இலங்கை விமானப் படைக்குப் போர் விமானங்களை விற்பனை செய்யும் போட்டியில், இந்தியாவும் பாகிஸ்தானும் குதித்திருப்பதாக செய்திகள் வெளியாகின்றன.
இந்த இரண்டு நாடுகளுமே, தமது சந்தை வாய்ப்புக்காக இலங்கை விமானப் படையை குறி வைத்திருக்கின்றன.
இது இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்துகின்ற ஒரு விவகாரமாக மாறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை விமானப்படையின் ‘வயதான’ கிபிர் மற்றும் மிக் -- 27 போர் விமானங்களைக் கொண்ட ஸ்குவாட்ரன்களுக்குப் பதிலாக புதிய போர்விமானங்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து விமானப்படைக்குள் வலுத்திருக்கிறது.
விமானப்படையில், கிபிர் போர் விமானங்கள் இணைத்துக் கொள்ளப்பட்டு, கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாகி விட்டன.
1996ஆம் ஆண்டு இந்தப் போர் விமானங்கள், போரில் ஈடுபடுத்த ஆரம்பிக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக 2000ஆம் ஆண்டில், கிபிர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டன.
அதேவேளை, ரஷ்யாவின் மிக்- - -27 போர் விமானங்கள், விமானப்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.
இது 2000ஆம் ஆண்டில் முதல்முறையாக விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட்டது. எனினும், 2007ஆம் ஆண்டு, வாங்கப்பட்ட தாக்குதல்களில் பங்கெடுத்த மிக்- - 27 போர் விமானங்கள் தான் களைப்படைந்த நிலையில் உள்ளன.
இந்த இரண்டு வகையான போர் விமானங்களும், அதிகளவில் போரில் ஈடுபடுத்தப்பட்டவை.
இவற்றின் செயற்றிறன் குறைந்து விட்டது, அத்துடன் இவற்றிலுள்ள தொழில்நுட்பங்களும் காலம் கடந்து வருகின்றன.
இனிமேல், இவற்றுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் என்ற நிலை உருவாகியிருக்கிறது. எனினும், ஈழப்போரில், இலங்கை விமானப்படை முதல் முறையாகப் பயன்படுத்திய ஜெட் போர் விமானங்களான, சீனாவிடம் வாங்கப்பட்ட எவ்---7 போர் விமானங்கள் இன்னமும் பயன்பாட்டில் உள்ளன.
அவை சீனாவினால் மீளவும் திருத்தியமைக்கப்பட்டு, நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் விமானப்படைக்கு கையளிக்கப்பட்டுள்ளன. எனவே, அவற்றை இப்போது கைவிட விமானப்படை தயாராக இல்லை.
இப்போதைக்கு கிபிர் மற்றும் மிக் -- -27 போர் விமானங்களை அடுத்த சில ஆண்டுகளுக்குள் கைகழுவி விட்டு, புதிய போர் விமானங்களைக் கொள்வனவு செய்ய உத்தேசித்திருக்கிறது விமானப்படை.
தற்போதைய நிலையில், இலங்கைக்கு பெரியளவில் பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இல்லை என்பதால், புதிய போர் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட வேண்டுமா என்ற விமர்சனங்களும் உள்ளன.
அதைவிட, இந்தியா போன்ற வலுவானதொரு நாட்டுக்கு அருகே இருக்கும் இலங்கைக்கு, உள்நாட்டு அச்சுறுத்தல்கள் இல்லாத நிலையில், வெளிநாட்டு அச்சுறுத்தல்களைக் குறிவைத்து பெரியளவில் ஜெட் போர் விமானங்களை கொள்வனவு செய்ய வேண்டுமா என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
ஆனால், மாறி வரும் பூகோள அரசியல் சூழலில், இலங்கையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நவீன தொழில்நுட்பம், திறன் மற்றும் வசதிகளைக் கொண்ட போர் விமானங்கள் தேவை என்று விமானப்படை அதிகாரிகள் கருதுகின்றனர்.
விமானப்படை அதிகாரிகள் மத்தியில், தோன்றியுள்ள இந்தச் சிந்தனை தான், இந்தியாவும் பாகிஸ்தானும் முட்டி மோதிக் கொள்வதற்கான அடிப்படையான விடயமாக மாறியிருக்கிறது.
இலங்கை விமானப்படை அதிகாரிகளுடன், நெருக்கமான தொடர்புகளை பாகிஸ்தான் வைத்திருக்கிறது.
கிபிர், மிக்--27 போர் விமானங்களைக் கழித்து விட்டு, புதிய போர் விமானங்களை வாங்கலாம் என்று விமானப்படை அதிகாரிகள் மத்தியில் தோன்றியுள்ள சிந்தனையை மோப்பம் பிடித்துக்கொண்ட பாகிஸ்தான், அதற்கமையவே காயை நகர்த்தியது.
சீனாவுடன் இணைந்து தயாரிக்கும் ஜே.எவ் - -17 போர் விமானத்தை இலங்கைக்கு விற்க திட்டம் போட்டது பாகிஸ்தான்.
இலங்கை விமானப்படை, ஜே.எவ்---17 போர் விமானங்களை பாகிஸ்தானிடம் கொள்வனவு செய்யப் போவதாகவும், கொள்வனவு செய்து விட்டதாகவும் கூட பாகிஸ்தான் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
சில மாதங்களுக்கு முன்னர் பாரிஸில் நடந்த விமானக் கண்காட்சியில், ஜே.எவ்---17 போர் விமானங்களை கொள்வனவு செய்ய இலங்கை முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூட செய்திகள் வெளியாகின.
சீனாவுடன் இணைந்து பாகிஸ்தான், தயாரித்த ஜே.எவ்---17 போர் விமானத்தை, சந்தையில் பிரபலப்படுத்துவதற்கு, ஒரு முக்கியமான நாட்டின் விமானப்படை தேவைப்படுகிறது.
புலிகளை வெற்றி கொண்டதால், இலங்கைப் படைகளுக்கு இருக்கின்ற மதிப்பைக் கருத்தில்கொண்டு, இலங்கை விமானப்படையின் தலையில் தனது முதல் தொகுதி விமானங்களை கட்டிவிடக் காத்திருக்கிறது பாகிஸ்தான்.
விமானப்படைத் தளபதி இந்தமாதம் பாகிஸ்தானுக்கு மேற்கொள்ளவுள்ள பயணத்தின் போது, ஜே.எவ்---17 போர் விமானத்தை வாங்குவது குறித்து முடிவு செய்யவுள்ளதாக, இரண்டு வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று புரளியைக் கிளப்பியது.
இதையடுத்து, இந்தியா தரப்பில் இருந்து, தமது சொந்த தயாரிப்பான "தேஜஸ்" போர் விமானங்களை வாங்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின், ஜே.எவ்---17 போர் விமானம், சீனாவின் FC-1 Xiaolong போர் விமானத்தின் நேரடி நகலாகும்.
அமெரிக்காவின் எவ்---16 போர் விமானங்களுக்குப் பதிலாகவே, பாகிஸ்தான் விமானப்படை இதனை இணைத்துள்ளது.
இதில், சீன போர் விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகள், தொழில்நுட்பங்கள் அத்தனையும் உள்ளன.
ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில், தனது சொந்த தயாரிப்பான தேஜஸ் போர் விமானங்களை இலங்கைக்கு விற்க ஆசைப்பட்டாலும், அவை இன்னமும் இந்திய விமானப்படையில் கூடச் சேர்க்கப்படவில்லை.
தேஜஸ் போர் விமானமும் கூட, நவீன தொழில்நுட்ப வசதிகள் பலவற்றைக் கொண்டிருந்தாலும், அதில் மேலும் பல சீரமைப்புகளை மேற்கொள்ளுமாறு சில நாட்களுக்கு முன்னரும் கூட இந்திய விமானப்படை கூறியிருந்தது.
குறிப்பாக, வானிலேயே எரிபொருளை நிரப்பும் வசதி, ரேடரைச் செயலிழக்கச் செய்யும் சாதனம் உள்ளிட்ட நவீன வசதிகளை அமைத்துக் கொடுக்குமாறு, கேட்டிருக்கிறது இந்திய விமானப்படை.
முதற்கட்டமாகத் தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானங்கள், சோதனையில் வெற்றியைத் தரவில்லை.
இதையடுத்து இரண்டாவது கட்டத் திட்டத்தில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் வெளிநாட்டு இயந்திரங்களுடன் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
தேஜஸ் போர் விமானம் முதல்முதலாக 2001இல் தயாரிக்கப்பட்டாலும், இதுவரை, 14 வரையான விமானங்கள் தான் தயாரிக்கப்பட்டு பரிசோதனை நிலையில் இருக்கின்றன.
ஆனால், பாகிஸ்தானோ 2003இல் தயாரிக்கத் தொடங்கிய, ஜே.எவ்-17 போர் விமானங்களை தனது படையில் சேர்த்துக் கொண்டுள்ளதுடன், வெளிநாடுகளுக்கும் விற்கத் தொடங்கியுள்ளது.
பாகிஸ்தானின் இந்த முன்னேற்றத்துக்கு சீனாவின் தொழில்நுட்ப உதவிகளே முக்கிய காரணம்.
பாகிஸ்தான் போர் விமானத்தை விட, இந்திய போர் விமானம் இன்னும் சில ஆண்டுகளில் கூடுதல் திறனுடன் வடிவமைக்கப்படும் என்று விமானப்படை அதிகாரிகள் சிலர் கருதுகின்றனர்.
ஆனால், விலையைப் பொறுத்தவரையில், பாகிஸ்தானின் ஜே.எவ்-17 போர் விமானங்களை விட, இந்தியாவின் தேஜஸ் போர் விமானங்களின் விலை அதிகம்.
ஜே.எவ்-17 போர் விமானம் 25 தொடக்கம் 28 மில்லியன் டொலர் பெறுமதியானது, ஆனால் தேஜஸ் போர் விமானம் 30 மில்லியன் டொலர் பெறுமதியானது.
இலங்கை விமானப்படை போர் விமானங்களைக் கொள்வனவு செய்யும் போது, தரம் மட்டுமன்றி விலையையும் பரிசீலிக்கும்.
அதேவேளை, இன்னமும் சோதனை ரீதியாக வெற்றிபெறாத, தனது விமானப்படையில் கூடச் சேர்த்துக் கொள்ளாத தேஜஸ் போர் விமானங்களை எதற்காக இந்தியா, அவசரப்பட்டு இலங்கைக்கு விற்க முனைகிறது? இதற்கும் காரணம் இருக்கிறது.
இலங்கையில் சீனாவின் செல்வாக்கை குறைப்பதே இந்தியாவின் முக்கியமான திட்டம்.
ஜே.எவ் – 17 போர் விமானங்களின் விற்பனையுடன் இந்தியா போட்டிக்கு இறங்கியது பாகிஸ்தானுடன் அல்ல. சீனாவுடன் தான்.
ஏனென்றால், இந்த போர் விமானங்களின் அடிப்படைத் தொழில்நுட்பம் சீனாவுடையதே. இலங்கை விமானப்படை சீனாவின் தொழில்நுட்பத்தை அதிகம் நம்பியிருப்பதை இந்தியா விரும்பவில்லை.
ஏற்கனவே இலங்கை விமானப்படையிடம் உள்ள தனது நாட்டுத் தயாரிப்புகளைக் கருத்தில் கொண்டு, உள்நாட்டிலேயே அவற்றை மறுசீரமைப்பதற்கும், திருத்தியமைப்பதற்குமான விமானப் பராமரிப்பு பொறியியல் நிலையம் ஒன்றை திருகோணமலை சீனக்குடாவில் அமைப்பதற்கு கடந்த ஆண்டு சீனா முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால், கடந்த ஆண்டு மே மாதம், இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பா.ஜ.க. அரசாங்கம், முதல் வேலையாக, சீனக்குடாவில் விமான பராமரிப்பு நிலையத்தை அமைக்கும் சீனாவின் திட்டத்தை தடுத்து நிறுத்தியது.
அதற்குப் பின்னர், ஹிங்குராக்கொடவில் அந்த விமானப் பராமரிப்பு நிலையத்தை அமைக்க இலங்கை அரசாங்கம் யோசனை தெரிவித்தது. ஆனால் சீனா அதற்கு இன்னமும் கூட இணங்கவில்லை.
விமானப் பராமரிப்பு நிலையம் என்ற பெயரில் இலங்கையில் கால் வைக்க சீனா திட்டமிட்டுள்ளதை இந்தியா அறிந்து கொண்டுள்ள நிலையில் தான், அதற்கான கதவுகளை முற்றாக மூட நினைக்கிறது.
பாகிஸ்தானிடம் ஜே.எவ்-17 போர் விமானங்களை இலங்கை விமானப்படை வாங்கினாலும் கூட, அவை சீனாவின் மூலத் தயாரிப்பின் பிரதிகள் என்பதால், சீனாவின் கை ஓங்கிவிடும். அதனைத் தடுக்கவே இந்தியா முயற்சிக்கிறது.
எவ்வாறாயினும், இந்தியாவைப் பகைத்துக் கொண்டு பாகிஸ்தானிடம் போர் விமானங்களை இலங்கை வாங்க முனையாது. அது ஆபத்தானது என்பதை இலங்கை அறியும்.
எனவே, இந்த போர் விமானக் கொள்வனவு விவகாரம் இலங்கைக்கு தலைவலியான விடயமாகவே இருக்கும் போலத் தெரிகிறது.


0 Comments