கல்வி மறுசீரமைப்பு விரைவில் இடம்பெறும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
வவுனியா கோவில்குளம் இந்துக்கல்லூரியின் 60 வது ஆண்டு வைர விழா நிகழ்வில் செவ்வாய்கிழமை பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
வவுனியா கோவில்குளம் இந்துக் கல்லூரியின் வைரவிழா முத்திரை பதித்த ஒன்றாக இருக்கிறது. இக்கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் எதிர்காலத்தில் ஏனைய மாணவர்களுக்கு வழிகாட்டக் கூடிய சக்தியாக வளரவேண்டும்.
இந்த நேரத்தில் புதிதாக தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் குறிப்பாக ஜனாதிபதி மைத்திரி சிறிசேன அரசுக்கு வடகிழக்கு மற்றும் மலையக மக்கள் அதிகமான வாக்குகளை அளித்திருக்கிறார்கள். அதன் பயனாக பிரச்சனைகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வரும் நிலையில் சமூகத்தின் உடைய வளர்ச்சி கல்வியில் தங்கியுள்ளது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.
எனவே ஜனாதிபதியும் சரி, பிரதமரும் சரி கல்வி மறுசீரமைப்பு கொள்கையை இந்த நாட்டில் கொண்டு வந்திருக்கின்றார்கள்.
ஆகவே, இந்த கல்வி மறுசீரமைப்பு கொள்கையின் ஊடாக மாணவர்கள் படிக்கும் போதே ஏதாவது ஒரு தொழிலை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாகக்கூடிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்காக நான்கு அமைச்சர் இப்பணியில் செயற்பட்டு வருகின்றனர். இத்திட்டத்தில் சாதாரணதரம் மற்றும் உயர் தரம் படிக்கின்ற சம காலத்திலே மாணவர்களின் பண்புக்கு ஏற்ப அந்த கல்வியை படிப்பதற்கான வசதியை ஏற்படுத்தி கொடுப்பதாக கல்வி மறுசீரமைப்பு இருக்கும். இன்று பலர் கலைத்துறை, வர்த்தக துறை படித்துவிட்டு பட்டதாரிகளாக வேலை இல்லாது இருக்கிறார்கள். இனி அவ்வாறு இல்லாது மாணவர்களின் திறமைக்கும், பண்புக்கும் ஏற்ற வகையில் கல்வியை போதிக்க மறுசீரமைப்பு உதவும் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கல்லூரியின் வைரவிழா நிகழ்வை முன்னிட்டு வவுனியா, கோவில்குளம் சிவன் கோவில் முன்றலில் இருந்து பாடசாலை வரை மாணவர்களின் ஊர்வலம் இடம்பெற்றதுடன், உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், பாடசாலையின் ஆரம்பகால மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு கௌரவிப்பும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா, வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ், வடமாகாண கல்விப் பணிப்பாளர், அயல் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், பழைய மாணவர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
N5
0 Comments