நாட்டில் நடந்த ஊழல், மோசடிகள் சம்பந்தமாக நடத்தப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் எந்த வகையிலும் திருப்தியடைய முடியாது என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் உள்ள மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தல் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் ஊழல், மோசடிகளில் சம்பந்தப்பட்டவர்கள் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர்களாக பதவி வகித்து வருகின்றனர். இவர்களின் கோப்புகள் கீழடிப்புச் செய்யப்பட்டுள்ளன.
ஷிரந்தி ராஜபக்சவின் மோசடியான கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக விசாரணை நடத்தி அவரை கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டும் அவர் கைது செய்யப்படவில்லை.
இலங்கை சுற்றுலாச் சபையில் நடந்த ஊழல் தொடர்பாக கைது செய்யப்பட வேண்டிய நான்கு பேர் சுதந்திரமாக நடமாடி திரிகின்றனர்.
தற்போதைய அரசாங்கத்தில் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளவர்கள் வெளியில் உள்ளனர். தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் சில விசாரணைகளுக்கு மேல் மட்டத்தில் இருந்து அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன.
இதனால், தற்போது நடத்தப்படும் விசாரணைகள் குறித்து நாங்கள் திருப்தியடையவில்லை.
சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு சொந்தமான பணம், பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான மாளிகைகள் காணிகள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. அரசுடமையாக்கி விட்டு அவற்றை திரும்ப கொடுக்கும் நடைமுறை பின்பற்றப்படுகிறது. இப்படி நடக்கக் கூடாது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இரகசியங்களை வெளியிடப் போவதாக கூறினார். மகிந்த ராஜபக்ச சம்பந்தமாகவே அவர் அவ்வாறு கூறியுள்ளார் என்பது தெளிவானது.
இந்த இரகசியங்கள் ராஜபக்ச குடும்பத்தினர் பற்றியது என்றால், எமக்கு பிரச்சினையில்லை, அதேபோல் அவர்களின் காணிப் பிரச்சினை எமக்கு சிக்கல்கள் இல்லை.
எனினும் நாட்டு மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரகசியங்களையே ஜனாதிபதி மறைக்கின்றார் என நாங்கள் நினைக்கின்றோம்.
மக்கள் அறிந்து கொள்ள வேண்டிய இரகசியங்களை கட்சியை காப்பாற்ற ஜனாதிபதி பயன்படுத்த வேண்டியதில்லை. அந்த இரகசியங்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
0 Comments