Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வவுச்சர் முறையால் அதிபர், ஆசிரியர்களைத் தண்டித்துள்ளது அரசு!-

பாடசாலை சீருடை விநியோகத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகளைத் தண்டிக்காமல், வவுச்சர் முறைமையை அறிமுகப்படுத்தி அதிபர்களையும், ஆசிரியர்களையும் அரசு தண்டித்துள்ளது என்று ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ குற்றஞ்சாட்டினார்.
அத்துடன், இந்த ஒரு வவுச்சரைப் பெற்றுக்கொள்வதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு நாளை பாடசாலையில் வீண்விரயம் செய்யவேண்டியுள்ளது. இதனால் அடுத்த வருடம் பெரும்பாலான பெற்றோர்கள் இந்த முறைமையிலிருந்து விடுபடுவார்கள் என்றும் குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற விளையாட்டுத்துறை அமைச்சு, கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே மேற்கண்ட விடயங்களைக் குறிப்பிட்ட அவர் மேலும் கூறுகையில்,
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை விநியோகத்தில் ஊழல், மோசடி இடம்பெறுவதாகக் குறிப்பிட்டு வவுச்சர் முறைமையை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். ஊழல், மோசடி எங்கு இடம்பெறுகின்றது? மாணவர்களும், ஆசிரியர்களும், அதிபருமா மோசடியில் ஈடுபடுகின்றனர்? இல்லை.
இந்த மோசடிகள், அரசியல் தலையீடுகள் என்பன சீருடை விநியோகத்துக்கான கேள்விமனுக்கோரல், விநியோகம் முதலான விடயங்களில்தான் இடம்பெறுன்றன. இதனால் 2013 ஆம் ஆண்டில் மட்டும் கல்வி அமைச்சுக்கு 18 கோடியே 68 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாரை நீங்கள் தண்டிக்கிறீர்கள்?
கடந்த நாட்களில் அதிபர் ஒருவர் 5 ஆயிரம், 6 ஆயிரம் வவுச்சர்களில் கையொப்பம் இட்டுள்ளார். வவுச்சர்களில் கையொப்பமிடுவது அவர்களின் வேலையாகியுள்ளது. இது அதிபர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் சுமையாகியுள்ளது.
மேலும் ஒரு வவுச்சரைப் பெற்றுக் கொள்வதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் ஒரு நாளை பாடசாலையில் வீண்விரயம் செய்யவேண்டியுள்ளது. இப்படிச் செய்தால் அடுத்த வருடம் பெரும்பாலான பெற்றோர்கள் இந்த முறைமையிலிருந்து விடுபடுவார்கள் என்றார்.
வவுச்சர் முறையில் குறைகள் அடுத்த வருடத்தில் நிவர்த்தி! - மாணவர்களின் சீருடை ஒரே தினத்தில் பரிசோதனை!! - கல்வி அமைச்சர் தெரிவிப்பு
பாடசாலை மணவர்களின் இலவச சீருடை விநியோகத்துக்கான வவுச்சர் முறைமையில் உள்ள சில குறைபாடுகள் அடுத்த வருடத்தில் நிவர்த்தி செய்யப்படும் எனக் குறிப்பிட்ட கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும் வரை வவுச்சர் முறையே நடைமுறையிலிருக்கும் என்றும் உறுதியாகத் தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற கல்வி அமைச்சு, உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவிக்கையில்,
எமது அரசு ஆட்சிக்கு வந்ததன் பின்னர் கல்விக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. பாடசாலை மாணவர்களின் சீருடை விநியோகத்துக்காக வவுச்சர் முறைமையை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கமைய 450 ரூபா முதல் 1,700 ரூபா வரை வழங்கப்படுகின்றது. சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்காக 650,850,1000 ரூபா வரை வழங்கப்படுகின்றது.
இதற்கான வவுச்சர்கள் டிசம்பர் மாதம் முதலாம் திகதி அனைத்துப் பாடசாலைகளுக்கும் விநியோகிக்குமாறு வலயக் கல்வித் திணைக்களங்களுக்கு உத்தரவிட்டோம். இதற்கமைய வவுச்சர் பகிர்ந்தளிப்பு இடம்பெற்றது.
கொழும்பில் 7 ஆயிரம், 8 ஆயிரம் மாணவர்கள் உள்ள பாடசாலைகளில் வவுச்சர்கள் கையொப்பமிடப்பட்டு விநியோயோகிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு சில பிரச்சினைகள் இருக்கலாம்.
டிசம்பர் 4ம் திகதி பாடசாலைக்கு விடுமுறை வழங்கப்பட்டது. இந்த விடுமுறை தினத்தில் மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக பெற்றோர்கள் பாடசாலைக்கு வரவேண்டும். இதற்கமையத்தான் முதலாம் திகதி விநியோகிக்கப்பட்டு 2,3,4ஆம் திகதிவரை உள்ள காலத்தில் கையொப்பமிட்டு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாணவர்களின் முன்னேற்ற அறிக்கையைப் பெற பெற்றோர்கள் பாடசாலைக்கு வரவேண்டியுள்ளதால், அவர்களுக்கு ஒரு நாள் வீண்விரயம் என்று குறிப்பிட முடியாது.
இந்த விடயத்தில் ஆரம்பத்தில் குறைபாடு இருக்கும். இதனை நிவர்த்தி செய்வதற்காக அடுத்த வருடம் மூன்று மாதங்களுக்கு முன்னரேயே வவுச்சர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுப்போம். கையொப்பம் இடுவதற்கு 3 மாதம் காலம் வழங்குவோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இருக்கும்வரை இந்த வவுச்சர் முறைமை நடைமுறையில் இருக்கும். இதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
ஜனவரி, பெப்ரவரி மாதத்தில் ஒரு தினத்தில் 43 லட்சம் மாணவர்களின் சீருடைகளைப் பரிசோதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Post a Comment

0 Comments