இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் 32 வயதான மலிங்கா, 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியின் கேப்டனாக இருந்தார். ஆனால் கால் முட்டி காயம் குணமடையவில்லை என்று கூறி கேப்டன் பதவியை துறந்ததுடன், அணியில் இருந்தும் விலகினார். இதனால் பந்து வீச்சில் பலவீனமடைந்த நடப்பு சாம்பியனாக இருந்த இலங்கை அணி உலக கோப்பையில் முதல் சுற்றுடன் நடையை கட்டியது. மலிங்காவின் நடவடிக்கை இலங்கை கிரிக்கெட் வாரியத்துக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காயம் விஷயத்தில் மலிங்கா ‘இரட்டை வேடம்’ போடுகிறாரோ என்ற சந்தேகம் இலங்கை கிரிக்கெட் வாரியத்திற்கு உள்ளது.
மறுபுறம் மலிங்கா ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தன்னை தயார்படுத்தி வந்தார். நீண்ட காலமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பிரதான பந்து வீச்சாளராக மலிங்கா விளங்குகிறார். விரைவில் அவர் அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மலிங்காவுக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கிடுக்குப்பிடி போட்டுள்ளது. ‘‘எங்களது அனுமதி இல்லாமல் மலிங்கா ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு விளையாட செல்லக்கூடாது. எங்களது உத்தரவை மீறிச் சென்றாலும் அங்கு அவர் விளையாட முடியாது. வெளியில் தான் இருக்க வேண்டும். அவரது காயத்தன்மை எத்தகைய நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்த பிறகே அவருக்கு ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற்கான தடையில்லா சான்றிதழ் வழங்குவது குறித்து முடிவு செய்வோம்’ என்று இலங்கை கிரிக்கெட் வாரிய தலைவர் சுமதிபாலா தெரிவித்துள்ளார்
0 Comments