மினுவாங்கொடை – யாகொடமுல்ல பகுதியில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் ஷெல்டன் சில்வா உள்ளிட்ட ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் 5 பேர் உயிரிழந்தனர்.
நிக்கவெரட்டிய பகுதியில் மரண சடங்கொன்றில் கலந்துகொள்வதற்குப் பயணித்துக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த எம்.ஷெல்டன் சில்வாவின் பூதவுடல் அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
கலென்பிதுணுவெவ ஹூருலுனிகவெவ பிரதேசத்தைச் சேர்ந்த எம். ஷெல்டன் சில்வா மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.
44 வயதான ஷெல்டன் 30 வருடங்களுக்கு முன்னர் பொலிஸ் சேவையில் இணைந்தார்.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் கான்ஸ்டபிளாக அவர் 24 வருடங்கள் சேவையாற்றியுள்ளார்.
அவர் உயிரிழப்பதற்கு முந்தைய நாள் உப பொலிஸ் பரிசோதகராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
பொலிஸ் கான்ஸ்டபிளான இசுரி இதுனில் திசாநாயக்க விபத்தில் உயிரிழந்த மற்றுமொருவராவார்.
குடும்பத்தின் இரண்டாவது பிள்ளையான அவர், தனது 21 வயதை பூர்த்தி செய்த மறுதினம் உயிரிழந்துள்ளார்.
விபத்தில் உயிரிழந்த பொலிஸ் கான்ஸ்டபிளான சஹன் நயனஜித் பிரேமதாச 2013 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்தார்.
மூத்த பிள்ளையான அவருக்கு இரட்டைச் சகோதரிகள் உள்ளனர்.
அவரின் தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தந்தையும் நோய்வாய்ப்பட்டுள்ளார்.
குடும்பச் சுமையை தன்மீது சுமத்திக்கொண்டு சகோதரிகளின் எதிர்காலத்திற்காக முயற்சித்த சஹன் நயனஜித் 21 ஆவது வயதில் உயிரிழந்தார்.
சம்பவத்தில் உயிரிழந்த வாகன சாரதி பொலிஸ் கான்ஸ்டபிள் டி.எம்.ரஞ்ஜித் புஷ்பகுமாரவின் பூதவுடல் ஹேன்னெக்கம – மொரகொல்லாகமவில் அமைந்துள்ள அவரின் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த புஷ்பகுமார ஒரு வயதும் 8 மாதங்களும் நிரம்பிய ஒரு குழந்தையின் தந்தையாவார்.
பொலிஸ் கான்ஸ்டபிள் பீ.எ.ஜீ.சுதாகர நிராஷானின் பூதவுடல் அவரது வீட்டிற்கு இதுவரை கொண்டு செல்லப்படவில்லை.
குடும்பத்தின் இளையவரான அவர் 24 வயதில் உயிரிழந்தார்.
வளைவில் பஸ் ஒன்றை முந்திச் செல்வதற்கு முயற்சித்த சந்தர்ப்பத்தில் நேரெதிராக வந்த இரண்டு பஸ்கள் மோதியதில் நேற்று இந்த விபத்து நேர்ந்தது.
இந்த விபத்து இடம்பெற்ற மினுவங்கொடை – யாகொடமுல்ல பகுதியில் நேற்று கடும் மழை பெய்துள்ளது.
குறித்த பகுதியில் அதிக விபத்துக்கள் இடம்பெறுவதாக பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
0 Comments