மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திலே மொத்தமாக 1317ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால் இன்னும் 321 ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர்.” என கல்குடா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.
அண்மையில் மட்டக்களப்பு செங்கலடி விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கஸ்டப்பிரதேசங்களில் குறைந்தது இரண்டு வருடங்களாவது எமது ஆசிரியர்கள் கடமையாற்றவேண்டும்.
ஆனால் கடந்த காலங்களில் யாழ்ப்பாணத்தில் இருந்த ஆசிரியர்கள் தங்களது பெட்டிபடுக்கைகளை தூக்கிகொண்டு திருகோணமலைக்கும் மட்டக்களப்பிற்கும் வருகைதந்து கல்வி கற்பித்ததால்தான் நாங்கள் இன்று ஆசிரியர்களாக இங்கு கற்பித்துக் கொண்டிருக்கின்றோம்.
அன்று அவர்கள் நான் ஏன் திருகோணமலைக்கு செல்லவேண்டும்? நான் ஏன் மட்டக்களப்பிற்கு செல்லவேண்டும்? என்று நினைத்திருந்தால் அன்று பிரதேசவாத உணர்வு அவர்களுக்கு இருந்திருந்தால் இன்று கிழக்கு மாகாணத்தில் ஒரு கல்விமான்களையும் காண முடியாதிருந்திருக்கும்.
நான் இதை ஏன் இங்கு கூறுகின்றேன் என்றால், மட்டக்களப்பு மாவட்டத்தில் நியமனம் பெற்றவர்கள் மட்டக்களப்பு நகரத்திலே இருந்துகொண்டு கல்குடாவிற்கு செல்லமுடியாது வாகரைக்கு செல்லமுடியாது மண்முனைமேற்கிற்கு செல்லமுடியாது என சவால் விட்டுக்கொண்டிருக்கின்றனர்.
நான் உங்களை வேறு மாவட்டத்திற்கு செல்லசொல்லவில்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள கஸ்டப்பிரதேசங்களில் குறைந்தது இரண்டு வருடங்களாவது எமது ஆசிரியர்கள் கடமையாற்றவேண்டும் என்று வேண்டிக்கொள்கின்றேன்”
என்று கல்குடா கல்வி வலய கல்விப்பணிப்பாளர் சிறிகிருஸ்ணராஜா தெரிவித்துள்ளார்.
0 Comments