Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகம் பலமாக இருந்தாலே நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பலத்தினைக்கொடுக்கும்

இணைந்த வடக்கு கிழக்கில் தமிழ் பேசும் சமூகம் பலமான நிலையில் இருக்கும்போதே இந்த நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள சிறுபான்மை மக்களுக்கு பலத்தினைக்கொடுக்கும் என கிழக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுபாணி தெரிவித்தார்.
கிழக்கு மாகாண இலக்கிய விழா மட்டக்களப்பு மகாஜனக்கல்லூரி மண்டபத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமாகி நேற்ற சனிக்கிழமை மாலை நிகழ்வுடன் நிறைவுபெற்றது.
நேற்று சனிக்கிழமை மாலை நிகழ்வு கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் அமைச்சர் சி.தண்டாயுதபாணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
ஒரு சிறிய தேசிய இனமான நாங்கள் எமது சக்தி மீறிய வகையில் அதிக விலையினை நாங்கள் கொடுத்துள்ளோம்.ஆனால் இன்றும் எமது பிரச்சினைக்கான தீர்வுக்காக உழைக்கவேண்டிய நிலையிலேயே நாம் உள்ளோம்.அந்தவகையில் எமது அரசியல் தலைமைகள் நிதானமான விட்டுக்கொடுப்பான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் நாட்டினில் நீண்டகாலமாக இருந்துகொண்டிருக்கின்ற அரசியல் பிரச்சகைளுக்கு தீர்வு காண்பதற்கு முயற்சிகளை எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.
சிலர் இந்த இணக்க அரசியல் பற்றி தமிழ் பேசும் மக்களின் உண்மையான பிரதிநிதிகள் இப்பொழுது அரசோடு மேற்கொண்டிருக்கின்ற இணக்கமான போக்கு பற்றி விமர்சனம் செய்துவருவதை நாங்கள் பார்க்கின்றோம்.
இந்த இணக்க போக்கு என்பது கடந்த காலங்களில் சோரம் போன சில அரசியல் தலைவர்களால் எடுக்கப்பட்ட இணக்கப்பாடுகள் போலல்ல. எங்களுடைய உரிமைகளை விட்டுக்கொடுக்காத வகையில் மக்களுடைய பிரச்சனைகளை தீர்க்கக்கூடிய வகையில் சில முடிவுகளை எட்டுவதற்கான இணக்கப்போக்கையே எங்களுடைய தலைவர்கள் மேற்கொண்டிருக்கி;ன்றார்கள். 1949ஆம் ஆண்டிலே தந்தை செல்வாவால் தொடங்கப்பட்ட அரசியல் பயணத்தின் சாட்சியாகவும் தமிழர்களின் ஜனநாயக அரசியல் பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவும் தமிழ் மக்களின் தீர்விற்காக சம்பந்தன் ஐயா அவர்கள் செயற்பட்டுவருகின்றார். சக இன மக்களுடன் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு வாழவிரும்புகின்றார்கள். ஆனால் தமிழர்களாகவே வாழவேண்டும் என்பதுதான் எங்களுடைய இலக்கு.
ஒரு இனம் அதனுடைய பண்பாடு பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு தன்னுடைய மொழியினுடைய இலக்கியங்களுடைய சிறப்புகளை பேசி தன்னுடைய இளைய சமுதாயத்தை நெறிப்படுத்துவதற்கு போதுமான சுதந்திரம் இந்த நாட்டில் இருக்க வேண்டும். அந்தவகையில் ஒரு அரசியல் சுதந்திரம் இருந்தால் தான் தன்னுடைய கலாசாரம் பாரம்பரியங்கள் மொழியை பண்பாட்டை சிறந்த வகையில் முன்னேற்றிக்கொள்ள முடியும்.
அந்தவகையில் பல்வேறு அழுத்தங்களுக்கு மத்தியிலும் நிலைத்திருக்ககூடியதான அரசியல்தீர்வு முயற்சிகள் பலமாக அமையும்போது எமது கலாசார பண்பாட்டு விழுமியங்கள்  மென்மேலும் வளர்ச்சடையும் என்ற வகையில் அரசியல் தீர்வு என்பது மிகவும் முக்கியமான விடயமாகும்.
வடகிழக்கு தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசம்.பாரம்பரிய தாயகம்.இந்த பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இன்று கிடைக்கவுள்ள அரசியல் தீர்வுக்காக ஒன்றுபட்ட நிற்கவேண்டிய வரலாற்று கடமையுள்ளது என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.இரு சமூகங்களின் அரசியல் தலைமைகளும் இதில் ஒன்றுபடவேண்டும் என இந்த இடத்தில் இருந்துகோரிக்கை விடுக்கின்றேன்.
வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் ஒன்றுபடாமல் விரிக்கப்படும் சதிகளில் அகப்படுவோமானால் அரசியல்தீர்வு எதுவும் கிடைக்காத நிலையில் முரண்பாட்டு அரசில் நிலைமையே தொடர்ந்து நீடிக்கும் நிலையேற்படும்.
தமிழ் மக்கள் கொடுத்த இழப்புகளுக்கு ஈடானது அல்ல மாகாணசபை.அதனை நாங்கள் தெளிவாக உணர்ந்துகொள்ளவேண்டும்.எமது மக்களை நீதியான சமாதானமான அரசியல்பாதையில் அழைத்துச்செல்லவேண்டும் என்ற காரணத்திற்காக அதனைப்பொறுப்பேற்றோம்.
இந்த சந்தர்ப்பத்தில் சுயநலம்பாராது தமிழ் தலைவர்களும் முஸ்லிம் தலைவர்களும் தங்களுக்குரிய தீர்வு முயற்சிகளை இரு இனங்களும் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ்பேசும் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளமுடியும்.
வடக்கும் கிழக்கும் உறுதியாக இருக்ககூடிய நிலையிலேயே வடக்கு கிழக்கு வெளியே உள்ள சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உறுதியாக இருக்கும்.அவர்களின் பிரச்சினைகளுக்கும் பலமாக அது இருக்கும்.
தமிழ் முஸ்லிம் தலைவர்கள் தங்களது அற்பசொற்ப அரசியல் நோக்கங்களை விடுத்து ஒருமித்த உடன்பாட்டின் அடிப்படையில் இரு இனங்களும் வடகிழக்கில் இணைந்து தமது அரசியல் உரிமைகளைப்பெற்று இந்த நாட்டில் சம அந்தஸ்துடன் வாழ்வதற்கு தற்போதுள்ள சந்தர்ப்பத்தினை பயன்படுத்த தவறுவோமானால் எமக்கான தீர்வுகள் எப்போதும் கிடைக்கப்போவதில்லை.

Post a Comment

0 Comments