தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள தாழமுக்கமானது தற்போது இலங்கையின் கிழக்காக திருகோணமலையிலிருந்து 680 கிலோமீற்றர் தூரத்திலும் சென்னையிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,050 கிலோமீற்றர் தூரத்திலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு-தென்கிழக்காக 1,020 கிலோமீற்றர் தூரத்திலும் மையங்கொண்டுள்ளது.
வானிலை அவதான நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மேலும் வலுவடைந்து வலுவான தாழமுக்கமாக உருமாறி, வடக்குமேற்குத் திசையில் நகர்ந்து பின்னர் தென்இந்தியா நோக்கி நகர்ந்து, இந்தியாவின் வேதாரணியத்திற்கும் சென்னைக்கும் இடையே அடுத்த 24 மணி நேரத்தில் (எதிர்வரும் 02ம் திகதி காலை) ஊடறுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் தாழமுக்கத்தின் தாக்கத்தினால் வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களில் எதிர்வரும் 02ம் திகதிவரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் சப்ரகமுவ, மத்திய, ஊவா மாகாணத்தின் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களுக்கான வானிலை முன்னறிவித்தல்:
இந்தத் தாழமுக்கம் காரணமாக காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் (இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென்கிழக்கு கடல் பிராந்தியங்கள்) மழை காணப்படும்.
கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 30 கிலோ மீற்றர் முதல் 40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் வடமேற்கு திசையிலிருந்து காற்று வீசும்.
இந்தக்காற்றின் வேகமானது சில சந்தர்ப்பங்களில் காங்கேசன்துறை முதல் திருகோணமலை, மட்டக்களப்பு ஊடான பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில மணித்தியாலத்திற்கு 50 கிலோ மீற்றர் முதல் 60 கிலோ மீற்றர் வழiயான வேகத்தில் அதிகரித்து வீசுவதன் காரணத்தினால் இந்த கடல் பிராந்தியங்கள் சற்றுக் கொந்தளிப்பாகவும் காணப்படும்.
எனவே மீனவர் சமூகம் மற்றும் கடல்சார் தொழிலாளர்கள் தமது கடல் நடவடிக்கைளின்போது அவதானம் செலுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.
0 Comments