பாராளுமன்ற உறுப்பினர்கள் 112 பேரின் கையெழுத்துக்களுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை பாராளுமன்ற செயலாளர் நாயகம்
தம்மிக்க தசநாயக்கவிடம் நேற்று சமர்ப்பிக்கப்பட்டது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் 7 பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கையளித்துள்ளனர்.
ஐ.ம.சு.மு.வின் எம்.பிக்களான பந்துல குண
வர்த்தன, மனுஷ நாணயக்கார, ரஞ்சித் சொய்ஸா, ஜனக வக்கும்பர, வீரகுமார திஸா
நாயக்க, வை.ஏ.பத்மசிறி ஆகியோரே நேற்
றைய தினம் பாராளுமன்ற கட்டடத் தொகுதி யில் செயலாளர் தம்மிக்க தசநாயக்கவிடம் பிரேரணையை சமர்ப்பித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகள் இந்த நம்பிக்கையில்லா பிரேர ணையை சமர்ப்பிக்கும் செயற்பாட்டை மேற் கொண்டதுடன் 112பாராளுமன்ற உறுப்பி
னர்களின் கையெழுத்துக்களையும் பெற்றுள்
ளனர். நம்பிக்கையில்லாப் பிரேரணையை தயாரித்து 112 பேரின் கையொப்பங்களைப் பெற்ற ஐ.ம.சு.மு.வினர் நேற்றைய தினம் எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஆலோசனைக் கூட்டத்தின் பின்னரே
பாராளுமன்ற செயலாளரிடம் பிரேரணையை
கையளித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன்தினம் சபாநாயகர் சமல் ராஜபக் ஷவை சந்தித்த
மஹிந்த ஆதரவு அணியினர் நம்பிக்கையில்லா பிரேரணையை கைளிப்பதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.
நேற்று முன்தினம் அம்பாந்தோட்டைக்கு சென்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளான தினேஷ் குணவர்தன, வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான பந்துல குணவர்தன ஆகியோர் இவ்வாறு சமல் ராஜபக்ஷவை சந்தித்து பேசியுள்ளனர்.
எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கை இல்லா பிரேரணையைகொண்டுவந்து விவாதம் நடத்துவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. மஹிந்த ஆதரவு அணியினரே இந்த செயற்பாட்டில் மும்முரமாக செயற்பட்டுவருகின்றனர்.
எனினும் நம்பிக்கையில்லாப் பிரேரணை சிங்கள மொழியில் மட்டுமே சமர்ப்பிக்கப்பட்டதால் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கவேண்டிய தேவை காணப்படுகின்றது.
எனவே உடனடியாக பிரேரணையை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்குவதில் சிக்கல்கள் காணப்படுகின்றன.
எவ்வாறெனினும் அனைத்து செயற்படுகளை மேற்கொண்டு விரைவில் விவாத்திற்கு கொண்டுவரவே ஐ.ம.சு.மு.முயற்சிக்கின்றது.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவிக்கையில்,
மக்களின் ஆதரவு இல்லாத அரசாங்கம் இன்று ஆட்சி நடத்தி வருகின்றது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் எம்மிடம் இருக்கின்ற நிலையில் பெரும்பான்மை இல்லாத ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி நடத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதேபோல் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் விடயத்தில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தியளிக்கவில்லை. பக்கச்சார்பான வகையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. இந்த அரசாங்கம் முழுமையாக பழிவாங்கல் அரசியலை மட்டுமே செய்து வருகின்றது. இதை நாம் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். ஆகவே ஐக்கிய மக்கள் சுதந்திரக் கட்சியின் 113 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைத்து பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவந்துள்ளோம்.
இப்போதே 113 பேர் நம்பிக்கை இல்லா பிரேரணையில் கைச்சாத்திட்டுள்ளனர். அதேபோல் நேற்று இரவு (நேற்று முன்தினம்) ஹம்பாந்தோட்டையில் சபாநாயகரை சந்தித்து இந்த பிரேரணையை சமர்ப்பிப்பதற்கான அனுமதியை பெற்றுள்ளோம். அதற்கு அமைய நேற்று பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்கவிடம் பிரேரணையை கையளித்துள்ளோம்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவையும் பெறுவதற்கான பேச்சுவார்த்தையை எதிர்வரும் தினங்களில் மேற்கொள்ளவுள்ளோம். எனவே எதிர்வரும் பாராளுமன்ற கூட்டம் 9ஆம் திகதி கூடவுள்ளது. அன்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடி இறுதி முடிவை எடுப்போம். பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை விரைவாக விவாதத்துக்கு எடுப்பதே எமது முதல் நோக்கமாகும் என்றார்.
இது தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ்ய நாணயக்கார தெரிவிக்கையில்,
எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் எதிர்க்கட்சி தலைவர் காரியாலயத்தில் இன்று (நேற்று) பிற்பகல் 1 மணி அளவில் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டோம். இதில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களான பந்துல குணவர்தன, ரஞ்சித் சொய்சா, ஜானக வத்கும்புற, வீரவன்ச திசாநாயக்க, பத்மசிறி, ஹிஸ்புல்ல உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இதனையடுத்து பிற்பகல் 2.30 மணி அளவில் நாம் பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் இந்த பிரேரணையை சமர்ப்பித்துள்ளோம். எனினும் நாம் முன்வைத்த பிரேரணை சிங்கள மொழியில் மாத்திரம் இருப்பதன் காரணத்தினால் இவ் பிரேரணை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பின்னர் அதை பாராளுமன்ற ஒழுங்குப் புத்தகத்தில் உள்ளடக்கப்படும். எவ்வாறிருப்பினும் எதிர்வரும் 8ஆம் திகதி பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூடவுள்ளது. இதன்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒட்டுமொத்த தீர்மானத்தையும் எம்மால் பெற்றுக்கொள்ள முடியும் எனக் குறிப்பிட்டார்.
இதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்களினால் சபாநாயகருக்கு கையளிக்கப்பட்டுள்ள பிரேரணையில் தெரிவிக்கப் பட்டிருப்பதாவது,
பாராளுமன்றத்தின் பெரும்பான்மை ஆதரவு இல்லாது ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது.
நாட்டின் பாரிய அளவிலான அபிவிருத்தி திட்டங்களை இடை நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் பல்லாயிரக் கணக்கான தொழிலாளர்கள் வேலை வாய்புகளின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸ் கட்டளைச் சட்டமூலத்தை மீறும் வகையில் அரசியல் பழிவாங்கல்களுக்காக பொலிஸ் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சினை, இலங்கையின் பிரஜை இல்லாத ஒருவரை மத்திய வங்கி ஆளுநராக நியமித்தமை, இலங்கை மதிய வங்கியில் வரலாற்றில் இடம்பெறாத அளவு மோசடிகள் தற்போது இடம்பெற்றுள்ளமை, நாட்டுக்கு எதிரான பிரச்சினைகளின் போது உதவிய சர்வதே நாடுகளுடன் புரிந்துணர்வுடன் செயற்படாது சர்வதேச புரிந்துணர்வை சீர்குலைத்தமை, தனியார் பிரிவுகள் செயலிழக்கும் வகையில் அரச நாணயக் கொள்கையை அமுல்ப்படுத்தியமை. போன்ற காரணங்களினால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீது நம்பிக்கை அற்றுப் போயுள்ளது. எனவே இக் காரணங்களை முன்வைத்து பிரதமருக்கு எதிரான நம்பிக்கை இல்லா பிரேரணையை கொண்டுவருகின்றோம்.


0 Comments