உள்ளூராட்சி தேர்தல் தொடர்பான எல்லை நிர்ணய அறிக்கை எல்லை நிர்ணய குழுவினால் நேற்று 27ஆம் திகதி மாகாண சபைகள் உள்ளூராட்சி அமைச்சிற்கு கையளிப்பதற்கு திட்டமிடப்பட்டிருந்த போதும் 5 மாவட்டங்களின் மொழிபெயர்ப்புப் பணிகள் நிறைவடையாததால் அந்த அறிக்கையை பிறிதொரு தினத்தில் கையளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அசோக பீரிஸ் தலைமையிலான எல்லை நிர்ணய மேன்முறையீட்டு குழு நேற்று பதில் அமைச்சர் பிரியங்கர ஜயரத்தின, அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி ஆகியோரை அமைச்சில் சந்தித்தது. அறிக்கையை நேற்று கையளிக்க இருந்த போதும் அதனை கையளிக்க முடியாது போனது பற்றி மேன்முறையீட்டு குழு இங்கு விளக்கமளித்துள்ளது.
வடக்கிலுள்ள 5 மாவட்டங்களினதும் தமிழ் மொழிபெயர்ப்பு பூர்த்தியாகாததோடு குருநாகல் மாவட்டத்தின் சில தொகுதிகளின் மொழிபெயர்ப்பு பணிகளும் நிறைவடையவில்லை என அசோக பீரிஸ் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை அந்த அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குமாறு அந்த ஆணைக்குழு கேட்டுக்கொண்டுள்ளது.
பாராளுமன்ற அமர்வின்போது இதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படும் என்று பிரதமர் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறிப்பிட்ட அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுடன் ஆணைக்குழு பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்பதால் பிரதமரிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் சந்தர்ப்பத்தில் கட்சித்தலைவர்கள் கலந்துகொள்ளும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments