மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் இனந்தெரியாத நபர்களின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேசகுமார் விமல்ராஜ் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி பிரதேசத்தில் நேற்று முன்தினம் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மட்டக்களப்பு காணி சீர்த்திருத்த திணைக்களத்தின் பணிப்பாளர் விமல்ராஜ் படுகாயமடைந்தார்.
அலுவலகப் பணிகளை முடித்துக் கொண்டு களுவாஞ்சிக் குடியிலுள்ள தனது வீட்டிற்குத் திரும்பும் வழியில் விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த விமல்ராஜ், களுவாஞ்சிக்குடி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சம்பவம் தொடர்பில் இதுவரை குடும்ப உறுப்பினர்கள் உட்பட சுமார் 20 பேருரிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்புபொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, புதன்கிமை ஏழு மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே விமல்ராஜ் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாக விமல்ராஜின் மாமியான ஞானம்மா குழந்தைவேல் குறிப்பிட்டார்.
இதேவேளை, மட்டக்களப்பு மாவட்ட காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் மீதான தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் சட்டத்திற்கு முன்னர் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க உறுதியளித்தார்.
கண்டி பிரதேசத்திற்கு நேற்று மாலை விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் மத்தியில் உரையாற்றிய அமைச்சர், படுகாயமடைந்து கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ள நேசகுமார் விமல்ராஜுக்குத் தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
காணி அமைச்சர் – “நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூடு இடம்பெற்றது. அவர் தலைமைக்கு கீழ் உள்ள 400 ஏக்கர் காணியில் பிரதேச மக்கள் 200 பேர்வரை சென்று சட்டவிரோதமாக குடியேற்றத்தை மேற்கொண்டுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதனால் ஏற்பட்ட கோபத்தை அடுத்து அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. அதிர்ஸ்டவசமாக அவரது கையில் சூடு பட்டுள்ளதால் உயிர்பிழைத்துக்கொண்டார். அவரை மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு மாற்றியுள்ளேன். அத்துடன் அவருக்கு பாதுகாப்பையும் அளிக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளேன்.
அவரை சந்திப்பதற்கும் செல்லவுள்ளேன். அந்தக் காலத்தில் நாட்டை அழித்துக்கொண்டிருந்த கீழ்த்தரமானவர்கள் இன்றும் உள்ளனர். இதனை இல்லாதொழித்துவிட வேண்டும்.இந்த சம்பவத்திற்குப் பின்னால் யார் இருக்கின்றனர் என்பதுகுறித்து ஆராய்ந்து வருவதோடு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுப்போம்” என குறிப்பிட்டார்.





0 Comments