இந்தியப் பேரரசின் முன்னாள் ஜனாதிபதியும் மங்காத கீர்த்தியுமான டாக்டர்.ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களின் மறைவு பேரதிர்ச்சியை ஏற்படுத்திய நிகழ்வு என முன்னைநாள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த அப்துல் கலாம் அவர்கள் சகலருக்கும் முன்னுதாரணமான மனிதர். குறிப்பாக இலட்சியங்களை வரித்துக்கொண்ட இலக்குகளை நோக்கி பயணிக்கும் மனிதர்களுக்கு அவரின் வாழ்க்கை சிறந்தபாடம்.
உலகின் சனத்தொகையில் முதல்வரிசைகளில் நிற்கும் ஒரு பெரிய ஜனநாயக இராச்சியத்தில் ஒரு முதன்மனிதராக ஒரு தமிழன் இருந்துள்ளான் என்பது உலகத்தமிழர்களுக்கு வரலாற்றுப்பெருமை தருகின்ற விடயம்.
அப்துல்கலாம் எளிமையின் இராச்சியம். குழந்தைகளின் தோழன். தேடல்களின் சுரங்கம். தேசப்பற்றின் மறுவடிவம்.
இந்தியாவின் தமிழ் நாட்டில் இராமேஸ்வரத்தில் ஓர் வறுமைப் பின்னணியில் பிறந்து கடைகளுக்குப் பத்திரிகை விநியோகித்து சம்பாதித்து படித்து உயர்ந்த ஓர் மாமனிதன் அப்துல்கலாம்.
அவரின் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் இன்றைய சமுதாயம் ஓர் புத்தகமாக படிக்கவேண்டும். தன் தாய் நாடான இந்தியா பற்றி அணு விஞ்ஞானியான அப்துல்கலாம் கண்ட கனவு மிக உயர்ந்தது.
அந்தக் கனவை ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் விதைத்தார். ஏன் கண்டங்கள் நாடுகள் தாண்டியும் இளைய சமுதாயத்திடம் விதைத்தார். இந்தியாவை மற்றைய நாடுகள் திரும்பி பார்க்கவும் இந்தியாவை பற்றி ஆராயவும் வைத்தவர் அப்துல்கலாம் என்ற ஒரு எளிமையான தோற்றம் பண்பு மிக்க மனிதர்.
இந்தியப் பேரரசின் மற்றும் சர்வதேசங்களினதும் உயர்ந்த விருதுகளை பெற்றுக்கொண்டபோதும். அவரின் பணிவு ஆச்சரியப்படவைப்பது. தான் கற்றுக்கொண்ட யாவற்றையும் தான் சிந்தித்த யாவற்றையும் மற்றவர்க்கு சொன்னார்.
மற்றவர்களையும் அர்த்த புஸ்டியோடு வாழத்தூண்டினார். இந்தியாவின் குடியரசு தலைவர் பதவி என்பது இந்தியா அப்துல்கலாம் என்ற வடிவத்தில் பெற்றுக்கொண்ட வரம். ஒரு பெரும் அறிவாளிக்கு தன் தாய் நாட்டுக்காக உழைத்த ஓர் அணு விஞ்ஞானிக்கு இந்திய ஜனநாயகம் தலை வணங்கியது வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
தமிழ் பண்பாட்டியலை மொழியின் மீதான பற்றுதலை மறக்காமல் இறுதிவரை இந்த உலகத்தொடு ஒட்டி வாழ்ந்தார். அவரின் உயர்ந்த சிந்தனையான கனவு காணுங்கள் என்பது இளைய சமுதாயத்திடம் எப்பொழுதும் ஒலித்துக்கொண்டிருக்கும்.
மாண்புமிக்க அப்துல்கலாம் அவர்கள் பலகோடி உயரிய மனிதர்களுக்கு வித்திட்டு சென்றிருப்பார் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை.
அவரின் மறைவு அறிவு நதியின் மறைவு. அமரர்.பாரத ரத்னா. ஏ. பி. ஜே. அப்துல்கலாம் அவர்களின் மறைவுக்கு எமது மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.
0 Comments