இந்த நாட்டில் இருக்கும் இந்ததுவேஷிகள் இலங்கையில் ஒரு சமாதானம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணுகின்றார்கள்.இவர்களுக்கு ஒத்துழைப்பாக தமிழ் மக்கள் மத்தியில் புலம்பெயர்நாடுகளில் உள்ள சிலர் வடகிழக்கில் அமைதி திரும்பக்கூடாது,அமைதி திரும்பினால் தாம் உள்ள நாடுகளில் பணம் வசூலிக்கமுடியாது என்ற நோக்குடன் செயற்பட்டுவருகின்றனர்.இந்த இருகோஸ்டிகளும் சேர்ந்து சிறுபான்மை சமூகத்திற்கு தீர்வு கிடைக்ககூடாது என்பதில் அக்கரையாகவுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புதுக்குடியிருப்பு சக்தி பாலர் பாடசாலையின் சுற்றுமதில் திறப்பு விழா நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரமின் இரண்டு இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் இந்த சுற்றுமதில் அமைக்கப்பட்டுள்ளது.
சக்தி முன்பள்ளியின் தலைவர் ரி.வரதராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் பிரதம அதிதியாக கலந்துகொண்டாhர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
1972ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தத்தினை தொடர்ந்து இந்த நாட்டில் தமிழர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.ஆயுதப்போராட்டம் முன்னெடுக்கப்பட்ட அதேவேளையில் அரசியல்போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.
அந்த போராட்டங்கள் 2009ஆம் ஆண்டுடன் மௌனிக்கப்பட்ட நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பானது இழந்த எமது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேசத்துடன் இணைந்து இராஜதந்திர போராட்டத்தினை மேற்கொண்டுவருவதுடன் எமது பிரதேச மக்களின் வாழ்வாதாரத்தினை அதிகரிப்பதற்கும் உட்கட்டமைப்பினை அபிவிருத்திசெய்வதற்கான அரசியலையும் முன்னெடுத்துவருகின்றோம்.
எமது போராட்டம் மௌனிக்கப்பட்டதில் இருந்து கடந்த ஆண்டு ஜனவரி எட்டாம் திகதி வரை எமது மக்களை கொன்றொழித்த ஒரு காட்டு ஆட்சி நடைபெற்றது.தமிழர்களுக்கு எந்த உரிமையும் வழங்ககூடாது.தமிழர்கள் இந்த நாட்டின் இனம் அல்ல,அவர்கள் வந்தேறுகுடிகள்,எங்களுக்கு அடிமைகளாக இருக்கவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த அந்த ஆட்சிதான் கடந்த ஆண்டு எட்டாம் திகதி வரை நடைபெற்றுவந்தது.
அன்று ஜனாதிபதி தேர்தல்வந்தபொது சிறுபான்மையினமான நாங்கள் அந்த ஆட்சியை முடிவுக்கு கொண்டுவந்து ஒரு புதிய ஆட்சியை ஏற்படுத்தியுள்ளோம்.இந்த புதிய ஆட்சி மூலம் எமது இனப்பிரச்சினைக்கான தீர்வு ஒன்று எட்டப்படும் என எதிர்பார்த்திருக்கின்றோம்.இந்த புதிய ஆட்சியை ஏற்படுத்துவதற்கு எந்தளவுக்கு முயற்சி எடுத்ததோ அந்தளவுக்கு இனப்பிரச்சினைக்கான தீர்வினை கொண்டுவருவதற்கும் முயற்சிகளை மேற்கொண்டுவருவதை நாங்கள் காண்கின்றோம்.
2009ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி வரை நாங்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளோம்.இறுதி யுத்தத்தின்போது முள்ளிவாய்;க்காலில் ஒருஇலட்சத்து 40ஆயிரம் பேரை இழந்துள்ளதாக கணக்குகள் இருக்கின்றது.இதில் வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்களும் தாய்.தகப்பன்,மனைவி பிள்ளைகளுக்கு முன்பாக கைதுசெய்யப்பட்டு பஸ்களில் ஏற்றப்பட்டு முகாம்களுக்கு கொண்டுசெல்லப்பட்டவர்களும் அடங்குவார்கள்.அதில் குறிப்பிட்ட சிலரை தவிர ஏனைய அனைவரும் பொதுமக்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.
அவர்கள் எங்குள்ளார்கள் என்பது யாருக்கும் தெரியாத நிலையே உள்ளது.ஒரு மாத்துக்கு முன்பாக ரணில் அவர்கள் காணாமல்போனவர்கள் இருந்திருக்கலாம் என கருதுவதாக கூறியிருந்தார்.இதேபோன்று கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளராக இருந்த மகிந்தவின் சகோதரர் கோத்தாபாய ராஜபக்ஸ எவரும் கைதுசெய்யப்படவில்லை.கொல்லப்பட்டவர்கள் அனைவரும் விடுதலைப்புலிகள் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள் என்று கூறியுள்ளார்.
ஒரு இலட்சத்து 40ஆயிரம் பேரும் விடுதலைப்புலிகளுடன் தொடர்புபட்டவர்களாக இருந்திருந்தால் போராளிகளாக இருந்திருந்தால் இந்த நாடு தனி ஒரு நாடாக இருந்திருக்காது என்பதை அனைவரும் அறிவார்கள்.
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் காணாமல்சென்றுவிட்டார்கள் என்ற சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.1978ஆம் ஆண்டு சூறாவளி காலத்தில் மக்கள் காணாமல்போனார்கள் இறந்ததார்கள்,சுனாமி அனர்த்ததின்போது காணமல்போனார்கள் இறந்தார்கள்.அவர்களுக்கு மரணச்சான்றிதழ்கள் கிடைத்தது.ஆனால் ஆயிரக்கணக்கான மக்களுக்கு முன்பாக பஸ்களில் ஏற்றிச்செல்லப்பட்டவர்கள் காணாமல்போனவர்கள் என்று சொன்னால் அதன் அர்த்தம் என்ன.?அவர்கள் கொன்றொழிக்கப்பட்டிருந்தால் இந்த நல்லாட்சி அரசாங்கம் அதனை உறுதியாக தெரிவிக்கவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் முன்னாள் புலனாய்வுத்துறையின் துணைத்தலைவர் விநாயகத்தின் குடும்பத்தினர் சில மாதங்களுக்கு முன்னர் அந்த குடும்பம் எவருக்கும் தெரியாமல் நடுஇரவில் யாழ் வரணி பகுதியில் இறக்கிவிடப்பட்டிருந்தனர்.கடந்த வாரமும் யாழில் ஒரு நபர் இறக்கிவிடப்பட்டுள்ளார்.இவ்வாறான நிலையில் தமது பிள்ளைகளை தொலைத்துவிட்டுள்ள தாய்தந்தையர் மனைவிமார் எவ்வாறு மரணச்சான்றிதழைப்பெற்றுக்கொள்வார்கள்.தமது பிள்ளைகள் என்றாவது வருவார்கள் என்ற கவலையிலேயே அவர்கள் உள்ளனர்.
இந்த நல்லாட்சி என்னும் அரசாங்கம் எங்கு இரகசிய முகாம்கள் உள்ளது,எமது மக்கள் எங்கு இரகசியமான முறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை உடனடியாக கண்டறியவேண்டும்.அவர்கள் அனைவரும் விடுதலைசெய்யப்படவேண்டும்.
எதிர்வரும் 23ஆம் திகதி காணாமல்போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் பாராளுமன்றத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரினால் விசேட பிரேரணை ஒன்று கொண்டுவரப்படவுள்ளது.அதன் பின்னர் அரசாங்கம் ஒரு தீர்க்கமானது முடிவினை எடுத்து இரகசியமாக தடுத்துவைத்துள்ளவர்களை விடுதலைசெய்யவேண்டும்.கொல்லப்பட்டிருந்தால் அது தொடர்பான சரியான தகவல்களை வழங்கவேண்டும்.
இந்த ஆண்டுக்குள் சிறுபான்மை மக்களுக்கு ஒரு தீர்வு வழங்கப்படும் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கும்போது அந்த தீர்வினை குழப்புவதற்கு கடந்த காலத்தில் இந்த நாட்டினை ஆட்சி செய்த மகிந்த தரப்பினர் கங்கணம்கட்டிக்கொண்டுள்ளனர்.
இதே மகிந்த ராஜபக்ஸ,கோத்தபாய ராஜபக்ஸ அவர்களி சகோதரர்கள் மற்றும் அடிவருடிகள் பொதுபலசேனா என்ற அமைப்பினை உருவாக்கி அதன்மூலமாக சிறுபான்மை மக்களை துன்புறுத்தினார்கள்.அவர்களை தங்களது ஆயுதமாக பயன்படுத்திவந்தார்கள்.வளர்த்த மாடு மார்பில் குத்துவதுபோன்று பொதுபலசேனா அவர்களுக்கு எதிராக திரும்பியபோது இன்று சிங்கலே என்னும் அமைப்பினை உருவாக்கி அதற்கு சகல ஒத்துழைப்பினையும் வழங்கிவருகின்றனர்.
சிங்கள பிரதேசங்களில் சிங்கள இரத்தம் (சிங்களே)என்னும் அமைப்பு தொடங்கும்போது அது தமிழ் பிரதேசங்களில் புலி இரத்தம் என்னும் பெயரில் அமைப்பு ஏற்படுத்தகூடும் என்பது தொடர்பில் இவர்கள் சிந்திக்கவில்லை.அவ்வாறு வடகிழக்கில் அமைப்பு ஏற்படுத்தப்படும்போதுஇந்த நாட்டில் மீண்டும் ஒரு அமைதியின்மை சூழல் ஏற்படுத்தப்படும் என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவில்லையா?.
மொத்ததில் இந்த நாட்டில் அமைதியிருக்க கூடாது,அதன்மூலம் சிங்கள மக்களிடம் இனத்துவேசத்தினை கக்கி இந்த ஆட்சியை கவிழ்த்து மீண்டும் ஆட்சி அதிகாரத்தினை பிடிக்கலாம் என இவர்கள் நினைத்துக்கொண்டுள்ளனர்.
சில வருடங்களுக்கு முன்னர் ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வரும்போது அந்த அரசாங்கம்அவரை கிண்டல்செய்ததுடன் அந்த அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவர் அந்த அம்மணியை திருமணம் செய்யவும் கேட்டாhர்.அதேபோன்று இன்று ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் ஹ{சைன் வரும்போது அவரை முஸ்லிம் என்று வர்ணிக்கின்றார்கள்.இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மிதா வரும்போது அவர் இந்தியாவின் வேறு மொழியை சேர்ந்தவராக இருக்கும்போது அவரை தமிழர் என்று வர்ணிக்கின்றனர்.
சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள மக்களுக்கு எதிராக தமிழ் மக்களுக்கு சாதகமாக தமிழ் ஈழத்தினை பிரித்துக்கொடுக்கப்போகின்றார்கள் என்கிற வகையில் பிரசாரங்களை முன்னெடுத்துவருகின்றனர்.அதேபோன்று இந்த நல்லாட்சியை கைப்பற்றுவதற்கு பத்தரமுல்லையில் அலுவலகம் அமைத்து செயற்பட்டுவருகின்றனர்.
இந்த நாட்டில் இருக்கும் இந்ததுவேஷிகள் இலங்கையில் ஒரு சமாதானம் ஏற்பட்டுவிடக்கூடாது என்று எண்ணுகின்றார்கள்.இவர்களுக்கு ஒத்துழைப்பாக தமிழ் மக்கள் மத்தியில் புலம்பெயர்நாடுகளில் உள்ள சிலர் வடகிழக்கில் அமைதி திரும்பக்கூடாது,அமைதி திரும்பினால் தாம் உள்ள நாடுகளில் பணம் வசூலிக்கமுடியாது என்ற நோக்குடன் செயற்பட்டுவருகின்றனர்.இந்த இருகோஸ்டிகளும் சேர்ந்து சிறுபான்மை சமூகத்திற்கு தீர்வு கிடைக்ககூடாது என்பதில் அக்கரையாகவுள்ளனர்.
ஐ.நாவின் அனுசரணையுடன் இந்த நாட்டில் இருக்கும் அரசாங்கம் வடகிழக்கு மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வினை கொண்டுவரும் வகையில் மக்களின் கருத்துகளை அறியும் நடவடிக்கையினை மேற்கொண்டுவருகின்றது.
இந்த நாட்டில்; சமத்துவம் எங்களுக்கு இல்லை, தமிழீழமே முடிவு என போராடிய நாங்கள் இன்று சமஸ்டியை நோக்கி நிற்கின்றோம்.இந்த நாட்டின் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும்.வடக்கு கிழக்கு மாகாணம் இணைக்கப்பட்டு ஒரு சமஸ்டி தீர்வு வழங்கப்படவேண்டும்.ஒற்றையாட்சி முறை இந்த நாட்டில் இருக்ககூடாது என்பதை நாங்கள் வலியுறுத்தவேண்டும்.


0 Comments