Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மறைக்கப்படும் போர் இரகசியங்கள் என்ன? பொன்சேகா – குணரட்ண மோதல் எழுப்பும் கேள்வி

கொழும்பு பண்டாரநாயக்க மகாநாட்டு மண்டபத்தில் 10 நாட்களாக நடைபெற்ற புத்தகக் கண்காட்சி முடிவுக்கு வந்துவிட்டது. இம்முறை புத்தகக்கண்காட்சியைக் கலக்கியது மேஜர் ஜெனரல் கமல் குணரட்ண எழுதிய ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூல்தான். ஆயிரக்கணக்கானவர்கள் வருகைதந்த இந்த புத்தகக் கண்காட்சியில் குறித்த நூலுக்கே இவ்வருடம் அதிக கிராக்கி இருந்தது. இராணுவ சேவையிலிருந்து கடந்த மாதம்தான் ஒய்வுபெற்ற கமால் குணரட்ண எழுதிய இந்த நூலைப் பெற்றுக்கொள்வதற்காக பெருந்தொகையான மக்கள் ‘கியூ’ வில் நின்றதையும் இங்கு காணமுடிந்தது.
ஆங்கிலத்திலும், சிங்களத்திலும் வெளிவந்த இந்தநூலின் முதல் பதிப்பு கண்காட்சி ஆரம்பமாகி 30 நிமிடங்களுக்குள்ளாகவே முடிந்துவிட்டது. அடுத்துவந்த தினங்களில் அச்சகத்திலிருந்து நேரடியாகவே இந்த நூலின் நூற்றுக்கணக்கான பிரதிகள் கண்காட்சி மண்டபத்துக்குக் கொண்டுவரப்பட்டன. அப்படியிருந்தும் இந்த நூலைப் பெற்றுக்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியவர்கள் பலர். இந்தவருட கண்காட்சியில் வாசகர்களைப் அதிகளவுக்கு கவர்ந்துகொண்ட நூல் என்ற முறையில் இது சாதனையை நிலைநாட்டியுள்ளது. இலங்கையில் இதற்கு முன்னர் இந்தளவுக்குப் பரபரப்பாக எந்தவொரு நூலும் விற்கப்படவில்லை.
Road To Nandikadalவிடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இலங்கை அரச படைகளுக்கும் இடையிலான 30 வருடகாலப் போரை மையப்படுத்திய நூல்கள் பல ஏற்கனவே வெளிவந்திருந்தாலும் கூட, இந்தளவுக்குப் பரபரப்பை ஏற்படுத்திய நூல்கள் எதுவும் இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ‘கோதாவின் யுத்தம்’ என்ற தலைப்பில் ஒரு நூல் வெளிவந்திருந்தது. இறுதிக்கட்டப் போர் இடம்பெற்ற காலத்தில் பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோதாபாய ராஜபக்‌ஷவை முன்னிலைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட நூல் இது. மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக்காலத்திலேயே அது வெளிவந்திருந்து. அதற்குப் பின்னர் அதிகளவுக்கு பரபரப்பை ஏற்படுத்தியிருப்பது ‘நந்திக்கடலுக்கான பாதை’தான்.
புத்தகமும் அரசியலும்
‘நந்திக் கடலுக்கான பாதை’ நூல் வெளியீட்டுடன் பெருமளவு அரசியலும் சம்பந்தப்பட்டிருக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான போரில் இலங்கைப் படையினர் பெற்றுக்கொண்ட ‘வெற்றி’ சிங்கள மக்கள் மத்தியில் இப்போதும் ‘விற்பனையாகக் கூடிய’ சரக்காக இருக்கின்றது என்பதை இந்த நூலுக்கு கிடைத்த பெரும் வரவேற்பு உணர்த்துகின்றது.  இந்த நூல் மூலம் கமால் குணரட்ண சிங்கள மக்கள் மத்தியில் ‘ஹீரோ’வாகி விடலாம் என்ற அச்சத்தில்தான் முன்னாள் இராணுவத் தளபதியும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உடனடியாகவே களத்தில் குதித்திருக்கின்றார்.
08கொழும்பு ஆனந்தா கல்லூரி மண்டபத்தில் இடம்பெற்ற இந்த நூலின் வெளியீட்டு விழாவில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும், பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷவும் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டிருந்தது, கமால் குணரட்ணவின் பின்னணியில் இருந்திருக்கக்கூடிய அரசியலையும் வெளிப்படுத்தியது. அதாவது, ராஜபக்‌ஷக்களின் முகாமிலேயே கமால் குணரட்ண இருக்கின்றார் என்பதை இது உணர்த்தியிருக்கின்றது. முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை இங்கு காணமுடிவில்லை. தற்போது சேவையில் உள்ளவர்களில் ஒரேயொரு இராணுவத் தளபதிதான் இந்த நிகழ்வுக்கு வந்திருந்தார். மற்றவர்கள் வருகை தராமைக்கு காரணம் என்ன என்பதை வாசகர்களுக்குச் சொல்லத் தேவையில்லை.
நூலின் முதற்பிரதியைப் கமால் குணரட்ணவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மகிந்த
நூலின் முதற்பிரதியைப் கமால் குணரட்ணவிடமிருந்து பெற்றுக்கொள்ளும் மகிந்த
கமால் குணரட்ண இராணுவச் சேவையிலிருந்து ஓய்வு பெற்ற மறுதினமே இந்த நூல் வெளியீடு இடம்பெற்றது. சேவையில் இருக்கும் காலப்பகுதியில் இராணுவ அதிகாரிகள் எவரும் நூல் எதனையும் வெளியிடக்கூடாது என்ற கட்டுப்பாடு இருக்கின்றது. இறுதிப்போர் இடம்பெற்ற காலப்பகுதியில் கமால் குணரட்ண 53 வது படைப்பிரிவின் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார். இந்தப் படைப்பிரிவே விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனைக் கொலை செய்து போரை முடிவுக்குக்கொண்டுவந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. அதனால்தான் குணரட்ண தனது நூலில் என்ன சொல்கின்றார் என்பதை அறிவதில் உள்நாட்டில் மட்டுமன்றி சர்வதேச ரீதியாகவும் பெரும் ஆர்வம் காணப்பட்டது. தன்னுடைய 30 வருடகால இராணுவப் பணியை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை அவர் எழுதியிருக்கின்றார்.
போர்க் குற்றங்கள்
இறுதிக்கட்டப் போரில் இராணுவத்தினர் நடந்துகொண்டதை நியாயப்படுத்தும் வகையிலேயே கமால் குணரட்ணவின் நூல் உள்ளது. குறிப்பாக, போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறுகின்றார். பிரபாகரனின் இறுதி மகன் பாலச்சந்திரன் கொல்லப்பட்டமை தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என அவர் குறிப்பிடுகின்றார். அதேவேளையில், முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இந்தப் போரின்போது வழங்கிய பங்களிப்பை அவர் ஏற்றுக்கொள்கின்றார்.  மறுபுறத்தில் சலத்பொன்சேகா கடுமையான முறையில் நடந்துகொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். போரின் இறுதிநாளான மே 18 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கைப்பற்றவில்லை என்பதற்காக சரத் பொன்சேகா தன்னைக் கடிந்துகொண்டதாகவும் நூலாசிரியர் குறிப்பிடுகின்றார்.
போர்க்களத்தில் பாலச்சந்திரனின் சடலம்
போர்க்களத்தில் பாலச்சந்திரனின் சடலம்
கமால் குணரட்ணவின் நூல் பொன்சேகாவுக்குச் சீற்றத்தை ஏற்படுத்தியிருப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. “போர் இரகசியங்கள்” பலவற்றை கமால் குணரட்ண வெளியிட்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டும் பொன்சேகா, இதற்காக அவர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாகவும் தெரிவித்திருக்கின்றார். சிங்கள வார இதழ் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில், “போர் குறித்து குறுகிய அறிவைக்கொண்டவராகவே குணரட்ண இருந்தார்” எனவும், பிரபாகரன் கொல்லப்பட்டபோது அவர் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்டார் எனவும் குற்றஞ்சாட்டுகின்றார். முன்னாள் இராணுவத் தளபதிக்கும் குணரட்ணவுக்கும் இடையில் நல்ல உறவு இருக்கவில்லை என்பதை இது வெளிப்படுத்துகின்றது.
கமால் குணரட்ண
கமால் குணரட்ண
பொன்கோவின் குற்றச்சாட்டுக்களுக்கு குணரட்ண பதிலளித்திருந்தார். போர் இரகசியங்களை வெளியிடுவது தன்னுடைய நோக்கமல்ல எனவும், உண்மைகளையே தான் வெளியிட்டிருப்பதாகவும் குணரட்ண சொல்லியிருக்கின்றார். இரகசியங்களை வெளியிட்டுள்ளதாக குணரட்ண மீது சுட்டுவிரலை நீட்டும் பொன்சேகா, அந்த இரகசிங்கள் என்ன என்பதைச் சொல்லவில்லை. குணரட்ணவின் நூலை தான் படிக்கவில்லை எனக் குறிப்பிடும் பொன்சேகா, தனக்கு நம்பிக்கையானவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையிலேயே தான் கருத்துக்களை வெளியிட்டதாகவும் கூறியிருக்கின்றார். ஆக, குற்றச்சாட்டை முன்வைக்கும் பொன்சேகாவினால், அதற்கான அதற்கான ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. ஆக, எழுந்தமானமாகத்தான்  “போர் இரகசியங்களை குணரட்ண வெளிட்டுள்ளார்”  என்ற குற்றச்சாட்டை பொன்சேகா முன்வைத்தரா?
இதற்கு குணரட்ண கொடுத்திருக்கும் பதில் மேலும் பல கேள்விகளை எழுப்புவதாக உள்ளது. போர் இரகசியங்கள் எதனையும் தான் வெளியிடவில்லை எனக் குறிப்பிடும் அவர், போர் இகசியங்கள் அனைத்தும் தான் மரணிக்கும் போது தன்னுடைய கல்லறையில் புதைக்கப்பட்டுவிடும் எனக் கூறியிருந்தார். போர் முடிவுக்கு வந்து இப்போது ஏழரை வருடங்கள் முடிந்துவிட்டது. போர் குறித்து பல நூல்கள் முடிவுக்கு வந்துவிட்டது. இந்திய இராணுவம் விடுதலைப் புலிகளுடன் நடத்திய போர் குறித்து பல நூல்கள் வெளிவந்துவிட்டது. இந்திய இராணுவத்தின் தளபதிகளாக இருந்த பலர் கூட இவ்வாறான நூல்களை எழுதியிருந்தார்கள். உலகப் போர் குறித்துக்கூட பல நூல்கள் வெளிவந்தன. அவற்றில் பல போர் இரகசியங்கள் வெளியிடப்பட்டன. அவற்றை மக்களுக்கு மறைக்கவேண்டிய அவசியம் எதுவும் இல்லை. எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு இந்த வரலாறுகள் அவசியமாகின்றன. ‘நந்திக் கடலுக்கான பாதை’யில் இலங்கை இராணுவம் நடத்திய போரில் மறைக்கப்பட வேண்டிய போர் இரகசியங்கள் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. போர்க் குற்றங்கள் குறித்த தகவல்களாக மட்டுமே அவை இருக்க முடியும். இதில் கமால் குணரட்ண அதிகளவுக்கு ‘பில்ட் அப்’ கொடுப்பதாகவே தோன்றுகின்றது.
பிரபாரன்: அடையாள அட்டை
சர்ச்சைக்குரிய மற்றொரு விடயம் பிரபாரனின் அடையாள அட்டை. நந்திக் கடலில் மீட்கப்பட்ட இந்த அடையாள அட்டையை நினைவுச் சின்னமாக தான் வைத்திருந்ததாக கமால் குணரட்ண குறிப்பிடுகின்றார். பிரபாகரனைக் கொன்றது தமது படைப்பிரிவே என்பதை நிரூபிப்பதற்கான ஆதாரமாக இதனை அவர் வைத்திருந்திருக்கலாம். இதனை அவர் இராணுவதர் தலைமையகத்துக்கு அனுப்பிவைக்காதததும் பொன்சேகாவின் சீற்றத்துக்குக் காரணம். இதனை அனுப்பிவைக்குமாறு அப்போது தான் கேட்டுக்கொண்டதாகவும், தன்னுடைய கட்டளைக்கு குணரட்ண கட்டுப்படவில்லை என்பதை அவர் இப்போது ஒப்புக்கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கும் பொன்சேகா, இதற்காக நடவடிக்கை எடுக்குமாறு இராணுவத் தளபதியை தான் தான் கேட்டுக்கொள்ளப்போதவாகவும் எச்சரித்திருக்கின்றார்.  இதனைவிட வேறு பல சந்தர்ப்பங்களிலும், தன்னுடைய கட்டளையை கமால் குணரட்ண ஏற்றுக்கொள்ளவில்லை என பொன்சேகா குறிப்பிடுகின்றார்.
பிரபாகரனின் அடையாள அட்டை
பிரபாகரனின் அடையாள அட்டை
ஆனால், அவ்வாறான நடவடிக்கை ஒன்றுக்கு இராணுவத் தலைமை இன்றைய சூழ்நிலையில் தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான். தனக்கு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை எனச் சொல்லிக்கொண்டு இந்த நூலை கமால் குணரட்ண எழுதியிருக்கின்றார். அத்துடன், ராஜபக்‌ஷக்கள் அவருக்குப் பின்பலமாக நிற்கின்றார்கள். குணரட்ணவுக்கு அரசியல் நோக்கங்கள் இல்லாமலிருக்கலாம். ஆனால், ராஜபக்‌ஷக்களுக்கு அரசியல் நோக்கங்கள் இல்லாமலில்லை. பொன்சேகாவுக்கு எதிராக குணரட்ணவைப் பயன்படுத்துவதற்கு அவர்கள் தயங்கப்போவதில்லை. குணரட்ண மீது நடவடிக்கை எடுக்க முனைந்தால் ராஜபக்‌ஷ்களுக்கு அல்லது கூட்டு எதிரணிக்குத்தான் அது வாய்ப்பாகிவிடும். அவ்வாறான ஒரு வாய்ப்பைத்தான் அவர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றார்கள் என்பதும் உண்மை. அதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திழக்கொடுத்துவிடப்போவதில்லை.
குணரட்ணவின் நூல் வெளியீடும் அது தொடர்பில் இடம்பெறும் சர்ச்சைகளும் வெளிப்படுத்தும் விடயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வது அவசியம். வெற்றிவாதத்திலிருந்து சிங்களவர்கள் வெளிவரவில்லை என்பதை இது உணர்த்துகின்றது. அதனைவைத்து அரசியல் நடத்தலாம் என்ற நிலை நீடிக்கின்றது. தாம் புதிதாக அமைக்கப்போகும் கட்சிக்கு இராணுவ முன்னாள் தளபதிகளை இணைத்துக்கொள்வதற்கு ராஜபக்‌ஷ தரப்பினர் திட்டமிட்டுச் செயற்படுவதாகச் செய்திகள் வந்துள்ளன. இதனைவிட முன்னாள் இராணுவத்தினர் மற்றொரு கட்சியை தனியாக அமைத்துக்கொள்ள முற்படுகின்றார்கள். இவர்கள் பின்னர் மற்றொரு பெரிய கட்சியுடன் பேரம் பேசி  பின்னர் கூட்டணி அமைத்துக்கொள்ளலாம். சில காலத்துக்கு முன்னர் பிக்குகள் கட்சி ஒரு பாஷனாக சிங்களவர்கள் முன்பாக வந்தது. இப்போது முன்னாள் இராணுவத்தினரின் கட்சி!
இவை ஒரு விடயத்தை தெளிவாக உணர்த்துகின்றது. அதாவது, புதிய அரசியலமைப்புக்கான தயாரிப்புக்கள் இடம்பெறும் நிலையில், இந்தப் போக்கு அதில் செல்வாக்கைச் செலுத்துவதாக அமையும்.  அரசியலில் இராணுவ மேலாதிக்கமும், வெற்றிவாதமும் செல்வாக்குச் செலுத்தும் நிலையில் நியாயமான தீர்வை தமிழர்கள் எதிர்பார்க்க முடியுமா என்பதுதான் இன்றைய கேள்வி!
04

Post a Comment

0 Comments