தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாணாமல் காலம் தாழ்த்திக் கொண்டிருப்பதனாது தேசத்துக்கு செய்யும் துரோகம் எனவும் அவ்வாறாக தீர்வுகாணும் முயற்சிகளை குழப்புவதும் எதிர்கால சந்ததியினருக்கு இழைக்கும் துரோகமே எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் நடைபெற்ற தேசிய கலந்துரையாடல்கள் மற்றும் தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க அமைச்சு மீதான வரவு-செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தேசிய பிரச்சினைக்கு தீர்வொன்றை காணும் நோக்கில் நாம் முன்னெடுக்கும் முயற்சிகள் தொடர்பாக சிலர் தவறான வகையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். புதிய அரசியலமைப்பொன்றை இயற்றும் எமது முயற்சிகளை பார்த்து பரிகாசித்து மற்றும் அவமதித்து பேசும் செயற்பாடுகளானது இந்த நாட்டில் மீண்டுமொரு இரத்தகளரி இடம்பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பை அவர்கள் கொண்டிருப்பதையே வெளிப்படுத்துகிறது.
யுத்தம் பற்றிய அனுபவம் எம் அனைவருக்கும் இருக்கிறது. யுத்தம் முடிவடைந்துவிட்ட போதிலும் பிரச்சினை இன்னும் முடிவுக்கு வரவில்லை. நாட்டை பிளவுப்படுத்தும் கருத்துக்களும் இன்னும் முடிவுக்கு கொண்டு வரப்பட்டிருக்கவில்லை. உண்மையான சமாதானத்தை ஏற்படுத்த தனித் தமிழீழம் பற்றி பேச்சுக்களை சர்வதேச ரீதியில் தோற்கடிக்க வேண்டும்.
புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வெற்றிகரமான பிரவேசமொன்றுக்கு நாம் வந்துள்ளோம். புதிய அரசியலமைப்பின் மூலம் நாட்டை பிளவுப்படுத்த அரசாங்கம் முயற்சிப்பதாக பிக்குமார்கள் மத்தியில் சென்று தவறான கருத்தை பரப்புகின்றனர். பௌத்த மதத்திற்குரிய முதன்மை அந்தஸ்த்தை நீக்கப்போவதாகவும் பொய்யான பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர்.
ஆதிகாரத்தை தக்க வைத்துக்கொள்வதற்கும் அதிகாரத்தை பயன்படுத்தி தப்பித்துக் கொள்வதற்கும் கடந்த காலத்தில் இநத் பிரச்சினையை பயன்படுத்திய சில தலைவர்கள் இன்று எதிர்காலத்தில் அதிகாரத்திற்கு வரும் எதிர்பார்ப்புடனான குறுகிய அரசியல் நோக்கத்திற்காக, பிரச்சினையை தீர்ப்பதற்கான தற்போதைய அரசின் உண்மையான முயற்சிகளை எந்தவொரு அடிப்படை ஆதாரங்களுமின்றி பொய்யான வார்த்தைகளை பயன்படுத்தி குழப்புவதற்கு முயற்சிக்கின்றனர். இந்த பிரச்சினை தீர்க்கப்படாமல் போகும் பட்சத்தில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாரதூரமான விளைவுகளுக்கு இவர்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
ஆகவே, ஏற்கனவே அதிகாரத்தை இழந்து எதிர்காலத்தில் அதிகாரத்துக்கு வருவதற்கான எதிர்பார்ப்புடன் செயற்படுபவர்கள் எமது உண்மையான முயற்சிகளை குழப்புவார்களாயின், எதிர்காலத்திலும் அவர்களால் அதிகாரத்து வர இயலாமலேயே போகும். என அவர் தெரிவித்துள்ளார்.
0 Comments