அரசகாணிகளை சில அரசியல் வாதிகளின் அனுசரணையோடும், சில அரச அதிகாரிகளின் ஆலோசனையிலும், சுவீகரிக்கின்ற நடவடிக்கைகள் நடந்தேறிவருகின்றன என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்படட்டதை கண்டித்து களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் சிலை முன்பாக பட்டிருப்புத் தொகுதி தமிழ் சமூகம், எனும் அமைப்பினால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மட்டக்களப்பு புன்னக்குடா பிரதேசத்தில் காணிப்பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்தக் காணி விடயங்கள் தொடர்பில் எம்மினம் சாராத ஒரு அரசியல்வாதி அக்காணி தங்களுடைய இனம் சார்ந்தவர்களுக்குச் சொந்தமானது என்று நாடாளுமன்றத்திலே உரையாற்றியிருக்கிறார்.
புன்னக்குடா காணிப்பிரச்சினை தொடர்பில் நேசகுமாரன் விமல்ராஜ் நியாயமாகச் செயற்பட்டிருந்தார். அதன்பிறகு அவருக்கு பல பிரச்சனைகள் தோன்றியிருக்கின்றன.
காணி விடயத்தில் நாம் மிகவும் அவதானமாக இருக்கின்ற இக்காலகட்டத்தில் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்தின் பிரதிப் பணிப்பாளரான நேசகுமாரன் விமல்ராஜ் மீது இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விடயம் தொடர்பில் நாம் ஆராயவேண்டியுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள தமிழ் மக்கள் தங்களது காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பொலிஸ் நிலையங்களுக்குச் செல்கின்ற போது அப்பிரச்சினைகள் தொடர்பில் கவனத்தில் எடுப்பது மிகக் குறைவாக இருக்கின்றன.
இவ்விடயங்கள் தொடர்பில் வியாழக்கிழமை நாடாளுமன்றிலே காணி அமைச்சருக்கு முன் கேள்வி எழுப்பி பேசியுள்ளேன்.
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம், அரசகாணிகள் சுவீகரிக்கப்படுகின்ற விடயங்கள், போன்ற விடயங்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்துள்ளேன்.
எனவே காணிப்பிரச்சினை தொடர்பில்தான் நேசகுமாரன் விமல்ராஜ் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என எமக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சந்தேக நபர்கள் மீது பொலிஸார் துரித நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும். எனவே இந்த கடமையையாவது பொலிஸார் மேற்கொள்வார்களா என நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
0 Comments