Home » » கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

கலிபோர்னியா துப்பாக்கி சூட்டில் மூவர் பலி

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள ஃபிரஸ்னோவில், இன ரீதியான தாக்குதல் என்று சந்தேகிக்கப்பட்ட சம்பவத்தில், ஒரு கறுப்பின நபர் துப்பாக்கியால் சுட்டதில் மூன்று வெள்ளை இன நபர்கள் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய்க்கிழமையன்று கோரி அலி முஹம்மத் என்ற அந்த நபர் தனது துப்பாக்கியால் 90 வினாடிகளில் 16 முறைகள் சுட்டதாக தலைமை போலீஸ் அதிகாரி ஜெர்ரி டயர் தெரிவித்தார்.
அரபி மொழியில் ”கடவுள் மிகப் பெரியவர்” என்று குரல் எழுப்பிய அந்த தாக்குதல்தாரியை போலீசார் கைது செய்தனர்.
ஆனால், இது வெறுப்புணர்வால் நடந்த குற்றம் என்றும், பயங்கரவாத சம்பவம் அல்ல என்றுதான் நம்புவதாக டயர் குறிப்பிட்டார்.
கடந்த வாரத்தில் ஒரு நெடுஞ்சாலை உணவகத்துக்கு வெளியே ஒரு பாதுகாவலர் கொலை செய்யப்பட்டது தொடர்பாகவும் முஹம்மத் தேடப்பட்டு வந்தார்.
சமூக வலைதளத்தில் வெள்ளை இன மக்களை தான் வெறுப்பதாக குறிப்பிட்ட ஆப்ரிக்க அமெரிக்கரான தாக்குதல்தாரி, அரசுக்கு எதிரான கருத்துக்களையும் வெளிப்படுத்தி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தில் பாதிக்கபப்ட்ட நான்கு பேருமே வெள்ளை இன நபர்கள்தான். இவர்களில் ஒருவர் காரில் அமர்ந்திருக்கும் போது சுடப்பட்டார்.
”தன்னால் எத்தனை பேரை கொல்ல முடியுமோ, அத்தனை பேரை கொல்ல அவர் விரும்பியுள்ளார். அது தான் நடந்த சம்பவத்தை எடுத்துக் காட்டுகிறது” என்று டயர் தெரிவித்தார்.
மிகப் பெரிய கைத்துப்பாக்கியை ஒருவர் எடுத்துச் சென்றதை தாங்கள் கண்டதாகவும், அவ்வப்போது துப்பாக்கியில் தோட்டாக்களை அவர் மீண்டும் நிரப்பியதாகவும், இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |