Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

எதிர்வரும் பாராளுமன்றத்தில் சிலர் பிரதிநிதித்தவத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாது

கல்குடாத்தொகுதி முஸ்லீம் பிரதேசத்தில் வாழைச்சேனை மற்றும் பிறைந்துரைச்சேனை கிராமங்கள் ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரசின் வளர்ச்சிக்கு காலங் காலமாக பங்களிப்புச் செய்த பிரதேசமாகும். ஆகவே, எதிர்காலத்திலே வாழைச்சேனை மற்றும் பிறைந்தரைச்சேனைப் பகுதிகளை அபிவிருத்தி செய்கின்ற பொறுப்பு முஸ்லிம் காங்கிரசுக்கு நிச்சயமுண்டு. அதனை கட்சி நிச்சயம் செய்யுமென்று கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நஷீர் அஹமட் தெரிவித்தார். 

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள வாழைச்சேனை வை.அஹமட் வித்தியலாயத்தில் மூன்று மாடிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வும், தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வும்  வித்தியாலய முன்றலில் அதன் அதிபர் என்.எம்.கஸ்ஸாலி தலைமையில் இடம் பெற்ற போதே அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்சொன்னவாறு தெரிவித்தார். 

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில். 

எந்தவித எதிர்பார்ப்புமின்றி கட்சியின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்த இப்பகுதி மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய பொறுப்பு முஸ்லீம் காங்கிரசுக்குள்ளது. அதனை கட்சி செய்வதற்குத் தயாராகவுமுள்ளது. எதிர்காலத்தில் ஆட்சியமைக்கப்போகும் கட்சியைத் தீர்மானிக்கும் கட்சியாக முஸ்லீம் காங்கிரஸ் உள்ள படியால் இப்பகுதி அதிகமதிகம் அபிவிருத்தி காணும். 

இன்னும் ஒரு மாதத்தில் பாராளுமன்றம் கலைக்கப்படலாம். கலைக்கப்படும் போது, தற்போது பாராளுமன்ற உறுப்பனர்களாக இருக்கும் சிலரது பதவிகள் இல்லாமல் செய்யப்படும் அதன் பின் அவ்வாறானவர்கள் பாராளுமன்றப் பிரதிநிதித்தவத்தை நினைத்துக்கூடப் பார்க்க முடியாதளவுக்கு தனது அரசியல் காய் நகர்த்தல்களை ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் நடாத்தும். ஸ்ரீ லங்கா முஸ்லீம் காங்கிரஸ் எதிர்வருகின்ற அரசாங்கத்தைத் தீர்மானிக்கின்ற ஒரு அரசியல் கட்சியாகத்தான் இருக்கும் வேறு எந்த ஒரு முஸ்லீம் அரசியல் கட்சியும் அரசாங்கத்தைத் தீர்மாணிக்கின்ற ஒரு கட்சியாக இருக்க முஸ்லீம் காங்கிரஸ் அனுமதிக்கப்போவதில்லை.

மக்கள் அப்படிப்பட்ட கட்சிகளுக்கு வாக்களிப்பதற்கும் தயாரில்லை. 1994ம் ஆண்டு தொடக்கம் 2000ம் ஆண்டு வரைக்கும் மறைந்த தலைவர் அஸ்ரபின் காலத்திலே முஸ்லீம் காங்கிரஸ் எவ்வாரான அரசியல் சாதனைகளை சாதித்ததோ அதனை விட பன்மடங்கு சாதனைகளைச் சாதிக்கின்ற ஒரு அரசியல் நிலைக்கு எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலின் பின் நடைபெறவிருக்கின்றது. எதிர்வரும் தேர்தலில் நாங்கள் நகர்த்துகின்ற அரசியல் காய்நகர்த்தல்கள் நிச்சயமாக அன்றிருந்த அரசியல் பலத்தை விட பன்மடங்கு பலமுள்ளதாக முஸ்லீம் காங்கிரசுக்கு இருக்குமென்றும் தெரிவித்தார். 

இந்நிகழ்வில் அதிதிகளாக கிழக்க மாகாண சபை உறுப்பினர்களான சிப்லி பாறூக், அலிசாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் எம்.ஐ.சேகுஅலி, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.ரீ.எம்.அஸ்ரப், கோட்டக் கல்வி அதிகாரி ஏ.எல்.மீராசாஹிப், வாழைச்சேனை முஹைதீன் ஜூம்ஆ பள்ளிவாயல் தலைவரும் கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபைத்தலைவருமான எம்.எச்.எம்.மீரா முகைதீன், பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் எனப்பலரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர். 

கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் கிராமங்களை அபிவிருத்தி செய்யும் திட்டத்தில் ஆராதணை மண்டபத்துடன் ஆறு வகுப்பறைகளைக் கொண்ட மூன்று மாடிகள் அமைப்பதற்கு முதற்கட்டமாக அறுபது இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.






Post a Comment

0 Comments