மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புணாணை கிழக்குப் பகுதியில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற கிழக்கு மாகாண காணி ஆணையாளர் மேற்கொள்ளும் முயற்சியினை தடுத்து நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன் கிழக்கு மாகாண ஆளுனரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுனருக்கு பாராளுமன்ற உறுப்பினர் எழுதியுள்ள கடிததத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீண்ட காலமாக வடக்கு கிழக்கு மண்ணில் பெரும் துன்பியலை எதிர் கொண்ட தமிழ் சமூகம் தற்போதய நல்லாட்சி அரசில் ஓரளவு நிம்மதியுடன் வாழ முற்படும் இவ்வேளையில் முன்பு இருந்த மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சில அதிகாரிகள் மீண்டும் இன முறுகலை ஏற்படுத்த முயற்சி செய்து வருகின்றனர்.
இந்த வகையில் தற்போதய கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒன்றிணைந்த எதிர் கட்சியினரின் ஆலோசனையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள மக்கள் வாழாத பகுதிகளில் சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி இன முறுகலை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புணாணை கிழக்குப் பகுதியில் 178 சிங்கள குடும்பங்களை குடியேற்ற முயற்சி செய்து வருகின்றார். இதற்கு கிழக்கு மாகாண காணி அமைச்சரும் உறுதுணையாக உள்ளார். பொதுவாக இப் பகுதியில் புணாணையில் 05 சிங்களக்குடும்பங்களும், நாவலடி முற்சந்தியில் இரண்டு குடும்பங்களுமே வாழ்ந்துள்ளது. ஆனால் இன்று 29 சிங்கள குடும்பங்கள் புணாணையில் திட்டமிட்டு குடியேற்றப்பட்டுள்ளது.
அது தவிர எப்போதும் இப்பகுதியில் வாழாத சிங்கள குடும்பங்கள 178ஐ இப்பகுதியில் யுத்த சூழலுக்கு முன் வாழ்ந்ததாக கூறி போலியான காணி ஒப்பங்களை சிங்களத்தில் தயாரித்து வழங்கியுள்ளனர். இப்பகுதியில் சிங்கள குடும்பங்கள் வாழ்ந்திருந்தால் இவர்களை குடியேற்ற வேண்டியது அவசியம் ஆனால் இப் பகுதியில் சிங்கள குடும்பங்கள் வாழவில்லை. இதை இப்பகுதிக்கு அண்மையாக வாழும் தமிழ்,முஸ்லிம் குடும்பங்கள் யாவும் அறிவர்.
ஆனால் திடீர்என 178 குடும்பம் ‘பேமிற்’ உடன் வந்துள்ளது.இது சிங்களத்தில் உள்ளது மட்டக்களப்பு கச்சேரியில் சிங்களத்தில் பேமிற் வழங்குவதில்லை இது போலியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. என்பதை நீதி நியாயத்தில் கடமை புரியும் அனைத்து அரசியல் வாதிகள்,அதிகாரிகள் அறிவர். குறிப்பாக இப் பகுதியில் 178 சிங்கள குடும்பம் வாழ்ந்து இருந்தால் சிங்கள பெயருடன் ஒரு கிராமம் இருந்திருக்கும். அது தவிர கீழ்வரும் விடயங்கள் அவர்களை உறுதிப்படுத்த கூடியதாக அமையும்.
1. 1981ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு
2. கிராமத்தின் சிங்களப் பெயர்
3. இங்கு பிள்ளைகள் பிறந்திருந்தால் பிறப்புச் சான்றிதழ் பத்திரம் உறுதிப்படுத்தும்
4. விவசாயக் காணிஆனால் Pடுசு இருக்க வேண்டும்.
5. உதவி அரசாங்க அதிபர் பிரிவி;ன் கீழான பதிவுகள் ஏனையவைகள்
மேற்தரப்பட்ட எவையும் இவர்களிடம் இல்லை பொய்யான காணி ஒப்பத்துடன் வந்துள்ளனர். இவர்கள் இரகசியமாக புணாணை கிழக்கு பகுதியின் கேணி நகர் பகுதிக் கட்டிடத்தில் 08-11-2016 அன்று அழைத்து கிழக்கு மாகாண காணி ஆணையாளர் ஒருவருக்கு ஆறு ஏக்கர் என்ற வீதத்தில் காணி வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
தற்போதய அரசாங்கம் சமாதான சூழலை கட்டி எழுப்பி நல்லாட்சி மேற்கொள்ள வந்த வேளையில் இவ்வாறான செயற்பாடு இடம்பெறுகின்றது.இவ்விடயமாக தங்களிடம் கிழக்கு மாகாண பண்பாட்டு அமைச்சின் கலை நிகழ்வில் தங்களுக்கு நேரடியாக சுட்டிக்காட்டியுள்ளேன்.
கிழக்கு மாகாணத்தில் நீதி, நியாயம் தர்மத்தின் அடிப்படையில் கடமை புரிவீர்கள் என்ற நம்பிக்கையிலேயே மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், மாண்புமிகு பிரதமர் அவர்களும் தங்களை கிழக்கு மாகாண ஆளுனராக நியமித்துள்ளனர் என உணர்கின்றேன்.
எனவே தாங்கள் நீதியாக செயற்படுவீர்கள் என நம்புகிறோம் .ஆகவே கிழக்கு மாகாண காணி ஆணையாளரின் செயற்பாடடை தடுத்து நிறுத்தி உதவுமாறு அன்பாக வேண்டுகின்றேன்.பதிலை எதிர்பார்க்கின்றேன்.
இந்த கடிதத்தின் பிரதிகள் ஜனாதிபதி,பிரதமர்,எதிர்க்கட்சி தலைவர்,கிழக்கு முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள்.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
0 Comments