மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயமானது 69 ஆங்கில ஆசிரியர்களின் பற்றாக்குறையுடன் இயங்கி வருகின்றது என பட்டிருப்பு கல்வி வலய வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி நகுலேஸ்வரி புள்ளைநாயகம் தெரிவித்தார்.
பட்டிருப்பு கல்வி வலயத்தின் தென்பகுதி கிராம பாடசாலைகளுக்கு இடையே நேற்று பெரிய கல்லாறு றோசாலயா கல்வி, கலாசார பொது சேவை நிலையத்தினரால் நடாத்தப்பட்ட ஆங்கில எழுத்துக்கூட்டல், பேச்சுப்போட்டிகளில் வெற்றி பெற்ற அணியினருக்கும், மாணவர்களுக்கும் அமரத்துவமடைந்த சமூகசேவையாளர்களின் ஞாபகார்த்தமாக வெற்றிக்கிண்ணங்களும், சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்வு நேற்று மாலை கல்லூறு விநாயகர் வித்தியாலய மண்டபத்தில் நிறுவன தலைவர் எஸ்.சவுந்தரநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு பட்டிருப்பு வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி.நகுலேஸ்வரி புள்ளைநாயகம் பிரதம அதிதியாகவும், கல்லாறு மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்கடர் எஸ்.குகராசா, பட்டிருப்பு வலய ஆங்கில உதவிக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சந்திரகாசன் கௌரவ அதிதிகளாகவும் மற்றும் ஆலயங்களின் மதகுருமார்கள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், வெற்றிபெற்ற மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய வலயக்கல்வி பணிப்பாளர்..
எமது வலயத்தினை பொறுத்தவரையில் பெரும்பாலும் ஆங்கில ஆசிரியர்களாக இல்லாதவர்களே ஆங்கில பாடத்தினை கற்பிக்கவேண்டிய ஒரு துர்ப்பாக்கிய நிலையில் இருந்து கொண்டிருக்கின்றோம் அதனை நிவர்த்தி செய்து கொண்டு வரும் ஒரு நிறுவனமாக இந்த றோசாலயா நிறுவனம் தங்களது மேலான பணியினை செய்து வருவதனைப் பார்க்கின்றேன்.
பட்டிருப்பு வலயத்தினை பொறுத்தவரையில் ஆங்கில பாடத்தில் கோட்டைக்கல்லாறு, பெரிகல்லாறு மாணவர்களே அதிகமான திறமைகளை காட்டுவதுடன் ஆங்கில பாடத்தில் அதிக தேட்சியும் பெற்று வருகின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிறுவனமானது குறுகிய கால செயற்பாட்டினை கொண்டிராமல் மிகவும் நீண்ட காலச்செயற்பாட்டினை கொண்டதாக அமைந்ததன் மூலம் மாணவர்களது எதிர்காலம் ஒரு நல்ல எதிர்காலமாக அமையும் என்பதில் ஐயமில்லை. எமது வலயத்தில் பல நிறுவனங்கள் கல்விச்சேவையினை செய்து வந்தாலும் றோசாலயா நிறுவனமானது இடைவிடாது தமது பணியை தொடர்ந்து செய்து வருகின்றது.
இந்நிறுவனத்தினால் முன்னெடுக்கப்படும் இந்த நிகழ்வில் பல பிரதேசங்களையும் சேர்ந்த மாணவர்கள் பங்கெடுப்பது போற்றுதற்குரியதாக உள்ளபோதும் சில கிராமங்களில் உள்ள பாடசாலை மாணவர்கள் இதில் இணைந்து கொள்ளாதது மிகவும் மனவேதனையளிக்கின்றது.
இந்தச்செயற்பாடானது தொடர்ந்து செல்லாமல் அப்பிரதேச பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்களிடத்தே விழிப்புணர்வினை கொண்டு செல்ல வேண்டிய ஒரு கட்டாய தேவை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
சில நிறுவனங்கள் எங்களுடன் ஒரே நாளில் தொலைபேசி மூலம் கதைத்து சில வேலைத்திட்டங்களை செய்ய முன்வருவார்கள் அதனால் அந்த வேலைத்திட்டத்தின் அனைத்து பயனும் மாணவர்களை சென்றடைவதில்லை ஆனால் றோசாலயா நிறுவனம் அவ்வாறு இல்லாமல் நன்கு நீண்ட கால இலக்கினை திட்டமிட்டே தனது கல்விப்பணியினை செய்து கொண்டு வருகின்றது.
றோசாலயா நிறுவனமானது கல்விப்பணியில் மாத்திரம் தனது நாட்டத்தினை செலுத்தாமல் கலை, கலாசாரம் ஆகியவற்றிலும் தமது பணியினை முன்னெடுத்து வருவது இந்தக்கிராமத்திற்கும் அதனோடு இணைந்த கிராமங்களுக்கும் ஒரு எடுத்துக்காட்டாக இருந்து வருகின்றது எனவும் கூறினார்.














0 Comments