ஒருவரின் இழப்பு என்பது மற்றவர்களின் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடும். எனினும், அந்த இழப்பின் வெற்றிடம் என்பது விரைவில் பூரணமாகிவிடும்.
ஆனாலும், ஒரு சிலரின் இழப்பு என்பது அப்படியானதாக இருக்காது. காலம் கடந்து போக போக அந்த நபருடைய இழப்பின் வெற்றிடத்தின் தேவை உணரப்படும்.
அப்படி ஒரு வெற்றிடத்தின் தேவையை தமிழ் மக்களிடத்தில் ஏற்படுத்திவிட்டு சென்ற ஒருவர் தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள்.
தன் இனத்திற்காக தன்னுயிரையும் தியாகம் செய்த தலைவர்களில் ஒருவரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்களின் இனப்பற்றை போற்றும் வகையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனினால் மாமனிதர் என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 1934ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் திகதி பிறந்தர்.
ஆரம்பத்தில் ஒரு ஊடகவியலாளராக இருந்த அவர் 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் தமிழரசுக் கட்சியின் மூலம் அரசியலில் காலடி எடுத்து வைத்தார்.
அத்துடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஊடகவியலாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி அதனுடைய தலைவராகவும் செயற்பட்டு வந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தினுடை பிரச்சினைகளை வெளிகொணரும் வகையில் அவர் எழுதிய கட்டுரைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருந்துள்ளன.
ஆரம்ப காலம் முதல் இலங்கை அரசின் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருந்த தமிழ் மக்களின் விடுதலைக்காக ஆரம்பத்தில் தந்தை செல்வா அவர்கள் அறவழி போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
எனினும், அவ் அறவழி போராட்டம் கை கொடுக்காத நிலையில் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாய சூழ்நிலைக்கு தமிழ் இளைஞர்கள் தள்ளப்பட்ட நிலையில், தந்தை செல்வாவின் வழியில் நின்று போராடிய ஒருவராக ஜோசப் பரராஜசிங்கம் இருந்தார்.
வடக்கு மற்றும் கிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடக்கு முறைகளை வெளி உலகிற்கும், சர்வதேசத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டியவர்களில் ஜோசப் பரராஜசிங்கமும் ஒருவர்.
இதன் காரணமாக பலரின் கவனத்தையும் பெற்றுக்கொண்ட ஜோசப் பரராஜசிங்கம் அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய தேவை அன்றைய காலகட்டத்தில் ஆட்சிப்பீடத்தில் இருந்தவர்களுக்கு உடனடித் தேவையாக இருந்தது.
இதன் காரணமாகவே, மக்களின் ஈடேற்றத்திற்காகத் தன்னைச் சிலுவையில் ஒப்புக் கொடுத்ததாகச் சொல்லப்படும் யேசுபாலன் பிறந்த தினமான கிறிஸ்துமஸ் நாளில் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டார்.
2005ஆம் ஆண்டு மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் நத்தார் நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொண்டிருந்தபோது ஜோசப் பரராஜசிங்கம் தேவாலயத்திற்குள்ளேயே வைத்து சுட்டுக்கொல்லப்பட்டார்.
ஜனநாயக ஆட்சியின் முக்கிய பண்புகளில் ஒன்றென கருதப்படும் கருத்து பேச்சு சுதந்திர உரிமை தமக்கும் இருப்பதாக எண்ணி தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட அடக்கு முறைகளுக்கு எதிராக குரல் கொடுத்த தமிழ் தலைவர் ஒருவர் ஆயுதம் கொண்டு அடக்கப்பட்டார்.
விடுதலைப் புலிகள் அமைப்புடன் நல்லுறவைப் பேணி வந்த ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் 2004ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அமைப்புக்குள் ஏற்பட்ட பிளவையடுத்து உயிர் அச்சுறுத்தலை எதிர்நோக்கியிருப்பதாக வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து தனது பாதுகாப்பு கருதி சிறிது காலம் கொழும்பில் தங்கியிருந்த அவர், நத்தார் தின நள்ளிரவு ஆராதனையில் கலந்து கொள்வதற்காகவே மட்டக்களப்புக்கு திரும்பியிருந்தார்.
அன்பையும் சமாதானத்தையும் வலியுறுத்த கடவுள் மனிதனாக மண்ணில் அவதரித்த அந்த நன்நாளில் தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்த தலைவர் ஒருவர், இனந்தெரியாத நபர்களினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
எனினும், இது நன்கு திட்டமிடப்பட்ட படுகொலை என பலரும் வலியுறுத்தி வந்தனர். குறிப்பாக ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்ட 10ஆம் ஆண்டு நினைவு நிகழ்வின் போது உரையாற்றிய மட்டக்களப்பு ஆயர் பொன்னையா ஜோசப் அவர்களின் கருத்து கவனிக்கதக்க ஒன்று.
ஜோசப் ” மொழிப்பற்றும் கொள்கையில் உறுதிமிக்க அரசியல் வாதியாக திகழ்ந்த அவர், தமிழ் மக்களுக்கு எதிரான இனப் படுகொலைகளை சர்வதேச அரங்கிற்கு கொண்டு சென்றவர்.
இதன் காரணமாக அவர் நன்கு திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டுளார் என தான் நம்புவதாக ஆயர் பொன்னையா ஜோசப் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்.
ஜனநாயகப் பண்புகளுக்கமைய போராடிய தமிழ் தலைவர்கள் பலரும் அழிவை சந்தித்தமைக்கான வரலாறுகள் நிறையவே உண்டு. அதற்கு ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல.
எவ்வாறாயினும், இந்த படுகொலைக்கு பின்னால் பலரும் தொடர்புப்பட்டிருப்பதாக தெரிவித்த போதிலும், முன்னாள் பிரிதியமைச்சர், விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோரின் பெயர்கள் சற்று அழுத்தமாக பதியப்பட்டது.
இவ்வாறான பின்னணியிலேயே, இந்தக்கொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கழிந்த நிலையில் 2015ஆம் ஆண்டு 10 மாதம் 11ஆம் திகதி கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று இந்தகொலை வழக்கு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு வெகு விரைவில் நீதி கிடைக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
இது இவ்வாறு இருக்க, என்ன தேவைக்காக..? என்ன நோக்கத்திற்காக..? ஜோசப் பரராஜசிங்கம் அவர்கள் தன்னுயிரை தியாகம் செய்தாரோ, அந்த நோக்கமும், தேவையும் இன்று முன்னெடுக்கப்படுகின்றதா என்ற சந்தேகம் பலரின் மத்தியிலும் எழுத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய பிரமுகர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார் ‘விழி திறக்காதவர்களுக்காக திரு.ஜோசப் தன் விழிகளை மூடியிருக்கிறார்’ என்று. எனினும், இன்று பலர் விழித்திருந்தும் பார்வையற்றவர்களாக இருக்கின்றார்கள் என்பது மட்டும் உண்மை.

0 Comments