சட்டவிரோதமாக 6 கஞ்சா பீடிக்கட்டுக்களை வைத்திருந்த பருத்தித்துறை கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் இராசகுமார் என்ற குடும்பஸ்தருக்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் 7 மாதக் கடூழியச் சிறைத்தண்டனையும் 10 ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தது.
இரகசியத் தகவலின் அடிப்படையில் கடந்த 4ஆம் திகதி மாலை பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீது பொலிஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினார்கள்.
குற்றம் சாட்டப்பட்டவர் தனது மனைவி பிள்ளைகளைப் பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்து வந்ததுடன் அதனை மாணவர்கள் மத்தியிலும் அறிமுகம் செய்து விற்று வந்துள்ளார். இதன் காரணமாக அவரது குடும்பத்தினர் மனதளவிலும் உடலளவிலும் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் சமர்ப்பித்த குற்றப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட பருத்தித்துறை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராசா எதிரிக்கு எச்சரிக்கையுடன் 7 மாத கடூழிய சிறைத்தண்டனையும் 10ஆயிரம் ரூபா அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


0 Comments