|
வரலாற்றில் முதற்தடவையாக தமிழ்க் கட்சிகள் ஒரே தேசத்தை உருவாக்குவதற்கும் பௌத்த மதத்திற்கு முதலிடம் வழங்குவதற்கும் உடன்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். காலியில் பொலிஸ் வீட்டுத் தொகுதியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ரணில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
|
தமிழ்க் கட்சிகள் முதன் முறையாகத் தமது பாரம்பரிய நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளன. வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையின் மூலம் நாட்டின் பிரச்சினைக்குத் தீர்வைத் தேடிக்கொள்ள முடிந்துள்ளது. அரசியல் பிரச்சினையின் காரணமாகவே வடக்கில் போர் மூண்டது. போருக்குப் பின்பும் கூட அதைத் தீர்த்துக்கொள்ள எமக்குச் சந்தர்ப்பம் காணப்படவில்லை. அன்று தெற்கின் கட்சிகளும், சிங்கள, முஸ்லிம் மக்களும் இலங்கை ஒரு தேசமாக இருக்க வேண்டும் என்று பேசிவந்தார்கள். இந்த நாட்டிற்கு அங்கீகரிக்கப்பட்ட கூட்டாட்சி முறையொன்று தேவையெனத் தமிழ்க் கட்சிகள் தெரிவித்தன. போருக்குப் பின்பும் இந்தக் கருத்து நிலை காணப்பட்டது. தீர்வைப் பெற்றுக்கொடுக்கவே நாம் செயற்பட்டோம். தற்பொழுது எமக்கு அதற்கான தீர்வும் கிடைத்துள்ளது.
அரசமைப்புச் சபை வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கையில் அந்தத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது. பிரதான கட்சிகள் இரண்டும் இடைக்கால அறிக்கையின் முதல் பந்தியில் உள்ள பரிந்துரைகளுக்கமைய உயரிய அதிகாரப் பகிர்வுக்கு நாடாளுமன்றத்திற்கு மேலதிகமாகச் செனட் சபையொன்றை உருவாக்குதல், சுயா தீனமான நீதித்துறையை உருவாக்குதல், ஒரு தேசத்தைக் கட்டியெழுப்புதல் மற்றும் பௌத்த சமயத்திற்கு முன்னுரிமையளித்தல் போன்ற விடயங்களைக் கருத்திற் கொள்ளத் தயார் என்று தமிழ்க் கட்சிகள் தெரிவித்துள்ளன.
இதற்கு முன்னர் எப்போதுமே இவ்வாறானதொரு கருத்தை இந்தக் கட்சிகள் தெரிவித்திருக்கவில்லை. இதற்கு முன்னர் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இழுபறி நிலையில் இருக்கும் போது தமிழ் கட்சிகளும் ஒரு பக்கத்தில் நின்றி ருந்தன. தற்பொழுது நாமும் உங்களுடன் வரத் தயார் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். 2015ஆம் ஆண்டு பொது வேட்பாளர் மைத்திரிபாலவை வெற்றிபெறச் செய்ய அவர்கள் ஒத்துழைத்தார்கள்- – என்றார்.
|


0 Comments