Home » » இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்களுக்கு ஐநா உதவி!

இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கு வடக்கு மக்களுக்கு ஐநா உதவி!

இலங்கையின் வடக்கு மக்களுக்கு சமாதான நடவடிக்கைகளில் நம்பிக்கையை ஊக்கப்படுத்துவதற்கான உதவிகள் உட்பட அந்த நாட்டுக்கு பரந்துபட்ட தொழில்நுட்ப மற்றும் நிதிகளை ஒதுக்கியுள்ளதாக ஐநா நேற்று கூறியுள்ளது.
ஐநாவின் தலைமைச் செயலர் மற்றும் அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த ஐநாவின் துணைச் செயலர் ஆகியோரின் உறுதி மொழிகளுக்கு ஏற்ப இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக ஐநா இந்த உதவிகளை வழங்கும் என்று ஐநா பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போர்க்குற்றங்கள் குறித்த பொறுப்புக் கூறல் விடயத்தில், சர்வதேச பொறிமுறைக்கு பதிலாக உள்நாட்டு பொறிமுறை ஒன்றை அமுல்படுத்த ஏதுவாக ஐநா அந்த நாட்டுக்கு நிதி உதவிகளை செய்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஐநா பேச்சாளரான ஸ்டீபன் டுஜரிக்,
நல்லிணக்கத்துக்காகவும் பொறுப்புக்கூறலுக்காகவும் இலங்கை அரசாங்கமும், இலங்கை மக்களும் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஐநா உதவும் என்றும், வடமாகாண முதலமைச்சர் கேட்டதற்கு இணங்க அங்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை ஐநா செய்யும் என்றும், சமாதான முயற்சிகளில் வடமாகாண மக்களை நம்பிக்கை கொள்ளச் செய்வதற்கான உதவிகளும் அதில் அடங்கும் என்றும் கூறினார்.
சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதி:
இந்த சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான நிதி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தவும், உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தவும், மனித உரிமைகளை அங்கு மேம்படுத்தவும், குற்றஞ்செய்பவர்கள் தண்டிக்கப்படாமல் இருக்கும் நிலையை அகற்றவும் பயன்படும் என்றும் அந்த பேச்சாளர் மேலும் கூறினார்.
அரசாங்கத்தினால் விடுவிக்கப்பட்ட இடங்களில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தவும், நல்லிணக்க முயற்சிகளுக்கும் ஏற்கனவே ஒரு மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டு விட்டதாகவும் அவர் கூறினார்.
துணைக் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், பொறுப்புக் கூறும் பொறிமுறை உள்நாட்டுக்குரியதா, அல்லது சர்வதேச பொறிமுறையா என்பதற்கு அப்பால், திட்டங்களை அமுல்படுத்த நாம் இலங்கை அரசாங்கத்துக்கும், வடக்கு மாகாண சபைக்கும் உதவுகிறோம் என்பதுதான் இங்கு முக்கியம் என்றும் அவர் கூறினார்.
அங்கு மேற்கொள்ளப்படப் போவது உள்நாட்டுப் பொறிமுறையா அல்லது சர்வதேசப் பொறிமுறையா என்பதை அறிய ஐநா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கைக்காக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Share this article :

0 comments:

 

" KURUKKALMADAM NEWS, BATTICALOA, SRI LANKA... Designed by P.LOSHITHARAN ".

Copyright © 2011. KURUNEWS.COM, KURUKKALMADAM, BATTICALOA, SRI LANKA - All Rights Reserved
Designed by P.LOSHITHARAN |