அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வட மாகாண முதலமைச்சர் நீதியரசர் சி வி விக்னேஸ்வரன் சந்தித்தபோது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் முதலமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் அளித்துள்ளார். இவற்றுள் வடக்கில் இருந்து இராணுவ வெளியேற்றம் குறித்து மேற்கொள்ளப்பபட்ட கலந்துரையாடலின் போது முழு இராணுவத்தையும் வடக்கில் இருந்து வெளியேற்றவா சொல்கிறீர்கள் என்றும் அப்படியானால் அவர்களை எங்கே கொண்டு செல்வது என்று மைத்திரிபால சிறிசேன தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு தான் அளித்த பதில் என்ன என்பது குறித்தும் முதலமைச்சர் விளக்கியுள்ளார்.
முதலமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்துள்ள பதில்களும் பின்வருமாறு:
1. கேள்வி: நீங்கள் அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்த போது வடக்கில் உள்ள இராணுவத்தை எப்படி அகற்ற முடியும் என்பது குறித்து தங்களிடம் ஜனாதிபதி கேள்வி எழுப்பினாரா? அது குறித்து விளக்க முடியுமா?
பதில்: ஆம். முழு இராணுவத்தையுமே வடக்கிலிருந்து வெளியேற்றுமாறு நான் கோருவதாக என் பேச்சு அமைந்திருப்பதாக அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் கூறினார். “ஏன்! அதில் என்ன பிழை?” என்றேன். அப்படியானால் எங்கள் இராணுவத்தை எங்கே கொண்டுபோய் நிறுத்தச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். “முழு இராணுவத்தையும் ஒன்பதாகப் பிரியுங்கள். ஒன்பதில் ஒரு பங்கை ஒவ்வொரு மாகாணத்திலும் நிறுத்துங்கள்” என்றேன். “எல்லா மாகாணத்திலும் சரிசமமாக இராணுவத்தை நிறுத்துவதில் எமக்கு ஆட்சேபனை இல்லை” என்றேன்.
2. கேள்வி: பொலிஸ் பயிற்சிக் கல்லூரி வடக்கில் அமைய வேண்டும் என்று கேட்டீர்களா? அதற்கு அதிமேதகு ஜனாதிபதி கூறிய பதில் என்ன?
பதில்: ஆம். எம் இளைஞர் யுவதிகள் களுத்துறையில் இருக்கும் பொலிஸ் பயிற்சிக் கல்லூரிக்குச் செல்வதற்குப் பயப்பிடுகின்றார்கள். தமிழ் மொழிப் பொலிஸ் பயிற்சிக் கல்லூரியொன்று வடக்கில் அமைவதே சாலச் சிறந்தது என்றேன். அதற்கு அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் வடக்கில் இருப்பவர்கள் தெற்கிற்கும் தெற்கில் இருப்பவர்கள் வடக்கிற்கும் வந்தால்த்தான் புரிந்துணர்வு ஏற்படும் என்றார். “எமது அரசியல் ரீதியான பிரச்சினையை உடனே தீருங்கள். நாங்கள் யாவருமே தெற்கு நோக்கி வருகின்றோம்” என்றேன். அதிமேதகு ஜனாதிபதி உளமாரச் சிரித்தார்.
3. கேள்வி: வடக்கில் பல போராட்டங்கள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால் இதற்கு மத்திய அரசிடம் தான் தீர்வுள்ளது. எனவே, அவர்களை நேரடியாக சந்தித்துப் பேசவருமாறு ஜனாதிபதிக்கு அழைப்பு விடுத்தீர்களா?
பதில்: இல்லை. அவ்வாறு நான் கேட்கவில்லை. பல விடயங்களையும் நான் எடுத்துரைத்து அவற்றிற்கான தீர்வைப் பெறுவது மிகவும் அவசரம் என்றேன். ஜனாதிபதி அவர்கள் ஒன்பது மணியாகிவிட்டதாலும் வேறு ஒரு நிகழ்வு தமக்கு இருப்பதாலும் தொடர்ந்தும் கலந்துரையாட முடியாமல் இருப்பதாகக் கூறி சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளையுங் கூட்டிக்கொண்டு விரைவில் வடக்கிற்கு ஒரு நடமாடுஞ் சேவையை நடாத்த வருவதாகக் கூறினார். அதன் போது தீர்வு காணா விடயங்கள் அனைத்திற்கும் தீர்வு காணலாம் என்றார்.
0 comments: