மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவரை கடத்திச்சென்ற சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன் படி குறித்த மூவரையும் எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த திங்கட்கிழமை வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பலவத்தையில் வைத்து யுவதி ஒருவர் இனந்தெரியாத நபர்களினால் கடத்தி செல்லப்பட்டார்.
இது தொடர்பில் வெல்லாவெளி பொலிஸாருக்கு உடனடியாக தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விரைந்து செயற்பட்டனர்.
இந்நிலையில், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வான் கொக்கட்டிச்சோலை பகுதியில் வைத்து பொலிஸாரினால் சுற்றிவளைப்பட்ட நிலையில் அதிலிருந்த மூவர் கைது செய்யப்பட்டனர்.
எனினும், கடத்தப்பட்ட யுவதி மற்றும் சம்பவத்துடன் தொடர்புடைய பிராதான சந்தேகநபர் இந்த வாகனத்தில் இருக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடத்தப்பட்ட யுவதியையும் பிரதான சந்தேக நபரையும் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.


0 Comments