நாட்டில் இனிமேல் இனவாதம் பேசும் அனைவருக்கும் எதிராக, தயவு தாட்சண்யம், இனமத பேதங்கள் பார்க்காமல், நடவடிக்கை எடுக்க பொலிஸ் மா அதிபருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டார்.
பாதுகாப்பு கவுன்சில் நேற்று (17) வியாழக்கிழமை இரவு எட்டு மணியிலிருந்து பத்து மணிவரை நடைபெற்ற கூட்டத்தில் நாட்டில் இனவாதத்தை தூண்டிவிடும் நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.
இதன்போது அமைச்சர்கள், அதிகாரிகள் அனைவரது கருத்துகளையும் செவிமடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு உத்தரவிட்டார் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.
இது தொடர்பாக ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது,
முகநூல் கணக்குகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் இனவாதக் கருத்துகளை செய்திகளாகவோ, கருத்து பதிவுகளாகவோ செய்பவர்களை கண்காணித்து, அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தொழிட்நுட்ப பொறிமுறை ஒன்றை உருவாக்க வழி செய்யுமாறும், ஜனாதிபதி தன் செயலாளருக்கு பணித்தார்.
அத்துடன் இனவாத கருத்துகளுக்கு எதிராக புதிய சட்டமூலத்தை உருவாக்குமாறு, நீதி அமைச்சருக்கும் பணிப்புரை விடுத்தார்.
புதிய சட்டமூல வரைபு தயாராகி கொண்டு இருப்பதாகவும், அதுவரையில் இப்போது இருக்கும் குற்றவியல் தண்டனை கோவை சட்ட மூலத்தின் அடிப்படையிலும் ஓராண்டு சிறைத்தண்டனை வரை வழங்க முடியும் என நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச விளக்கமளித்தார்.
அப்படியானால், புதிய சட்டம் வரும்வரை காத்திருக்காமல், உடன் செயல்படும்படி, ஜனாதிபதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
இரண்டு மணித்தியாலங்களாக நடைபெற்ற இந்த கூட்டத்தில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்கள், விஜேதாச ராஜபக்ச, சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன், சாகல ரத்நாயக்க, சுவாமிநாதன், ருவன் விஜயவர்தன, எம்பி ரத்தின தேரர், ஜனாதிபதி செயலாளர், பொலிஸ் மா அதிபர், முப்படை தளபதிகள், சட்ட ஒழுங்கு அமைச்சு செயலாளர், பாதுகாப்பு அமைச்சு செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments: