு தரப்பினருக்கு இடையில் இருக்கக் கூடிய முரண்பாடுகள் பொதுவாக பகிரங்கப்படுத்தப்படுவதில்லை. ஆனால் இலங்கையில் அரசியல் கட்சிகளைப் போன்று பாதுகாப்பு தரப்பினர் பொது அரங்கில் விவாதம் நடத்துகின்றனர். இவர்களுடைய விவாதங்களில் இருந்து தமிழ் மக்களுக்கு ஏதோவொரு வகையில் அநீதி இழைக்கப்பட்டிருக்கின்றது என்பது வெளிப்படையாக தெரிகிறது. அந்த அநீதிக்கான நீதியையே தமிழ் மக்கள் கோருகின்றனர் என்பதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. ஒட்டுமொத்த்தில் பாதுகாப்பு தரப்பினரிடமும் ஒரு உண்மையான தேசப்பற்றை பார்க்க முடியவில்லை.
ஐ.நா தீர்மானத்திற்கு அமைவாக மீள் நிகழாமையை உறுதிப் படுத்தும் பொருட்டு புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழ் மக்களுக்கு ஒரு நியாயமான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று மைத்திரி – ரணில் கூட்டரசாங்கம் சர்வதேசத்திற்கு வாக்குறுதியளித்திருந்தது. அதனை உருவாக்குவதற்காக ஒரு வழிநடத்தல் குழுவையும் அமைத்து அதற்கு உதவி செய்வதற்காக ஆறு உபகுழுக்களையும் நியமித்து இருந்தது. உபகுழுக்களின் அறிக்கை கடந்த வருடம் கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து வழிநடத்தல் குழுவின் அறிக்கையும் கடந்த ஆண்டு டிசம்பருக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அந்த அறிக்கை இன்றுவரை சமர்ப்பிக்கப்படாமல் இழுபறியில் உள்ளது. இந்த மாதத்தின் இறுதிப் பகுதியில் வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அரசியல் யாப்பில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை ஒரு யோசனைத் திட்டத்தை கையளித்திருந்தது. தற்போது அந்த அரசியலமைப்பில் தமிழ் மக்களது நியாயபூர்வமான அபிலாசைகள் உள்வாங்கப்படாத நிலையில் அந்த அரசியலமைப்பை எதிர்கொள்வது தொடர்பில் அரசியல் விழிப்புணர்வையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூட்டமைப்பைப் பொறுத்தவரையில் புதிய அரசியலமைப்பு மற்றும் தீர்வுத் திட்டம் தொடர்பில் எத்தகைய நிலைப்பாடு எடுத்திருக்கின்றது என்பது குறித்து ஒரு தெளிவற்ற நிலையில் இருக்கின்றது. அவ்வப்போது கூட்டமைப்பின் தலைவரும், தமிழரசுக் கட்சியின் ஊடகபட்பேச்சாளரும் வடக்கு – கிழக்கு இணைப்பு தற்போது சாத்தியம் இல்லை என்றும், பௌத்தர்கள் பெரும்பான்மையாக இருப்பதனால் பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிப்பதில் தவறில்லை எனவும், சமஸ்டியாட்சியா அல்லது ஒற்றையாட்சியா என்ற சொற்பதங்களில் தங்கியிருக்காமல் கிடைக்கின்ற அதிகாரத்தைப் பெற்றுக் கொள்வதே தற்போது சிறந்த வழி என்றும் மேடைகளிலும், ஊடகங்கள் வாயிலாகவும் தெரிவித்து வருகின்றனர். தமது வாக்குப்பலத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் இந்தக் கருத்துக்கள் தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தப் பின்னனியிலேயே தமிழ் மக்கள் பேரவையினுடைய புதிய அரசியலமைப்பை எதிர்கொள்வது எப்படி என்ற பொதுக்கூட்டமும் நடைபெற்றுள்ளது. தமிழ் தேசிய இனம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவதை தடுக்கும் நோக்கில் ஒரு பிரகடனமும் அதில் செய்யப்பட்டுள்ளது. அந்தப் பிரகடனத்தில் வடக்கு- கிழப்பு இணைப்பு என்பதும், சமஸ்டி முறையிலான அரசில் தீர்வே தமிழ் மக்களிடைய பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வாக அமையும் என்றும், இதில் விட்டுக் கொடுப்புக்கு இடமில்லை என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் பிரகடனம் வெளிவந்த பின்னர் வழிகாட்டல் குழுவில் கூட்டமைப்பின் சார்பாக அங்கம் வகிக்கும் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தனும், தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கையொப்பமிட்டு ஒரு ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில் முன்மொழிவில் இணைந்த வடக்கு- கிழக்கில் சமஸ்டித் தீர்வு அவசியமாகும் என்றும், செனற்சபை அமைக்கப்படவேண்டும் என்றும், வழிநடத்தல் குழுவிற்கு தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரவையின் தீர்மானமும் அது மக்களின் அபிலாசைகளை வெளிப்படுத்தியிருப்பதாலும் கூட்டமைப்பின் தலைமை இந்த முடிவை எடுக்கத் தூண்டியிருக்கின்றது. இயல்பாகவே மக்கள் சார்பாக முடிவெடுக்க வேண்டிய தலைமைகள் இன்று தடுமாறி வருவதையும், அதனை வழிநடத்த ஒரு அமைப்பு அவசியம் என்பதையும் இந்த சம்பவம் வெளிப்படுத்தியும் இருக்கின்றது.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையில் சமஸ்டி என்பதை ஒரு பிரிவினையாகவே பார்க்கிறது. ஐக்கிய தேசியக் கட்சியும் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வு என்று சொல்கின்றது. நிபந்தனையற்ற ஆதவை வழங்கிய கூட்டமைப்பின் தலைவர் வழிநடத்தல் குழுவிற்கு சமஸ்டி என்பதன் பொருளை தெளிவாக விளக்கவில்லையா அல்லது விளங்கிக் கொண்டவர்கள் தமிழ் தேசிய இனத்திற்கு எத்தகைய தீர்வையும் வழங்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து இதனை எதிர்கின்றனரா என்பது புரியாத புதிராகவே உள்ளது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் இரண்டு கட்சியின் தலைவர்களும் தமிழ் தேசிய இனத்தின் பிரச்சனைரைய தீர்க்காமல் நாட்டை முன்னோக்கி நகர்த்த முடியாது என்று கூறி இருந்தனர். அவர்களது இன்றைய நிலையை பார்க்கின்ற போது நாட்டின் தேசிய இனப்பிரச்சனைக்கு இதய சுத்தியுடன் தீர்வை காண விரும்பவில்லை என்ற சந்தேகமே எழுகிறது.
பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த படைதரப்பு தொடக்கம் அரசியல்வாதிகள் வரை எவருக்கும் இந்த நாட்டின் இனப்பிரச்சனையை தீர்த்து அனைவரும் சகோதரத்துவத்துடன், ஆத்ம திருப்தியுடனும் கைகோர்த்து நடப்பதை விரும்பவில்லை என்றே தெரிகிறது. இனப்பிரச்சனைக்கு தீர்வு காணாமல் நாட்டில் நல்லிணக்த்தை ஏற்படுத்தவும், உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கவும் முடியாது. இதனை நாட்டின் சகல தரப்பினரும் உணர்ந்து கொண்டு, முழு மனத்துடனும், இதயசுத்தியுடனும் தேசிய இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்டு, காலம் காலமாக பாதிக்கப்பட்ட இனம் நிம்மதி பெரும் மூச்சு விடும் வகையிலும், நம்பிக்கையளிக்கும் வகையிலும் நிரந்தர அரசியல் தீர்வை காணப்பது இன்றைய காலத்தின் கட்டாயம். இதன் மூலமே எதிர்கால இலங்கையை சகோதரத்துவத்துடனும், சமத்துவத்துடனும் ஏனைய நாடுகளுக்கு முன்னுதாரணமாக முன்னோக்கி நகர்த்த முடியும்.

Post a Comment

0 Comments