மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பனையறுப்பான் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற பூசகரை இலக்கு வைத்து நேற்று இரவு 9.00 அளவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
|
மட்டக்களப்பு பனையறுப்பான் காளி கோயிலின் பூசகர் கந்தப்போடி புனிதநாதனை குறிவைத்து நேற்றிரவு துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. பூசகர் வீட்டிலிருந்து மோட்டார் சைக்கிளில் கோயிலுக்கு செல்லும் வழியில் துப்பாக்கி சூடு இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளின் பெற்றோல் தாங்கியிலே சூடுபட்டதற்கான தடயங்கள் காணப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த பூசகர் தெய்வதீனமாக உயிர்தப்பியுள்ளார்.
இச்சம்பவம், நடைபெற்று இருபது நிமிடத்தின் பின்னர், துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கு இலக்கான பூசகரின் குடும்பத்திற்கும், சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள குடும்பத்திற்கும் இடையில் நடைபெற்ற கைகலப்பில் நான்கு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தில் மற்றுமொரு மோட்டார் சைக்கிளும் கோடாரியால் கொத்தி சேதப்படுத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் கொக்கட்டிச்சோலை பொலிஸாரும், மட்டக்களப்பு மாவட்ட விசேட தடயப்பிரிவு பொலிஸாரும், குற்றப்புலனாய்வு பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு வருடத்திற்கு முன்பு குறித்த பூசாரியின் முச்சக்கரவண்டி பனையறுப்பான் காளிகோயில் முன்பாக வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் தீயிட்டு எரிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
![]() |
0 Comments