நடைபெற்று முடிந்த நான்காவது இளைஞர் பாராளுமன்ற தேர்தலில் 85 வீத வாக்களிப்பினை பதிவு செய்து மட்டக்களப்பு மாவட்டம் தேசிய ரீதியில் சாதனை படைத்துள்ளது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் ஜனாப் எம்.எல்.எம்.என்.நைறூஸ் இதனை தெரிவித்துள்ளார்.
தனி நபர் அதி கூடிய விருப்பு வாக்குகளை பெற்ற வெற்றியாளர்கள் வரிசையிலும் முதலாம் இரண்டாமிடங்களையும் மட்டக்களப்பு மாவட்டமே தக்க வைத்துள்ளது.இது தொடர்பில் அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அதிகூடிய வாக்குப்பதிவினை செய்த மாவட்டமாக மட்டக்களப்பு மாவட்டம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.
முதலாமிடம் செல்வன் மனேகரன்சுரேஸ்காந் (கல்குடா தேர்தல் தொகுதி ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு) பெற்றுக்கொண்ட வாக்குகள் 3264, இரண்டாமிடம் செல்வி அருள் நாயகம் தர்ஷிக்கா (மட்டக்களப்பு தேர்தல் தொகுதி மண்முனை மேற்கு பிரதேசம்) பெற்றுக் கொண்ட வாக்குகள் 1862.
இந்தச் சாதனையை நிகழ்த்த முழு மூச்சாகப் பாடுபட்ட அனைவருக்கும் நன்றியினையும், பாராட்டினையும் தெரிவித்துக் கொள்வதாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய ரீதியில் வாக்களிப்பு வீதத்தில் இரண்டாவதாக மொனராகலை மாவட்டமும் , மூன்றாவதாக அம்பாரை மாவட்டமும் நான்காவதாக முல்லைத்தீவு மாவட்டமும் காணப்படுகிறது.
அத்துடன், மாகாண ரீதியில் கிழக்கு மாகாணமும், வடக்கு மாகாணமும் முதலாம் இரண்டாமிடங்களை பெற்றிருப்பதும் விசேடமாக குறிப்பிடத்தக்கது.
0 Comments