காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த யாழ். குரும்பசிட்டிப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் போராளி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். குரும்பசிட்டி மேற்குப் பகுதியைச் சேர்ந்த இராசரத்தினம் ஸ்ரீபவன் (வயது - 40) என்ற இளம் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
குறித்த முன்னாள் போராளி கடந்த மாதம் 29ஆம் திகதி காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
15 நாட்களாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த அவர், இந்த மாதம் 14 ஆம் திகதி மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து இந்த மாதம் 24ஆம் திகதி அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது.
முன்னதாக வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் கடந்த 26ஆம் திகதி மாலை திடீரென நிலை தடுமாறி உறவினர்களுடன் கதைத்துள்ளதாக தெரியவருகின்றது.
அத்துடன் சுவாசப் பிரச்சினை காரணமாக அவருக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டதுடன், வழமை போன்று சிறுநீர் வெளியேறுவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையிலேயே அவர் வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்தியர்களால் வழங்கப்பட்டு வந்த தீவிர சிகிச்சை பலனின்றி அவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை(29) காலை 07.30 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
இறக்கும் முன்னர் அவரது சிறுநீரகங்கள் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த முன்னாள் போராளி அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட வேளை முதல் அவரது மனைவி அடிக்கடி மயங்கி விழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.
உயிரிழந்த முன்னாள் போராளி தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையிலிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்படும் போது டெங்கு காய்ச்சல் என வைத்தியர்களால் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால், யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் இது என்ன வகையான காய்ச்சல் எனத் தங்களால் இனங்காணப்பட முடியாமலுள்ளது எனத் தெரிவித்ததாகவும் உயிரிழந்த போராளியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த முன்னாள் போராளிக்கு திருமணமாகி ஒருவருடமே ஆவதுடன் மனைவி தற்போது கர்ப்பமாகவும் உள்ளார்.
மனைவி ஏற்கனவே திருமணமானவர் என்பதுடன் அவருக்கு ஒரு பிள்ளையும் இருப்பதாக தெரியவருகின்றது. குறித்த பிள்ளையையும் அவர்களே பராமரித்து வளர்த்து வந்துள்ளனர்.
உயிரிழந்த முன்னாள் போராளியின் ஒரு கண், கடந்த கால யுத்தத்தின் போது இடம்பெற்ற மோதலில் பறிபோயுள்ளது.
ஒரு கண் பறி போன போதும் குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக தன்னம்பிக்கையுடன் கடந்த காலங்களில் மேசன் வேலை, பேக்கரி வேலை உள்ளிட்ட பல்வேறு தொழில்களையும் செய்து வந்ததுடன் இறுதியாக ஐஸ்கிறீம் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.
இறுதியாக புதூர் நாகதம்பிரான் ஆலய உற்சவத்தின் போது ஐஸ்கிறீம் வியாபாரம் மேற்கொண்டு விட்டு வீடு திரும்பிய அவர் காய்ச்சல் எனத் தெரிவித்து வீட்டில் ஓய்வெடுத்ததாகவும் தெரியவருகின்றது.
எல்லோருடனும் சகஜமாகவும், இனிமையாகவும் பழகக் கூடிய ஒருவர் என்பதால் அவரது திடீர் இழப்பு குரும்பசிட்டிப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதேவேளை, காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முன்னாள் போராளியின் திடீர் மரணம் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அவரது மரணம் குறித்தான மர்மங்கள் துலங்குமா? என சமூகஆர்வளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் இவ்வாறு மர்மமான முறையில் மரணமடைவது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்துவதுடன் இது குறித்து சரியான பதிலை எதிர்பாப்பதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 Comments