முன்னாள் கடற்படை அதிகாரியான லெப். கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, வெல்லம்பிட்டிய பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு, மேன்முறையீட்டு நீதிமன்றம், நேற்று உத்தரவிட்டது.
|
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து போது படுகொலை செய்யப்பட்ட நடராஜா ரவிராஜ் எம்.பியின் வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவின் இரண்டாவது பிரதிவாதியே இவராவார். இந்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் லலித் ஜயசூரிய முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுடன், அடுத்த அமர்வு, 2018ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் திகதி இடம்பெறும் என அறிவிக்கப்பட்டது.
நாரஹேன்பிட்டி மாதா வீதியிலிருந்து பிரதான வீதிக்கு 2006.11.10அன்று செல்ல முயன்றபோது ரவிராஜ் எம்.பியும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் படுகொலை செய்யப்பட்டனர். இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 2ஆவது பிரதிவாதியான லெப்டினன் கொமாண்டர் பிரசாத் ஹெட்டியாராச்சி, 3ஆவது பிரதிவாதியான காமினி செனவிரத்ன, 4ஆவது பிரதிவாதியான பிரதீப் சாமிந்த ஆகிய மூவரும் கடந்த வருடம் டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி முன்னிரவில், எழுவர் அடங்கிய சிறப்பு ஜூரிகளின் தீர்ப்புக்கு அமைய கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர்.
ஜூரிகளின் தீர்ப்பை இரத்துச் செய்யுமாறு, ரவிராஜின் மனைவி சசிகலா ரவிராஜ், மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்தார். கடந்த அமர்பில், பிரதிவாதியான பிரசாத் ஹெட்டியாராச்சி மன்றுக்கு ஆஜராவதில்லை என்றும் அவருக்கு பிடிவிறாந்து பிறப்பிக்குமாறும், கோரப்பட்டதற்கமைய, நீதியரசர்கள் குழாம், பிரசாத் ஹெட்டியாராச்சியைக் கைதுசெய்து, மன்றில் ஆஜர்படுத்துமாறு, பிடிவிறாந்து பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழேயே சுமத்தப்பட்டுள்ளன. அவ்வாறானதொரு வழக்கை ஜூரிகளின் முன்பாக விசாரணைக்கு எடுத்துகொள்வது குறைபாடுகளைக் கொண்டதாகும். இந்த வழக்கை ஜூரிகளின்றி விசாரணைக்கு உட்படுத்துமாறு, அந்த மேன்முறையீட்டு மனுவில் கோரப்பட்டுள்ளது. தமது தரப்பு சட்டத்தரணிகள், ஜூரிகள் சபை தொடர்பில் மேல் நீதிமன்றத்தில் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர். எனினும், தினந்தோறும் நடத்தப்பட்ட வழக்கு விசாரணையின் பின்னர், டிசெம்பர் மாதம் 24ஆம் திகதி நள்ளிரவு, ஜூரி சபையால் பிரதிவாதிகள் அனைவரும் குற்றவாளிகள் அல்லர் என தீர்ப்பளித்ததன் பின்னர், மேல் நீதிமன்ற நீதிபதி அவ்வனைவரையும் விடுதலை செய்துள்ளார் என்றும் அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
சசிகலா ரவிராஜ் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் எம்.பியுமான எம்.ஏ.சுமந்திரனும் 3,4ஆம் பிரதிவாதிகள் சார்பில், ஜனாதிபதி சட்டத்தரணி அநுஜ பிரேமரத்னவும் ஆஜராகியிருந்தனர்.
|
0 Comments