Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சட்ட விரோத மண் அகழ்வினை தட்டிக்கேட்க வக்கில்லாதவர்கள் என்மீது சேறுபூச முற்படுகின்றனர் –வியாழேந்திரன் எம்.பி.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண் அனுமதி பத்திரங்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள் மற்றும் சட்டவிரோதமாக மண் அகழ்பவர்களை தட்டி கேட்க வக்கில்லாத அரசியல் வாதிகள் சிலர் அதற்கு எதிராக போராடும் அரசியல்வாதிகள் மீது சேற்றை வாரி இறைக்கமுற்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.மக்களின் பிரச்சினைக்காக போராடும் என்போன்றவர்களின் செய்திகளை ஊடகவியலாளர்கள் என்று கூறிக்கொள்ளும் அரச புலனாய்வாளர்கள் வெளியிடுவதில்லையென தெரிவித்துள்ள அவர் மக்களின் போராட்டங்களுக்கு சில அரசுக்கு ஆதரவாக செயற்படும் அரசியல்வாதிகளும் நேரடியாக வருவதில்லையெனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் இன்று திங்கட்கிழமை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
2015 ஆம் ஆண்டு ஒன்பதாம் மாதம் முதல் சட்டவிரோத மண் அபகரிப்பு, இயற்கை வளச்சுரண்டல் ஆகியவற்றிக்கு ஏதிராக மக்களோடு நின்று தனி ஒருவனாக நின்று போராடுகின்றேன். அப்பொழுது நீங்கள் எங்கு போனீர்கள்? செவ்வாய் கிரகத்திலா இருந்தீர்கள்? கடந்த அரசில் இருந்த அரசியல் வாதிகளின் பிணாமிகளுக்கும் ஒருவருக்கு 10 தொடக்கம் 15 வரையிலான மண் அனுமதி பத்திரம் இருந்து கொண்டிருக்கிறது. அதை தட்டிக்கேட்க வெளிப்படுத்த ஒரு சில அரசியல் வாதிகளுக்கும் நபர்களுக்கும் வக்கில்லை.
ஏன்னென்றால் அவர்கள் இவர்களுக்கு ஆதரவானவர்கள். கடந்த அரசு காலத்தில் அதிகமாக அனுமதி பத்திரங்களை பெற்றவர்களே மட்டக்களப்பு மண்ணை வெளி மாவட்டங்களுக்கு அதிக விலைக்கு விற்க்கின்றனர். இதனால் எமது மாவட்டத்தில் உள்ள ஏழை மக்கள் ஒரு வீட்டையோ, மலசலகூடத்தையோ, கிணறையோ கட்டமுடியாமல் அல்லலுறுகின்றனர். இதனால் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீட்டுத்திட்டம் கூட சில ஏழைகளுக்கு கிடைக்காமல் திரும்பி சென்றுள்ளது.
வாகனத்தின் விலை கூடவில்லை, பெற்றோலின் விலை கூட வில்லை. ஆனால் 2016 இல் ஒரு லொறி மணலின் விலை 12500 ரூபாய். ஆனால் இன்று ஒரு வருடத்திற்குள் ஒரு லொறி மணலின் விலை 30000 ரூபாயாக அதிகரித்துள்ளது. இதற்கு காரணம் யார்? கடந்த அரசில் இருந்து இன்றுவரை பல மண் அனுமதி பத்திரங்களை வைத்து வியாபாரம் செய்பவர்கள். மற்றும் சட்டவிரோதமாக மண் அகழ்பவர்கள். இவர்களை தட்டி கேட்க வக்கில்லாத அரசியல் வாதிகள் சிலர் இதற்கு எதிராக போராடும் எங்கள் மீது குற்றம் சுமத்த வந்து விட்டார்கள்.
ஏன்னென்றால் இவர்கள் அவர்களின் பினாமிகள். பேச்சில் மட்டும் நல்லவர்கள் போல் நாடகம். இதற்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள். எமது மாவட்ட மண்ணை எமது மாவட்ட மக்களுக்கு மட்டும் மிக குறைந்த விலையில் கொடுக்க முன் வருபவர்களுக்கு மட்டும் மண்ணை அகழ்வதற்கான அனுமதியை வழங்குங்கள் என பிரதேச அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்களிலும் பேசியது உண்மை.
எமது மாவட்ட மண்ணை வெளி மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும் பினாமிகளின் பினாமிகளாக செயல்படும் அரசியல் வாதிகள் முதுகெலும்பு இருந்தால் அவர்களின் பெயர்களை வெளியிடட்டும் பார்ப்போம்.
இன்று புதிதாக ஒரு சில எம்மை சார்ந்தவர்கள் எனது அனுமதியுடன் மண் அனுமதி பத்திரத்தை பெற்றதாக கருத்து வெளியிடுகின்றனர். என்னை பொறுத்த மட்டில் எனது அண்ணனோ! தம்பியோ! குடும்பத்தினரோ! என் வீட்டில் வளர்க்கும் நாயோ! மண் அனுமதிக்கு விண்ணப்பிக்கவும் இல்லை. அனுமதி பத்திரம் பெறவும் இல்லை.
பெறப்போவதுமில்லை. ஒரு வேளை என் சார்ந்தவர்கள் மண் அனுமதி பத்திரத்திற்கு விண்ணப்பித்திருந்தாலும் அல்லது அனுமதியை பெற்றிருந்தாலும் அடுத்த நிமிடமே உரிய நடவடிக்கை எடுத்து தடுத்து நிறுத்து தயங்க மாட்டேன்.அதற்குரிய நடவடிக்கையையும் மேற்கொள்வேன். அத்துடன் என் மீது அவதூறு பரபுபவர்கள் மீது எந்த எல்லைக்கும் சென்று உரிய நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன்.
மக்கள் போராட்டங்களில் நேரடியாக களமிறங்கி அவர்களுடன் ஒருவனாக நின்று போராடுபவன். அது மண் கபளிகரமாக இருக்கலாம், இயற்கை வளச் சுரண்டலாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோர் விடயமாக இருக்கலாம், காணி அபகரிப்பாக இருக்கலாம் அனைத்து மக்கள் பிரச்சினைகளுக்கும் நேரடியாக நின்று போராடுபவன்.
கதை வசனம் பேசும் நீங்கள் எங்கு போனீர்கள்? ஆ.ஒட்டு மொத்த தமிழ் மக்களின் பிரச்சினையை சர்வதேசத்திற்க்கு வெளிச்சம் போட்டு காட்டிய எழுக தமிழ் எழுச்சி பேரணியை பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தனி ஒருவனாக நின்று நடாத்தியவன்.
அப்பொழுது நீங்கள் எங்கு போனீர்கள்? ஒட்டு மொத்த கிழக்கு தமிழ் மக்களும் வீதியில் இறங்கி கண்ணீரோடு வரும் போது அந்த பேரணியை குழப்புவதற்க்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் பிரதிநிதிகள் சிலர் வேலை செய்தீர்கள். நீங்கள் யார்? நீங்கள் குழப்புவதற்கு செய்த திட்டங்கள் என்ன என்பதை உரிய நேரத்தில் வெளியிடுவோம்.
மட்டக்களப்பி அமைக்கபடும் மதுபான உற்பத்திச்சாலையை நிறுத்துமாறு 09 ஆர்ப்பாட்டங்களை மக்களோடு சேர்த்து நடத்தினேன். இன்று வரை அதற்கு எதிராக போராடிக் கொண்டிருக்கின்றேன் அப்பொழுது நீங்கள் எங்கு போனீர்கள்? அரசாங்கத்திற்கு சார்பானவரின் மதுபான உற்பத்திச்சாலைக்கு யார் யார் துணை போனீர்கள் என்பதை வெளியிடுவோம்.. நீங்கள் அரசின் ஏஜன்டுகள்.
செய்தி சேகரிக்க சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் வாழைச்சேனையில் வைத்து தாக்கபட்ட போது பல கண்டன ஆர்ப்பாட்டங்களை செய்தோம். அப்போது எங்கு போனீர்கள்? அது எந்த கொம்பனாக இருந்தாலும் சரி. உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் சுத்துமாத்து பேச்சுகளுக்கும், குத்துப்பாட்டு பேச்சுக்களுக்கும் நாங்கள் தயங்க மாட்டோம். தைரியம் இருந்தால் நேரடியாக வாருங்கள் பேசுங்கள்.
அரசின் முகவர்களாக செயற்ப்படும் உங்களுக்கு இவ்வளவு தைரியம் இருந்தால் மக்களோடு மக்களாக நிக்கும் எங்களுக்கு எவ்வளவு தைரியம் இருக்கும். மக்கள் உங்களை போன்ற சிலருக்கு பாடம் கற்பிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை. எந்த ஒரு மக்கள் போராட்டத்திலும் கலந்து கொள்ளாமல் அவ்வப்போது வீர வசனம் பேசி அறிக்கை விடும் சண்டியர்களாக உள்ளார்கள்.
மக்களோடு மக்களாக நின்று போராடும் எம்மை பற்றிய செய்திகளை சிலர் வெளியிடுவதில்லை. காரணம் அவர்கள் ஒரு சில அரச புலனாய்வாளர்கள். அவர்களுக்கு தமிழ் மக்களின் போராட்டம் பிடிக்காது. சில அரசியல் வாதிகளும் மக்கள் போராட்டங்களுக்கு நேரடியாக வருவதில்லை .காரணம் அவர்கள் அரச ஆதரவாளர்கள்.
நாம் யாரையும் ஏன் எந்த அரசியல்வாதிகளையும் சீண்டுவதில்லை.அதற்காக எம்மை சீண்டினால் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். எங்கள் வாயைக் கிளறி உங்கள் வண்டவாளங்களை வெளியே கொண்டு வர வைக்காதீர்கள். எங்களுக்கு எங்கள் மக்களின் பிரச்சினையை பார்க்கவே நேரமில்லை. உங்கள் நாடகங்களை எங்கள் அரங்கில் அரங்கேற்ற வேண்டாம்.
நான் பிழைப்புக்காக அரசியலுக்கு வந்தவன் அல்ல. அரசியலுக்கு வந்ததால் பலவற்றை இழந்தவன். இன்னும் என் பதினாறு வருட கால கற்பித்தலை தொடர்ச்சியாக செய்து கொண்டு தான் இருக்கின்றேன். அத்துடன் அரசியலுக்கு வர முன்னே என் கடும் உழைப்பினால் உருவாக்கப்பட்ட தொழில் ஸ்தாபனங்களில் சுமார் அறுபதுக்கும் மேற்பட்டோர் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். நாளை இப்பதவி என்னை விட்டு போனாலும் மிக மிக சந்தோசம். என் மக்களுக்குரிய சேவையை அரசியலுக்கு வர முதலே செய்தவன் , செய்து கொண்டு இருப்பவன்.
ஊடகத் தர்மம் என்பது இருபக்க நியாயங்களையும் கேட்டு அறிந்து எழுத வேண்டும் . அத்தகைய ஊடகங்களே மக்கள் மத்தியில் நிலைத்து நிற்கும் இதுதான் வரலாறு.

Post a Comment

0 Comments