Home » » மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு அறிவூட்டல் நிகழ்வு

மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு அறிவூட்டல் நிகழ்வு

தொழில்நுட்பக் கல்வி தொடர்பான சமூக மட்ட விழிப்புணர்வு விரைவு படுத்தப்பட வேண்டும் - உதவி மாவட்டச் செயலாளர் 

தொழில்நுட்பக் கல்வி தொடர்பில் சமூக மட்டத்தில் விழிப்புணர்வூட்டப்படாத இடைவெளிகளை நிரப்பும் செயற்பாடுகள் விரைவுபடுத்தப்பட வேண்டும் அதன்மூலம் தொழில்நுட்ப ரீதியான கல்வி முன்னேற்றம் ஏற்பட்டு வேலையில்லாப்பிரச்சினைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும் என்று மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்டச் செயலாளர் எஸ்.ரங்கநாதன் தெரிவித்தார்.

தேசிய திறன்கள் திறன்கள் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் அதிபர் ரி.ரவிச்சந்திரன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சி மற்றும் விழிப்புணர்வு அறிவூட்டல் நிகழ்வில் பிரதம அதிதியாகக்கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.




தொடர்ந்து உரையாற்றிய உதவி மாவட்டச் செயலாளர்,

தொழில் கல்வியை வழங்கக் கூடிய நிறுவனங்கள் இப்போதைய காலகட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன. பாடசாலைகளில் தொழில்நுட்பக் கல்விகள் தொடர்பான அறிமுகம், அறிவூட்டல்கள் இருக்கின்ற போதிலும் அது போதாமலேயே உள்ளது. அது முழுமைபடுத்தப்படுவது எமது இளைய தலைமுறையினர் தொழிற்கல்வியின் பால் உந்தப்படுவதற்கு காலாக அமையும்.

அந்த வகையில் பாடசாலைக் கல்வியில் தங்களது தேர்ச்சியை அடையத் தவறிய மாணவர்களுக்கு எதிர்காலத்தினை தீர்மானித்துக் கொள்வதற்கான ஒரு சிறந்த பாதையாக தொழில்நுட்பக் கல்வி அமைந்திருக்கிறது. இந்த வழிகாட்டல்களை ஆசிரியர்களும் பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டும்.

அப்போதுதான் எதிர்கால சமூகத்தினை தொழில்நுட்பக் கல்வியில் முன்னேறிய சமூகமாகவும், வேலைவாய்ப்புப்பிரச்சினைகள் அற்ற சமூகமாகவும் மாற்றிக் கொள்ள முடியும் என்று தெரிவித்தார்.

இவ் நிகழ்வின் போது மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிற்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு தேசிய தொழில் சான்று சான்றிதழ் மற்றும் தொழில் நுட்பச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் 28பயிற்சி நெறிகள் 3 துறைகளில் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் பிளமிங், மரவேலை, குளிரூட்ல், ஓட்டோ மொபைல், கணணி வன்பொருள், படவரைஞர், சேர்வயரிங், தொழில்நுட்பவியல், வெல்டிங், எலக்றிகல், எலக்ரோனிக் உள்ளிட்ட பல்வேறு கற்கை நெறிகள் கற்பிக்கப்படுகின்றன.

தொழில்நுட்பக் கல்வி தொடர்பான அறிவூட்டல்களை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தும் முகமாக அரசாங்கத்தினால் இந்த தேசிய திறன்கள் தினம் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் பிரகடனப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் வருடத்தின் யூலை 16ஆம் திகதி தேசிய திறன்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இரண்டாம் தவணைப் பரீட்சைகள் நடைபெற்றமையினால் இம்மாதம் இன்றைய தினத்தில் திறன்கள் தினம் கொண்டாடப்பட்டது.

இன்றையதினம், மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய திறன்கள் தின நிகழ்வில் தொழில்கல்வி தொடர்பான அறிமுகத்தினை தொழில்நுட்பக்கல்லூரி அதிபர், பிரதி அதிபர் எஸ்.தியாகராஜா ஆகியோரும் வழங்கினர்.

பின்னர் மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியில் கற்பிக்கப்படும் தொழில் பயிற்சிகள் பற்றிய விளக்கங்களை பாடசாலைகளின் மாணவர்களுக்கு வழங்கும் வகையில் பயிற்சிக்கூடங்களில் பயிற்சிக் கண்காட்சிகள் நடத்தப்பட்டன. இவற்றினை பாடசாலை மாணவர்கள் கண்டு விளக்கங்களையும் பெற்றுக் கொண்டனர்.












Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |