Home » » செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா? – சிவசக்தி ஆனந்தன் கேள்வி

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் உயர்தர கலைப்பிரிவு மாணவன் செந்தூரன், இந்நாட்டின் ஜனாதிபதிக்கு ‘அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி’, உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவரது செயல் இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீது தமிழ் மக்கள் கொண்டுள்ள விரக்திக்கும் உளவியல் தாக்கத்திற்கும் ஒரு உதாரணமாகப் பார்க்கப்படவேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க வேண்டியதும் அரசாங்கத்தின் கடமையாகும்.
அரசியல் கைதிகளின் விடுதலையில் ஜனாதிபதியும் அரசாங்கமும் தமது வாக்குறுதிகளையும் உறுதிமொழியையும் நிறைவேற்றாத காரணத்தால்
விரக்தியுற்ற செந்தூரன் தனது விரக்தியின் உச்சகட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக தனது இன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என்ற செய்தி கேட்டவுடன் மிகவும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்தேன். எமது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இத்தகைய முடிவுகளை எடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஜனநாயக ரீதியான போராட்டங்களை முன்னெடுத்து வெற்றிபெற்று, எமது பிரதேசத்தை மாணவர்கள், இளைஞர்கள் தமது கல்வி மற்றும் ஆளுமையால் அபிவிருத்தி செய்து ஏனைய நாடுகளுடன் போட்டியிடக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.
தனது வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் தானே மீறும் செயலை, நல்லாட்சி என்று கூறிக்கொள்ளுகிறது இந்த அரசாங்கம். அத்தகைய அரசாங்கத்திற்கு எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிபந்தனை அற்ற ஆதரவினை வழங்கியிருப்பதையிட்டும் நாம் வெட்கித் தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது.
அரசாங்கம் தனது காலக்கடத்தல் நாடகத்தை இனியும் அரங்கேற்றாமல், அரசியல் கைதிகளின் விடுதலையை அரசியல் ரீதியாக அணுகி அவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிரபராதிகளாக விடுவிக்கப்பட்டவர்கள் இதுவரை காலமும் அனுபவித்த சிறைவாசத்திற்கு இந்த அரசாங்கம் நட்டஈடு வழங்க முன்வரவேண்டும். தமது வாதத்திறமையால் அரசியல் கைதிகளை நிரபராதிகள் என்று நிரூபித்து விடுவித்த சட்டத்தரணிகள் அவர்களுக்கு நட்டஈட்டைப் பெற்றுக்கொடுப்பதற்கும் உதவ வேண்டும். இதன் மூலமே வருங்காலத்தில் எழுந்தமானமான கைதுகள் தவிர்க்கப்படும். சட்டவல்லுனர்கள் இந்த விடயத்தில் கூடுதல் கவனம் எடுக்க வேண்டும் என்று தமிழ் மக்களின் சார்பில் அன்புடனும் உரிமையுடனும் கேட்டுக்கொள்கிறேன்.
செந்தூரனின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிப்பதோடு, அஞ்சலிகளையும் செலுத்துகின்றோம்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |