Home » » வடக்கு மக்களை சம்பந்தர் ஓரங்கட்டுகிறாரா?

வடக்கு மக்களை சம்பந்தர் ஓரங்கட்டுகிறாரா?

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டு கொழும்புக்கு வருகை தந்த போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, பிரதமர் மோடியைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளது.
இச்சந்திப்பின் போது வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கூட்டமைப்பு  அழைப்பு விடுக்காமை தமிழ் மக்களுக்குச் செய்யப்பட்ட துரோகத்தனமாகும்.
கொழும்புக்கு வருகை தந்த இந்தியப் பிரதமரை தமிழ் அரசியல் தலைமை சந்திப்பதென்பது முக்கியமான ஒரு விடயம். இலங்கையில் நல்லாட்சி பதவியேற்ற பின்னும் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டதாக இல்லை.
இந்நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டு வருமாறு இலங்கையின் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கக் கூடிய நாடாக இந்தியா இருப்பதால்,
பிரதமர் மோடியைச் சந்திப்பது அதுவும் அவரை அவரது நாட்டில் சந்திப்பதை விட, அவர் இலங்கைக்கு வரும் போது சந்திப்பதென்பது மிகவும் முக்கியமானது.
அதிலும் அரச தலைவர்களை பிரதமர் மோடி சந்திப்பதற்கு முன்னதாக தமிழ் அரசியல் தலைமை மோடியைச் சந்திக்குமாயின் அரச தலைவர்களுடனான சந்திப்பின் போது பிரதமர் மோடி சில விடயங்களை இலங்கை அரசுக்கு அழுத்திக்கூற முடியும்.
ஆக, தமிழ் அரசியல் தலைவர்களையும் அரச தலைவர்களையும் அடுத்தடுத்து சந்திக்கும் போது தகவல் பரிமாற்றம் எந்தவித காலதாமதம் இல்லாமல் நடந்தேறும்.
நிலைமை இதுவாக இருக்கையில், வடக்கின் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களை பிரதமர் மோடியுடனான சந்திப்பிக்கு கூட்டமைப்பு அழைத்துச் செல்லாமை மிகப்பெரும் தவறாகும்.
பிரதமர் மோடியைச் சந்தித்த தமிழ்த் தலைவர்களிலும் பார்க்க வடக்கின் முதலமைச்சர்  விக்னேஸ்வரன் பெறுமதியானவர். பிரதமர் மோடி மதிக்கின்ற ஒருவர்.
தமிழ்த் தலைவர்கள் பிரதமர் மோடியைச் சந்தித்தது தமிழ் மக்களுக்கானதாக இருந்தால் அந்தச் சந்திப்பில் வடக்கு மக்களின் தலைவராக இருக்கக்கூடிய வடக்கு மாகாண சபை முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன் அவர்களைக் கட்டாயமாகக் கூட்டிச் சென்றிருக்க வேண்டும்.
ஆனால் அதைக் கூட்டமைப்புச் செய்யாத போது கூட்டமைப்பின் சந்திப்புத் தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுவது நியாயமானதே.
அதில் ஒன்று அரசுக்குச் சாதகமாகவே கூட்டமைப்பு பிரதமர் மோடியைச் சந்தித்ததா? என்பது தவிர முதலமைச்சர் விக்னேஸ்வரன் இல்லாத சந்திப்பு பிரதமர் மோடிக்கும் கூட்டமைப்புத் தொடர்பில் ஓர் அவநம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கும் என்பதற்கு அப்பால்,
இரா.சம்பந்தர் வடக்கு மக்களை ஓரங்கட்டுகிறார் என்று கருதப்பட்டு வந்த ஐயத்தை இச்சம்பவம் மேலும் வலுப்படுத்துவதாக இருக்கிறது என்று கருதுவதற்கும் இடமுண்டு.
வலம்புரி 
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |