தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்குமிடையில் விரைவில் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்த பேச்சுவார்த்தையொன்று இடம்பெறவுள்ளதாக தெரியவருகின்றது. இது தொடர்பில் ஆராயும் நோக்கில் எதிர்க்கட்சித்தலைவரும் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று கொழும்பில் நடைபெற்றது. இதில் பங்காளிக்கட்சிகளின் தலைவர்கள், மற்றும் முக்கியஸ்தர்கள் பங்கேற்றிருந்தனர். இக்கூட்டத்தில் தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராஜா மற்றும் புளொட் தலைவரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தருமலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் பங்கேற்றிருக்கவில்லை.
இந்நிலையில் கூட்டம் 10மணிக்கு ஆரம்பமானபோது முதலில் அரசியல் கைதிகள் விடயம் தொடர்பாக நீண்டநேரம் ஆராயப்பட்டடு உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கோருவதெனவும் துரித நடவடிக்கை எடுப்பதெனவும் முடிவெடுக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைக்கும் பிரேரணையில் புதிய அரசயிலமைப்பை உருவாக்குதல் என்ற பகுதியில் புதிய என்ற சொற்பதம் நீக்கப்பட்டமை, இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பதை தேசிய பிரச்சினைக்கான தீர்வு என மாற்றியமை உட்பட சுதந்திரக்கட்சியால் கோரப்பட்ட ஒன்பது திருத்தங்களும் ஐக்கிய தேசியக் கட்சியால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ள நிலையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை விடயங்கள் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்றை நடத்தி உடன்படிக்கையொன்றை மேற்கொள்ளுதல் அல்லது வெளிப்படைத்தன்மையுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தல் வேண்டுமென பங்காளிக்கட்சியொன்றால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்போது புதிய என்ற சொற்பதம் நீக்கப்பட்டமையால் எவ்விதமான விளைவுகளும் ஏற்படாது. அரசியலமைப்பை வரைதல் என்பது புதிய அரசியல் அமைப்பை வரைவதேயாகும் என தமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. மேலும் தேசிய பிரச்சினை எனக் குறிப்பிடப்பட்டுள்ளமையால் இனப்பிரச்சினை உட்பட பல்வேறு விடயங்களையும் யாப்பில் உள்வாங்குவதற்கான ஏதுநிலைகள் ஏற்பட்டுள்ளன. ஆகவே அவ்விடயம் தொடர்பில் அச்சமடையத்தேவையில்லையென அவ்விடயங்களை கையாளும் பாராளுமுன்ற உறுப்பினரால் எடுத்துரைக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையொன்று நடத்தப்பட்டு உடன்படிக்கை அல்லது இணக்கப்பாட்டை எட்டுவதென்பது அவசியமாகும். அதனை மறுக்கவில்லையென கூட்டமைப்பின் தலைமை குறிப்பிட்டதுடன் தென்னிலங்கையின் சமகால நிலைமைகளை சுட்டிக்காட்டியது. ஆகவே இனப்பிரச்சினை தொடர்பில் எமது அடிப்படை விடயங்களை முன்வைத்து பாராளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றியமைக்கும் பிரேரணை மீதான வாக்கெடுப்பிற்கு முன்னர் பேச்சுக்கள் நடத்துவதற்கு முயல்வோமாயின் அது குழப்ப நிலைமைகள் உருவாகுவதற்கு ஏற்புடையதாகிவிடுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்நிலையில் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதெனவும் அதன்போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் பிரதிநிதிகளின் பங்கேற்பும் நிச்சயமாக இடம்பெறுமெனவும் குறிப்பிடப்பட்டது.
இதனையடுத்து வடக்கு முதல்வர் உட்பட மாகாண சபை விவகாரம் தொடர்பில் இரண்டு பங்காளிக்கட்சிகளின் தமது கருத்துக்களை முன்வைத்தன . இதன்போது முதலமைச்சர் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை முறையாக கையாள்வதற்கான பொறிமுறை, பாராளுமன்ற உறுப்பினர்கள், தலைமை உட்பட வடக்கு மாகாண சபையுடன் நல்லுறவைப் பேணுவதற்கான ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்கள் முறையாக நடத்தப்படவேண்டியதன் அவசியம் உள்ளிட்ட விடயங்கள் கடந்த காலங்களில் வலியுறுத்தப்பட்டபோதும் அவை முறையாக முன்னெடுக்கப்படவில்லையென்பது பிறிதொரு கட்சித்தலைமையால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனையடுத்து இப்பிணக்குகள் தொடர்பாக உரிய தீர்வொன்றை கூட்டமைப்பின் தலைமை பெற்றுக்கொடுக்கவேண்டும். விரைவில் வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்போது கொழும்பில் முதல்வருடன் நடைபெற்ற சந்திப்பில் கலந்துரையாடிய விடயங்கள் குறித்து கூட்டமைப்பின் தலைமை வெளிப்படுத்தியதோடு விரைவில் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டு இவ்விடயத்தை முறையாக கையாள்வதாகவும் குறிப்பிட்டது.
மேலும் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளிலிருந்து தமிழரசுக்கட்சிக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து கொள்வதற்கு இடமளிக்ககூடாதென மூன்று பங்காளிக்கட்சிகளும் ஒன்றிணைந்து கோரிக்கை விடுத்தன. தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை.சோ.சோனதிராஜா வருகை தராமையினால் இவ்விடயம் தொடர்பாக இறுதி முடிவொன்று எட்டப்படவில்லை.
கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்யும் நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படும் நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தமொன்றை மேற்கொள்வது குறித்த யோசனைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டபோதும் அதில் கையொப்பமிடாத நிலைமையே நீடிக்கின்றது. இவ்வாறான நிலையில் கூட்டமைப்பாக எதிர்காலத்தில் முன்னெடுக்கவுள்ள விடயங்கள் சிலவற்றை உள்ளடக்கிய ஆவணமொன்றை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஏனைய கட்சிகளிடத்தில் கையளித்தார்.
இதன்போது குறித்த ஆவணத்தில் உள்ள விடயங்கள் சிலவற்றில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பது ரெலோவின் முக்கியஸ்தரால் வலியுறுத்தப்பட்டதோடு மாவை.சேனாதிராஜா மற்றும் சித்தார்த்தன் ஆகியோர் சமுகமளிக்க முடியாத நிலையில் அதனை இறுதி செய்யமுடியாதெனவும் கூறப்பட்டது.
இந்நிலையில் அரசியல் தீர்வு உட்பட அனைத்து விடயங்களையும் எதிர்காலத்தில் கையாள்வதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் மாவை.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ்பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், சித்தார்த்தன், ஆர்.ராகவன் ஆகியோர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மீண்டும் எதிர்வரும் செவ்வாய்கிழமை மீண்டும் பல்வேறு விடயங்கள் குறித்து ஆராய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்போது புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதற்கான சாத்தியங்கள் காணப்படுவதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments