மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உள்ள முக்கிய குறைகளை நீக்குமாறு கோரி இன்று காலை கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
இருதய சத்திர சிகிச்சைப் பிரிவு, நீரிழிவு நோய்க்கான பிரிவு மற்றும் எந்தவொரு உபகரணங்களும் இல்லை எனத் தெரிவித்து, மட்டக்களப்பு சிவில் சமூக அமைப்பினால் இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் கலந்துகொண்டார்.
நல்லாட்சி அரசே மட்டக்களப்பு மக்களுக்கு பாரபட்சம் காட்ட வேண்டாம், பெண்கள் நல நிலையம் எப்போது உபகரண இட வசதியோடு இயங்கும், இருதய சத்திர சிகிச்சைக்கு தேவையான பிரிவு எங்கே? போன்ற கோஷங்களை கொண்ட பதாதைகளை தாங்கியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்தின் முடிவில் மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் சார்பில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு கடிதம் ஒன்றும் கையளிக்கப்பட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கான நோயாளர்கள் மற்றும் அவசர சிகிச்சை பெற வேண்டிய நோயாளர்கள் கூட, வெளி மாவட்ட அரச வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட வேண்டிய நிலைக்கு இன்று மட்டக்களப்பு வைத்தியசாலை சீர்குலைந்து குறைபாடுள்ளதாகக் காணப்படுகின்றது.
இந்த நிலைக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள், குறைபாடுகளை நீக்குவதற்கு தாங்கள் முன்வைத்துள்ள திட்டங்களையும் பொது மக்களின் சிவில் அமைப்புக்களாகிய தமக்கு தெரிவிப்பீர்களாயின் தமது ஆதரவையும் தெரிவிப்போம் என்று அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments: