பிரபல இந்தி நடிகை ஜியாகான் தற்கொலை செய்துகொண்டார். அவரை ஏமாற்றி, தற்கொலைக்கு தூண்டியதாக காதலரான நடிகர் சூரஜ் பஞ்சோலி அதிரடியாக கைது செய்யப்பட்டார். சூரஜ் 21 நாட்களை சிறையில் கழித்துவிட்டு, ஜாமீனில் விடுதலையானார்.
ஜியாகானுடன் தனக்கு ஏற்பட்ட உறவு பற்றியும், தற்கொலை செய்த கடைசி நாளில் நடந்தது பற்றியும் விவரிக்கிறார்.
உறவு: ஜியாகானை நான் நபீஷா என்று செல்லமாக அழைப்பேன். 11 ஆண்டுகளாக எங்களுக்குள் நெருக்கம் இருந்தது. நான் அவளை முதன்முதலில் சந்தித்தபோது விரக்தியின் விளிம்பில் நின்றிருந்தாள். தன்னுடைய கடந்த காலமும், பணிச்சுமையும் அவளுக்கு மிகுந்த மன அழுத்தத்தை கொடுப்பதாக கூறினாள். அதிலிருந்து வெளிவர, ஒரு நல்ல நண்பனாக நான் அவளுக்கு உதவினேன்.
தன்னுடைய 14 வயதில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறாள். அந்த சம்பவம் அவளை வெகுவாக பாதித்திருந்தது. தற்கொலை செய்து கொள்ள பலமுறை முயன்றிருக்கிறாள். லண்டனில் மனநல ஆலோசனை பெற்றாள். ஆனாலும் அந்த பலாத்கார பாதிப்பு மீண்டும் மீண்டும் நினைவில் வந்து அவளை தொல்லைபடுத்தியது. நண்பனாக இருந்த நான் பின்பு அவள் காதலன் ஆனேன்.
காதல் கடிதம்: இருவரும் நடிப்பில் பரபரப்பாக இருந்தாலும் நேரம் கிடைக்கும்போது சந்தித்துக்கொள்வோம். அவளிடமிருந்து காதல் கடிதங்கள் வரும். அவள் என்னை எவ்வளவு நேசித்தாள் என்பதற்கு அவையே அத்தாட்சி.
அதில் ஒரு கடிதத்தில்..
‘‘சூரஜ் நீ என் வாழ்க்கையில் விடியலை ஏற்படுத்திவிட்டாய். வாழ்க்கை எவ்வளவு அழகானது என்பதை இப்போது நான் உணர்கிறேன். இது தெரியாமல் பலமுறை நான் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். அதை இப்போது நினைத்தாலும் முட்டாள்தனமாக தெரிகிறது. என் மணிக்கட்டை அறுத்து ரத்தம் வெளியேறிக் கொண்டிருந்த நேரத்தில் எனக்குள்ளே ஒரு பயம் ஏற்பட்டு விட்டது. எங்கே நான் செத்து விடுவேனோ என்று பயந்து துடித்தேன். ‘வாழ்க்கையில் நடந்த கசப்புகள் அனைத்தும் கெட்டக்கனவு. அதை நினைத்து நிஜ வாழ்க்கையை இருட்டாக்கிக் கொள்ளக்கூடாது’ என்ற உன் வார்த்தைகள் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருக்கும். சத்தியமாக இனி இது போன்ற தற்கொலை முயற்சிகளில் ஈடுபட மாட்டேன்’’ என்று எழுதியிருந்தாள்.
ஜியா எழுதியதாக சொல்லப்பட்ட, ‘தற்கொலை கடிதத்தில்’ இருந்தது அவளுடைய கையெழுத்து அல்ல என்பதை இந்த கடிதத்தை வைத்து தான் உறுதி செய்தார்கள்.
பிரிவு: எங்கள் இருவரின் காதலை ஜியாவின் தாய் விரும்பவில்லை. நான் நல்ல நண்பனாகவும், ஆறுதலாகவும் மட்டுமே இருக்கவேண்டும் என்று அவர் விரும்பினார். ஆனால் ஜியா என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். அதற்கு இன்னும் மூன்றாண்டுகள் காத்திருக்கும்படி சொன்னேன்.
‘நான் நடித்து புகழ் பெறவேண்டும். சம்பாதித்து சொந்த காலில் நிற்க வேண்டும். சொந்தமாக வீடு வாங்க வேண்டும். இதற்கெல்லாம் சிறிது காலம் பிடிக்கும். காத்திருக்க தயாரா?’ என்று கேட்டேன்.
‘இல்லை நீ என்னை ஏமாற்ற முயற்சி செய்கிறாய்’ என்று அழுதாள். திருமணம் செய்துகொண்டு நல்ல குடும்பத்து மருமகளாக வாழவேண்டும் என்று விரும்பினாள்.
‘நியாயமான ஆசைதான். ஆனால் அதற்கு இப்போது நான் தயாரில்லை. நீ யாரை வேண்டுமான£லும் திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையை தொடங்கு. நான் விலகிக் கொள்கிறேன்’ என்றேன்.
மீண்டும் அழைப்பு: நான் அவளை பிரிந்து மூன்று நாட்களாகிய நிலையில், அன்று இரவு ஜியாவிடமிருந்து போன் வந்தது. ‘நான் உன்னை சந்திக்க விரும்புகிறேன்’ என்றாள். ‘அதற்கு அவசியமில்லை என்று நான் நினைக்கிறேன். இனி அழைக்காதே’ என்று கூறி தொடர்பை துண்டித்து விட்டேன். அதன் பின்புதான் அவள் தற்கொலை நடந்தது. அந்த செய்தியை கேள்விப்பட்டு நான் மனமுடைந்துபோனேன்.
நான் அவளை தற்கொலைக்கு தூண்டியதாக அவளுடைய அம்மா புகார் கொடுத்தார். நான் திருமணத்தை தள்ளிப்போட்டதும், போன் இணைப்பை துண்டித்ததும், எப்படி தற்கொலைக்கு தூண்டுவதாகும்? நான் அவளை ஏமாற்றிவிட்டு வேறு யாரையாவது திருமணம் செய்து கொண்டேனா?
மலர்க்கொத்து மர்மம்: நான் அவளுக்கு மலர்க்கொத்து அனுப்பியது உண்மைதான். அது அவளிடம் இருந்து விலகியதை கொண்டாட அனுப்பிய பூச்செண்டு அல்ல. தனக்கு தெலுங்கில் ஒரு புதிய படம் ஒப்பந்தமாகி இருப்பதாகவும், படப்பிடிப்பு ஆரம்பிக்கும் முன்பு சிறிது காலம் லண்டன் செல்ல இருப்பதாகவும் கூறினாள். சரி அங்கேயாவது அமைதியாக இருக்கட்டுமே என்று நினைத்துதான் அழகான லில்லி மலர்களை ‘ஆல் த பெஸ்ட்’ என்ற வாசகத்துடன் அனுப்பிவைத்தேன். அதற்கு அவள் நன்றி தெரிவித்த மெசேஜ் கூட என்னிடம் உள்ளது. கண்ணை மூடிக்கொண்டு சம்பந்தமில்லாத பழியை என் மீது சுமத்துகிறார்கள்.
சிறையில்: ஜியா இறந்தவுடன் அவளுடைய அம்மா ஆவேசமாக போய் நான்தான் கொலை செய்து விட்டதாக புகார் கொடுத்துவிட்டார். எப்படியாவது என்னை சிறையில் தள்ளி பழியை தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவருடைய நோக்கம். காவல் நிலையத்தில் விசாரணைக்காக ஐந்து நாட்கள் வைக்கப்பட்டேன். அவள் இறந்த செய்தியோடு காவல்துறையின் கொடுமையும் சேர்ந்து மனதளவிலும் உடலளவிலும் எனக்கு வேதனையை தந்தது. ஒருவேளை அவள் அழைத்தபோது பேசியிருந்தால் இந்த சோகம் நிகழ்ந்திருக்காதோ என்று தோன்று கிறது. ஒருவேளை தான் சாகப்போகும் தீர்மானத்தை என்னிடம் சொல்லத்தான் பேசினாளோ என்னாமோ? எதுவாக இருந்தாலும் இந்த தற்கொலை அர்த்தமற்றது.
அவள் எழுதியதாக கூறி ஒரு கடிதத்தை காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்கள். அது அவளுடைய கையெழுத்தே அல்ல என்பதை நிரூபித்துவிட்டேன்.
போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்டில் அவள் அதிகப்படியாக மது அருந்தியிருப்பதாக தகவல் வந்தது. நான் காரணமின்றி 21 நாட்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டேன். கேட்டால் வெளியில் சென்று தடங்களை அழித்துவிடுவேன் என்றனர். திட்டம் போட்டு கொலை செய்த கொலையாளியைப்போல நடத்தினார்கள். அவளாகவே செய்து கொண்ட கொலைக்கு என்ன தடயம் இருக்க போகிறது. யாரையோ பழிவாங்க வேண்டும் என்ற மனநிலையில் இருப்பவர்கள்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இவைகளுக்கு மத்தியில் சிரமப்பட்டு ஜாமீனில் வெளிவந்தேன். வழக்கு இன்னும் முழுமையாக முடியவில்லை. தினமும் காவல்நிலையம் சென்று கையெழுத்திடுகிறேன். சல்மான்கான் படத்திலும் நடிக்கிறேன்!
சூரஜ் சோகமாக சொல்கிறார்!
நியாயம் யார் பக்கம் இருந்தாலும் தற்கொலை எப்படி நியாயமாகும்?!


0 Comments