Home » » மஹிந்தவை எச்சரித்தார் மோடி!

மஹிந்தவை எச்சரித்தார் மோடி!

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த கோரிக்கைக்கு அமைய கடந்த 11ம் திகதி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, இந்திய பிரதமர் சந்தித்துப் பேசியிருந்தார். இருவருக்கும் இடையில் இடம்பெற்ற சிறிது நேர சந்திப்பின் போது மஹிந்த ராஜபக்சவை, மோடி கடுமையாக எச்சரித்துள்ளார் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

 
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மோடிக்கு வழங்கப்பட்ட இராபோசனத்தின் பின்னர் இந்திய பிரதமருக்கும் மஹிந்தவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பு இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நடைபெற்றது. மஹிந்த ராஜபக்ச, ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கோத்தபாய ராஜபக்சவுடனே மோடியை சந்திப்பதற்கு சென்றுள்ளார். மோடியுடன் இலங்கையின் இந்திய உயர்ஸ்தானிகர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் இந்திய வெளிவிவகார செயலாளர் ஆகியோர் இருந்தனர். ஜீ.எல்.பீரிஸ் மற்றும் கோத்தபாய ராஜபக்சவுடன் ஒரு வார்த்தையேனும் பேசாத மோடி மஹிந்த ராஜபக்சவுடன் மாத்திரம் கலந்துரையாடியுள்ளார்.

“தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கின்ற அபிவிருத்தி திட்டங்களுக்கு தடை ஏற்படுத்த வேண்டாம், எட்கா ஒப்பந்தத்திற்கு எதிராக இனவாத எதிர்ப்புகளை கட்டியெழுப்ப வேண்டாம், இனங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக கட்டியெழுப்பப்படுகின்ற அரசியலமைப்பிற்கு எதிராக இனவாதத்தை தூண்டி மீண்டும் பிரச்சினைகளை ஏற்படுத்த வேண்டாம்” என மஹிந்த ராஜபக்சவுக்கு மோடி கடுமையாக எச்சரித்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கு மஹிந்த ராஜபக்ச பதிலளிக்கும் போது முதலாவதாக செவிக்கொடுத்த மோடி, பின்னர் மஹிந்த கூற முற்பட்டவைகளுக்கு செவிகொடுக்காமல், காலி முகத்திடலில் தனது விஜயத்தின் போது கறுப்பு கொடி பறக்க விடுமாறு மக்களை தூண்டிவிட்டமை குறித்து மோடி வருத்தம் வெளியிட்டுள்ளார்.

இதன் போது வெட்கமடைந்த மஹிந்த தான் அவ்வாறு கூறவில்லை எனவும், மேடையில் இருந்த ஒருவரே அவ்வாறு கூறினார் எனவும் மஹிந்த கூறியதற்கு அவர் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |