பூமியில் இருந்து சுமார் 22 கோடி கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் அமெரிக்கா, ரஷியா, இந்தியா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மும்முரமாக ஈடுபட்டு உள்ளன.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக ’மார்ஸ் எக்ஸ்பிரஸ்’ என்ற விண்கலத்தை 2003-ம் ஆண்டில் அனுப்பியது. அந்த விண்கலம் சமீபத்தில் போட்டோக்களை எடுத்து அனுப்பியது. அதை வைத்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். அதில் செவ்வாய் கிரகத்தின் தெற்கு பகுதியில் பனிக்கட்டி படிமங்கள் உறைந்து கிடப்பது கண்டு பிடித்து உள்ளனர்.
இது போல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் செவ்வாய் கிரகத்தை ஆராய ‘மங்கள்யான்’ விண்கலம் உருவாக்கப்பட்டு கடந்த 2013 ஆண்டு நவம்பர் 5–ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. இதில் 5 ஆய்வு கருவிகள் அனுப்பி வைக்கப்பட்டது. ரூ.460 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த விண்கலம் விண்வெளியில் 324 நாட்கள் பயணம் செய்து திட்டமிட்டப்படி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ம் தேதி செவ்வாய் கிரக சுற்றுவட்டப் பாதையை அடைந்தது.
செவ்வாய் கிரகத்தில் இருந்து மங்கள்யான் விண்கலம் அனுப்பிய செவ்வாய் கிரகத்தின் புதிய 3-டி படத்தை இஸ்ரோ வெளியிட்டு உள்ளது. புகைப்படமானது, 1,857 கி.மீட்டர் உயரத்திலிருந்து எடுக்கப்பட்டது என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. கடந்த ஜூலை மாதம் 19-ம் தேதி மங்கள்யான் எடுத்த இந்தப் புகைப்படமானது, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் ஓஃபிர் சஸ்மா என்ற பள்ளத்தாக்கு என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஓஃபிர் சஸ்மா, செவ்வாய் கிரகத்தில் இருக்கும் நீளமான பள்ளத்தாக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது குறித்து ஆராய நாசா சார்பில் கியூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.அது தொடர்ந்து செவ்வாய் கிரகத்தின் புகைப்படங்களை அனுப்பி வருகிறது.
செவ்வாய் கிரகத்தில் வரும் 2039-ம் ஆண்டுக்குள் விண்வெளி ஆராய்ச்சி வீரர்களை தரையிறங்க வைக்க முடியும் என அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் விஞ்ஞானிகள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
செவ்வாய் கிரகத்திற்கு விண்வெளி வீரர்களை அனுப்பும் திட்டத்தை நீண்ட நாட்களாகவே அதிக முன்னுரிமை பட்டியலில் வைத்துள்ளது நாசா.
இதற்காக 4 வகையான விண்வெளி திட்டங்களை கையில் எடுத்துள்ள நாசா முதற்கட்டமாக, வரும் 2018-க்குள் செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பும் மெகா ராக்கெட்டை தற்போது உருவாக்கி வருகிறது. முதல் திட்டத்தை 2029-லும், 2-வது திட்டத்தை 2032-லும், 3-வது திட்டத்தை 2033-ம் ஆண்டிலும், கடைசி திட்டத்தை 2039-வது ஆண்டிலும் செயல்படுத்த முடிவு செய்துள்ளது. அதன்படி, 2039-க்குள் மனிதர்களை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்க நாசா முயற்சித்து வருகிறது. எனினும், இதற்கான செலவு விபரங்களை தெரிவிக்க நாசா மறுத்துவிட்டது.
தற்போது செவ்வாய் குறிதது திடுக்கிடும் அறிவிப்பு ஒன்றை வெளியிட நாசா விண் வெளி ஆய்வு மையம் அவசர பத்திரிகையாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்து உள்ளது. செவ்வாயில் தண்ணீர் இருப்பதை நாசா கண்டறிந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் அங்கு மனின் வாழ தகுந்த சூழல்கள் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.


0 Comments