Home » » இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

இராணுவ பாடசாலைக்கு அள்ளிக் கொடுத்த மஹிந்த அரசாங்கம்! வெளிவரும் அதிர்ச்சித் தகவல்கள்

கொழும்பு கொம்பனித்தெரு பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவக் கல்லூரிக்கு கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் அள்ளிக்கொடுத்த விபரங்களை ராவய பத்திரிகை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.
இராணுவத்தினரின் குழந்தைகள் மட்டும் கல்வி கற்பதற்கென்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பிரகாரம் 2007ம் ஆண்டு இந்தப் பாடசாலை உருவாக்கப்பட்டது.
அதற்காக சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை அனுமதிப்பத்திரத்தின் பிரகாரம் வருடமொன்றுக்கு 200 மில்லியன் ரூபா பாடசாலையின் பௌதீவ வள அபிவிருத்திக்காக வழங்கப்பட்டுள்ளது.
மேலும் இலங்கையின் எந்தவொரு பாடசாலைக்கும் வழங்கப்படாத வகையில் அனைத்து வசதிகளும் இந்தப் பாடசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதுடன் இன்றுவரை ஒரு பிரிகேடியர் தலைமையிலான இராணுவப் பிரிவொன்று குறித்த பாடசாலைக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றது.
கடந்த 2014ம் வருடத்தில் மட்டும் 448.1 மில்லியன் ரூபா இந்தப் பாடசாலைக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் முன்னைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவும் இணைந்து சமர்ப்பித்திருந்தனர்.
இவ்வாறு ஒதுக்கப்பட்ட நிதிதியில் 98.1 மில்லியன் ரூபா பாடசாலையில் லிப்ட் ஒன்றை நிறுவ செலவழிக்கப்பட்டிருந்தது.
நாட்டின் பல பல பாடசாலைகளில் குறைந்த பட்சம் மின்விசிறி வசதி கூட இல்லாத நிலையில் இராணு பாடசாலைக்கு மட்டும் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறாக வருடம் தோறும் பெருமளவான பணத்தைக் கொட்டி நடாத்தப்பட்டு வரும் இராணுவப் பாடசாலையின் கல்வித்தரமும் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியதாக இல்லாத நிலையில் இராணுவத்தினரின் பிள்ளைகள் கல்வி கற்கும் பாடசாலை என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் பாடசாலைக்கு இவ்வாறான வசதிகளை அள்ளி வழங்குவது ஏற்றத்தாழ்வான நிலையை உருவாக்கி விடும் என்று ராவய பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.
அத்துடன் கடந்த 2007ம் ஆண்டு தொடக்கம் இதுவரை இந்தப் பாடசாலையின் செலவினங்கள் தொடர்பில் எந்தவொரு கணக்காய்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்பது மிகப் பெரிய அதிர்ச்சியாகும்.
இது பற்றிய தகவல் கிடைத்துள்ள நிலையில், தற்போது கல்வியமைச்சு இராணுவப் பாடசாலையின் செலவினங்கள் குறித்த கணக்காய்வு நடவடிக்கையொன்றுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |