Home » » பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் தொடர் போராட்டம் -மகளிர் அமைப்புகள் எச்சரிக்கை

பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வு வழங்காவிட்டால் தொடர் போராட்டம் -மகளிர் அமைப்புகள் எச்சரிக்கை

அரசாங்கம் வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைக்கு தீர்வினை வழங்காவிட்டால் கிராமங்கள் தோறும் மகளிர் அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடாத்தவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் 37வது நாளாகவும் இன்று புதன்கிழமை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
மத்திய மாகாண அரசாங்கங்கள் தமது நியமனங்கள் வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த நிலையில் வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியம் இன்று கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தது.
மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக ஒன்றுகூடிய மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வேலையற்ற பட்டதாரிகள் மேற்கொண்டுவரும் போராட்டம் தொடர்பில் அரசாங்கங்கள் இதுவரையில் நடவடிக்கையெடுக்காமைக்கு கடுமையான கண்டனத்தினை தெரிவித்த அவர்கள் கண் தெரியாதவர்களாகவும் காது கேட்காதவர்களாகவும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைக்கு விரைவான நடவடிக்கையினை இந்த அரசாங்கம் எடுக்க தவறினால் கிராமங்கள் தோறும் மகளிர் அமைப்புகளை ஒன்றுதிரட்டி போராட்டங்களை நடாத்தும் சூழ்நிலையேற்படும் என மட்டக்களப்பு மாவட்ட மகளிர் அமைப்புகளின் ஒன்றியத்தின் தலைவி திருமதி செல்வி மனோகர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பில் இந்த வேலையற்ற பட்டதாரிகள் 80வீதத்திற்கு அதிகமான பெண்கள் உள்ளதாகவும் அவர்கள் 37வது நாளாக வீதியில் கிடந்து போராட்டம் நடாத்துவதை பார்க்கும்போது வேதனையளிப்பதாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வடகிழக்கு மாகாணம் என்பது கடந்த கால யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்ட மாவட்டமாகும்.அவ்வாறான சூழ்நிலையிலும் கடுமையான கஸ்டங்களின் மத்தியிலேயே தமது பிள்ளைகளின் கல்வியை பெற்றோர் மேற்கொண்டுவந்தனர்.
ஆனால் அரசாங்கம் ஏனைய மாகாணங்களில் உள்ளவர்களைப்போன்றே வடகிழக்கில் உள்ளவர்களையும் நோக்குகின்றது.இந்த எண்ணத்தினை அரசாங்கம் மாற்றவேண்டும்.கடந்த காலத்தில் பல்வேறு கஸ்டங்களின் மத்தியில் கல்வியைப்பெற்று பட்டத்தினை பூர்த்திசெய்தவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை விசேட கவனத்தில் கொண்டு அவர்களுக்கான நியமனங்களை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவேண்டும்.
கடந்த ஆட்சியாளர்களினால் பட்டதாரிகளின் நிலைமைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு நியமனங்கள் வழங்கப்பட்டன.அதிலும் விசேட கவனங்கள் பட்டதாரிகள் தொடர்பில் செலுத்தப்பட்டது.ஆனால் இன்று நல்லாட்சி என்று சொல்லப்படும் நிலையிலும் பட்டதாரிகளுக்கு நியமனங்களை வழங்குவதற்கான எந்த நடவடிக்கையும் இந்த அரசாங்கம் செய்யவில்லை.
எங்களது பிள்ளைகள் கூட பாடசாலைக்கு செல்வதற்கு தயங்குகின்றார்கள்.நாளை நாங்களும் இவ்வாறான போராட்டங்களில் ஈடுபடவேண்டுமா என கேட்கின்றனர்.இந்த நிலைமை அரசாங்கம் மாற்றவேண்டும்.உடனடியாக போராட்டம் நடாத்தும் பட்டதாரிகளின் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கையெடுக்கவேண்டும் என்று தெரிவித்தார்.
DSC03192DSC03204DSC03255DSC03258
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |