பிரென்டன் மெக்கலம் தலைமையில் நியூஸிலாந்து அணி 11 டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் நியூஸிலாந்து அணிக்கு அதிக வெற்றி தேடிக் கொடுத்த அணித் தலைவர்கள் வரிசையில் ஸ்டீபன் பிளமிங்கிற்கு அடுத்து (28 டெஸ்ட் வெற்றிகள்) இரண்டாவது இடத்தை பகிர்ந்து கொண்டார். இதில் ஜெப் ஹொவாட்டும் நியூஸிலாந்து அணிக்கு 11 டெஸ்ட் வெற்றிகளை தேடிக் கொடுத்தார்.
நியூஸிலாந்து சொந்த மண்ணில் விளையாடிய 13 டெஸ்ட் போட்டிகளில் தோல்வி அடையாமல் உள்ளது. கடைசியாக 2012 ஆம் ஆண்டு ஹமில்டனில் நடந்த தென்னாபிரிக்க டெஸ்ட் போட்டியிலேயே நியூஸிலாந்து அணி கடைசியாக தோற்றது. இதன்மூலம் 1987 முதல் 1991 வரை தனது சொந்த மண்ணில் 13 போட்டிகளில் தோற்காமல் இருந்த சாதனையையும் நியூஸிலாந்து சமன் செய்தது.வில்லியம்ஸன் 2015இல் ஐந்து சதங்களை பெற்று இந்த ஆண்டில் அதிக சதங்கள் பெற்ற ஸ்டீபன் ஸ்மித்துடன் முதலிடத்தில் உள்ளார்.
இந்த ஆண்டில் வில்லியம்ஸன் 16 இன்னிங்ஸ்களில் 1172 ஓட்டங்களை பெற்றுள்ளார்.கான் வில்லியம்ஸன் 13 டெஸ்ட் சதங்களை பெற்றுள்ளார். அவரை விடவும் மார்டின் கிரோ மாத்திரமே நியூஸிலாந்து அணிக்காக அதிக சதங்களை பெற்றவராவார்.அவர் மொத்தம் 17 சதங்களை பெற்றுள்ளார். ரொஸ் டெய்லரும் 13 சதங்களுடன் இரண்டாவது இடத்தை வில்லியம்ஸனுடன் பகிர்ந்து கொள்கிறார். வில்லியம்ஸன் மொத்தம் 85 இன்னிங்ஸ்களில் இத்தனை சதங்கள் பெற்றிருப்பதோடு கிரோ 91 இன்னிங்ஸ்களையும் டெய்லர் 120 இன்னிங்ஸ்களையும் எடுத்துக் கொண்டுள்ளனர்.இலங்கை அணி இந்த ஆண்டில் மொத்தம் ஏழு டெஸ்ட் போட்டிகளில் தோற்றுள்ளது. இது ஓர் ஆண்டுக்குள் இலங்கை அணி அதிக தோல்விகளை சந்தித்த சந்தர்ப்பமாக அமைந்தது. இதற்கு முன்னர் 1994, 2001, 2004 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் தலா ஐந்து டெஸ்ட்களில் தோற்றதே மோசமாக இருந்தது. 2015இல் இலங்கை அணி மொத்தம் 11 டெஸ்ட்களில் விளையாடியது. அதில் நான்கில் வென்றது. எந்த போட்டியும் சமநிலையில் முடியவில்லை.எனினும் முந்தைய இரண்டு ஆண்டுகளில் இலங்கை அணி மொத்தமாக வெறும் நான்கு டெஸ்ட்களில் மாத்திரமே தோற்றது. அதேபோன்று கடைசியாக 2008 ஆம் ஆண்டே இலங்கை அணி கடைசியாக ஒரு டெஸ்ட்டையும் சமநிலையில் முடிக்காத ஆண்டாக இருந்தது.அதேபோன்று 2015 ஆம் ஆண்டில் அதிக டெஸ்ட்களில் தோற்ற அணியாக இலங்கை அணி முதலிடத்தில் உள்ளது. மேற்கிந்திய தீவுகளும் இந்த ஆண்டில் ஏழு டெஸ்ட்களில் தோற்ற போதும் இந்த ஆண்டு முடிவதற்குள் அந்த அணி மற்றும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. எனினும் கடந்த ஆண்டு அதிக டெஸ்ட்களில் வென்ற அணியாக இலங்கை முதலிடத்தை பிடித்தமை குறிப்பிடத்தக்கது.
கான் வில்லியம்ஸன் இரண்டாவது டெஸ்டின் நான்காவது இன்னிங்ஸில் சதம் அடித்தார். நியூஸிலாந்து துடுப்பாட்ட வீரர் ஒருவர் நான்காவது இன்னிங்ஸில் சதம் அடிப்பது 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இது முதல் முறையாகும். 2012 ஆம் ஆண்டிலும் கான் வில்லியம்சனே நான்காவது இன்னிங்ஸில் சதம் அடித்திருந்தார். நியூஸிலாந்து அணிக்காக நான்காவது இன்னிங்ஸில் அதிக சதம் பெற்றவர்கள் வரிசையில் வில்லியம்ஸன் பேவ் கொங்டனுடன் முதலிடத்தில் உள்ளார். இருவரும் தலா இரண்டு சதங்களை பெற்றுள்ளனர்.இலங்கை அணிக்கு எதிராக கான் வில்லியம்ஸனின் துடுப்பாட்ட சராசரி 91.88 ஆகும். அவர் மொத்தம் 12 இன்னிங்ஸ்களில் 827 ஓட்டங்களை பெற்றுள்ளார். இதில் நான்கு சதங்கள் அடங்கும். இது இலங்கைக்கு எதிராக 500க்கும் அதிக ஓட்டங்கள் குவித்தவர்கள் வரிசையில் இரண்டாவது ஓட்ட சராசரியை பெற்றவராகவும் கான் வில்லியம்ஸன் காணப்படுகிறார். முதலிடத்தில் அவுஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக்கல் ஹஸே 110.44 ஓட்ட சராசரியுடன் காணப்படுகிறார்.
0 Comments