கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க கடுமையான தீர்மானங்கள் எடுக்க நேரிடும் என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்று வரும் குற்றச்செயல்கள் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,
அண்மைய நாட்களில் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்று வரும் துப்பாக்கிச்சூடு, கொலைகள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.
பொலிஸார், விசேட அதிரடிப்படையினர், குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியனவற்றை ஈடுபடுத்தி விசேட இரகசிய நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நடவடிக்கையின் மூலம் குற்றச் செயல்களில் ஈடுவோர் பற்றிய விபரங்களை அம்பலப்படுத்திக்கொள்ள முடியும்.
நாட்டின் ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, பாதுகாப்பு ராஜாங்க அமைச்சரான நான் ஆகியோர் இந்த சம்பவங்கள் குறித்து தீவிர கவனம் செலுத்தி வருகின்றோம்.
இவ்வாறான சம்பவங்களின் ஊடாக பாதாள உலகக் குழு அல்லது வேறும் தரப்புக்களின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இடமளிக்கப்பட மாட்டாது.
குற்றவாளிகளை தண்டிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
0 Comments