மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு முன்னால், மாவட்ட செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
களுதாவளையில் நேற்று இரவு காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பிரதிப்பணிப்பாளர் விமல் ராஜ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தினைக் கண்டித்தே மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் உயரதிகாரிகளால் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது ஆர்ப்பாட்டகாரர்கள் குற்றவாளிகளை உடனே கைது செய், அலுவலர்கள் மீதான தாக்குதல்களை வன்மையாக கண்டிக்கின்றோம் போன்ற சுலோகங்கள் தாங்கிய பதாகைகளையும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேவேளை குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் ஊடகங்கள் கருத்து கோரிய போது எவரும் கருத்து தெரிவிக்க முன்வராதது குறிப்பிடத்தக்கது.
0 Comments